தாலாட்டு

அழகிய தாலாட்டு பாடல்கள்.

                              பாடல் 1

முந்தி தவமிருந்து முந்நூறு நாள் சுமந்து

வருந்தி தவமிருந்து மாதம் ஒரு நோன்பிருந்து

இரவும் பகலுமாக எண்ணித் தவமிருந்து

பெற்றெடுத்த தவமணியே கண்ணுறங்கு!

 

 

                                     பாடல் 2

சதுரகிரி மலையேறி சந்தன கட்டைவெட்டி

சேர்த்து செதுக்கி சிலை சித்திரங்கள் உண்டு பண்ணி

வலதுபுறம் தொட்டிலிலே உங்கள் மாமா வால்விசை பெயர் எழுதி

இடதுபுறம் தொட்டிலிலே உங்கள் மாமா இந்திரனார் பெயர் எழுதி

கொஞ்சும் கிளி ரெண்டெழுதி கொண்டு வந்தார் ஆசாரி

கொண்டு வந்த தச்சருக்கு அடிச்ச கை மோதிரமும்

உங்கள் மாமா அள்ளிவிட்டார் சந்தனமும்!

 

 

                             பாடல் 3

என் கனியே உன் தொட்டிலுக்கு யார் யார் காவல்

கங்கா சரஸ்வதியும் கிருபையுள்ள லட்சுமியும்

ஆகாய வாணி அம்மா துணையிருப்பாள்

பூமாதேவி அம்மா பொருந்தியுள்ளாள் காவல்

 

 

                             பாடல் 4

பால்சங்கு பட்டால் பாப்பாவுக்கு

பவளவாய் நோகுமுன்னு பொன்சங்கு

வாங்க போறாக உங்க மாமா

கடைக்கு கடை பார்த்து கல்பதித்த

சங்கு வாங்கி சித்துக்கு சிவப்பு கட்டி

தூருக்கு பச்சை கட்டி வாய்க்கு

வைரம் கட்டி வாங்கி வந்தார் உங்க மாமா

 

 

                             பாடல் 5

ஆடுமாம் தொட்டில் அசையுமாம் பொன்னூஞ்சல்

பொன்னூஞ்சல் மேலிருந்து பாப்பா நீ பொய்யுரக்கம் கொண்டாயோ

பாடுவோம் உனை பாப்பா நீ படுத்துறங்கும் நேரமெல்லாம்

 

 

                             பாடல் 6

ஈட்டி போல் நிலா வடிக்க

உங்கள் மாமா இந்திரனார் பந்தடிக்க

இந்திரனார் பந்தை எடுத்தடிக்க வந்தவளோ

பால்போல் நிலா வடிக்க

உங்கள் மாமா பாண்டியனார் பந்தடிக்க

பாண்டியனார் பந்தை பாப்பா நீ பற‌ந்தடிக்க வந்தவளோ!

 

 

                             பாடல் 7

மதுரைக்கு அதிபதியோ உங்கள் மாமா

மதுரைக் கோட்டுக்கு அதிபதியோ

கோட்டு திறந்து குறிஞ்சி போட்டு உட்கார்ந்து

வந்தவர்க்கு வாக்குரைக்கும்

மந்திரியாம் உங்கள் மாமா!