தாகம்

சின்னஞ்சிறு பிள்ளைக் கூட்டம்

அள்ளித் தெளிக்கும்

மா மழையாய்!

அந்தி வரை நீச்சல் அடிக்கும்

அழகிய மீன்களாய்!

 

வறண்ட நிலத்திலும்

வற்றாத ஆறாய் ஒடி

காய்ந்த கருவேலமரங்களையும்

களைப்பாற வைத்தாய்!

ஆடும், மாடும் தாகம் தீர

இளைப்பாற வைத்தாய்!

 

பனிப்பொழுதில்

பட்டாம்பூச்சியின் பரவசத்தில்….

கதிரவனின்

காலை வணக்கத்தில்….

முத்துக்களாய்

முகத்தில் தெளித்த நீரெங்கே?

 

நான்கைந்து மைல்கள்

நடந்து சென்றாலும்

நா இனிக்கும் சுவை நீரின் ஊற்றை

நான் காணவில்லையே!

 

அன்று

அப்பா சொன்னார்…

டேய்…. கிணற்றை எட்டிப் பார்க்காதே!

விழுந்து விடுவாய்!

 

இன்று

நான் சொல்கிறேன்

டேய்… கிணற்றை எட்டிப் பார்க்காதே!

இறந்து விடுவாய்!

 

இன்று “காகம்”

தண்ணீர் குடிக்கக் கல்லை

தூக்கிப்போடுவதில்லை!

 

ஆற்று நீர் கானல் நீராய்ப் போனது….

கிணற்று நீர் வறண்டு போனது….

ஊற்று நீர்  உறிஞ்சப்பட்டது….

மழை நீரோ…. மாயமாய் போனது!

“கேன்” வாட்டர் மட்டும்

கொட்டிக் கொண்டேயிருக்கிறது!

 

எங்கே செல்லுவேன்….

குளிர்ச்சியும் வெப்பமும்

எனக்கென இருந்தேன்!

எனை இருட்டின் வெளிச்சத்தில்

தேடும்பொருளாய் மாற்றினாய்!

 

இயற்கை அன்னையே

தாகம் தீர்த்திடு!

தவறை உணர்த்திடு!

தரணியைக் காத்திடு!

கவிஞர். பழ.தமிழன் சின்னா

புதுக்கோட்டை

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.