திருஞானசம்ப‌ந்தர் சமபந்தி போஜன குரு பூஜை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள முகவூரில் ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தன்று திருஞானசம்பந்தர் சமபந்தி போஜன குரு பூஜை விழா நடைபெற்று வருகின்றது.

கோட்டைப்பட்டி சாமி என்ற ஒரு சாது முகவூரில் உள்ள பாண்டி விநாயகர் கோவிலில் நீண்ட காலமாக இருந்து வந்தார்.  அவர் ஒரு வழக்கத்தை தன் ஆயுள் முழுக்க கடைபிடித்து வந்தார்.

அதாவது ஒரு நாளைக்கு ஒரு முறைதான்  உணவு அருந்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.  அதுவும் எப்படி என்றால் ஒரு நாளுக்கு முன்னதாகவே யார் வீட்டில் உணவு அருந்த வேண்டுமோ அந்தக் குடும்பத் தலைவர் அவரிடம் நேரிடையாக வந்து சொல்லி கால் ரூபாய் தட்சிணை கொடுக்க வேண்டும்.

அப்படிச் செய்தால்தான் சாப்பிட வருவார்.  அதன் மூலம் அவர் சேர்த்து வைத்திருந்த பணமோ ரூ.200. கோட்டைப்பட்டி சாமி அந்தப் பணத்தை தர்மகர்த்தா திரு.விநாயகசுந்தரம் அவர்களிடம் கொடுத்து “நான் எண்ணூறு வீடுகளில் உணவு அருந்தி உள்ளேன்.  அவர்கள் எவ்வாறு எனக்கு உணவிட்டு வயிறாரச் செய்தார்களோ அது போல் எனது காலத்திற்குப் பின் மக்களின் பசியார சமபந்தி நடத்த வேண்டும்”  என்று கூறினார்.

அவர் வேண்டுகோளுக்கிணங்கி தர்மகர்த்தா அந்த பணத்தின் மூலம் ஒரு விளை நிலத்தை வாங்கி அந்த நிலத்தில் விளைந்து வரும் தானியத்தின் மூலம் இந்த சமபந்தி குருபூஜை விழா ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தன்று நடத்தப்பட்டு வருகின்றது.

முகவூர் சசிராஜா க.சந்திரசேகர்