திருநீறு – ஒரு பார்வை

மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை எல்லாம் நீறச் செய்து  (வலுவிழக்கச் செய்து) வாழ்வில் உயர்நிலை அடையச் செய்வதால் திருநீறு என்று அழைக்கப்படுகிறது.

திருநீறு நம்மால் விபூதி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானின் அருட்சின்னமாகக் கருதப்படுகிறது. இது எல்லா நலன்களையும் வழங்கக் கூடியது. இது சிவனடியார்களால் அணிந்து கொள்ளப்படும் புனிதப்பொருளாகும்.

திருநீறினை நம் நெற்றியில் அணிந்து கொள்ளும் பொருட்டு இறைவன் நெற்றியை உரோமம் இல்லாமல் படைத்திருப்பதாக சாத்திரங்கள் கூறுகின்றன.

நீறு இல்லாத நெற்றி பாழ், சிவலிங்கம் இல்லாத ஊர் பாழ் என்பது திருநீறு பற்றிய பழமொழி ஆகும்.

திருநீறினை அணியாமல், சிவாலய வழிபாடு செய்யாமல் போகும் பிறவி வீணானது. எனவே திருநீறினை அணிந்து சிவாலய வழிபாடு செய்து வரவேண்டும்.

திருநீறினை பூசிய உடல் சிவாலயத்திற்கு சமமானது.

திருநீறு தத்துவம்

படை கொண்ட அரசரும் இறுதியில் பிடிசாம்பல் தான் என்பது பழமொழி. இந்த உலகத்தில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் இறுதியில் தீயில் வெந்து சாபலாகின்றன.

ஆதலால் அறவழியில் நல்ல சிந்தனையோடு தூய்மையான வாழ்வு வாழ வேண்டும். இதனை உணர்த்தவே நாம் நெற்றியில் திருநீறு அணிகின்றோம்.

இறைவன் என்பவன் அழிவில்லாதவன். அவனின் அருட்கொடையான திருநீறுக்கு அழிவு என்பதே இல்லை. திருநீறானது வேறு பொருளாக மாறுவதும் இல்லை. எனவே திருநீறினை நெற்றியில் அணிந்து கொண்டால் அழிவில்லாத இறைவனை அடைவதற்குரிய வழி கிடைக்கும்.

அழியும் தன்மையுடைய இவ்வுலகில் இறைவனைப் போன்று அழியாத தன்மையுடைய பொருள் ஒன்று உண்டு என்பதைக் காட்டவே திருநீறினை சிவனடியார்கள் அணிகின்றனர்.

 

திருநீறின் வேறு பெயர்கள்

திருநீறானது விபூதி, பஸ்மம், பசிதம், சாரம், இரட்சை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

உலகிற்குத் தேவையான அனைத்து செல்வங்களுடன் அதற்கும் மேலான இறைவனின் அருட்செல்வத்தையும் வழங்குவதால் விபூதி என்று கூறப்படுகிறது.

இது மக்களின் அனைத்து பாவங்களையும் சாம்பலாக்குவதால் பஸ்மம் என்று அழைக்கப்படுகிறது.

இருளாகிய அறியாமையை அகற்றி ஆன்ம ஓளியை நமக்கு கொடுப்பதால் பசிதம் என்று வழங்கப்படுகிறது.

மக்களின் அனைத்து குற்றங்களையும் போக்குவதால் சாரம் என்ற உயர்பொருளில் அழைக்கப்படுகிறது.

துன்பங்களிலிருந்து நம்மைக் காத்து மனத்தெளிவைத் தருவதால் இரட்சை என்று கூறப்படுகிறது.

 

 

திருநீறினைத் தயார் செய்யும் முறை

நல்ல இளமையான ஆரோக்கியமான பசுவின் சாணத்தினை, சாணம் இடும்போது தாமரை இலையில் ஏந்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். இம்முறை பௌடிகம் என்று கூறப்படுகிறது.

இவ்விதம் பெறப்பட்ட சாணத்தை சுத்தமான இடத்தில் வைத்து அதனுடன் பசும் பால், தயிர், நெய், பன்னீர், கோமியம் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து கைகளால் பிசைய வேண்டும்.

பின் உருண்டைகளாக திரட்டி ஆட்காட்டி விரலால் ஒவ்வொரு உருண்டையிலும் சிறிய பள்ளத்தை உண்டாக்க வேண்டும். இப்பள்ளமானது உருண்டை நெருப்பில் நன்கு வெந்து பக்குவமாக எடுக்க வசதியாக இருக்கும். இவ்வுருண்டைகளுக்கு முட்டகம் என்று பெயர்.

பின்னர் பக்கத்திலுள்ள வயல்வெளியில் சம்பா நெற்பதரைக் கொட்டி அதனுள் முட்டகங்களை அடுக்கி வைத்து அவற்றின் மேலும் நெற்பதரை பரப்பி நெருப்பு வைக்க வேண்டும்.

இவ்விதம் வைக்கப்பட்ட நெருப்பானது மூண்டு கொண்டே இருக்கும். ஒரு வாரம் சென்ற பார்த்தால் முட்டகங்கள் எல்லாம் நன்றாக வெந்து வெண்மைநிற உருண்டைகளாக இருக்கும்.

 

திருநீறு தயாரித்தல்
திருநீறு தயாரித்தல்

 

சங்கினைத் தவிர எல்லா பொருளையும் நெருப்பில் இட்டால் கருமையாகி விடும். ஆனால் முட்டகங்கள் வெண்மையாகி விடும்.
வெள்ளையாக இருக்கும் திருநீறு உருண்டைகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனையவற்றை தவிர்த்து விடவும்.

பின் அம்மிக்குழவியை சுத்தம் செய்து ஈரம் போகத் துடைத்து அதனைக் கொண்டு முட்டகங்களை பொடி செய்ய வேண்டும்.
இவ்விதம் பொடி செய்யப்பட்ட திருநீறினை சல்லடையில் இட்டு சலித்து பின் அதனை வெள்ளைத் துணியில் போட்டு சலித்து எடுக்க வேண்டும்.

இதனை பன்னீர் தெளித்து காற்றாட விடவேண்டும். இத்துடன் உலர்ந்த மல்லிகை, பாதிரி, பிச்சி போன்ற மலர்களைப் போட்டு வைக்கவும்.

இத்திருநீறினை மண்பானைகளில் கொட்டி பானையின் வாயினை வெள்ளைத்துணியால் கட்டிவிட வேண்டும். இப்பானையை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும்.

 

 

திருநீறினை எடுத்து வைக்க

முறைப்படி தயார் செய்ய திருநீறினை தினமும் பயன்படுத்த அதனை சம்புடங்களிலும், பட்டுத்துணியினால் ஆன பைகளிலும் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.திருநீறினை எடுக்கும்போது சம்புடங்கள், பட்டுப்பைகள் ஆகியவற்றைக் கவிழ்கக் கூடாது.

முற்காலத்தில் வில்வ மற்றும் சுரைக்குடுவைகள் தினமும் பயன்படுத்தும் திருநீறினை வைக்க பயன்படுத்தப்பட்டன.

 

 

திருநீறினை அணிவதின் நோக்கம்

அதிகப்படியான செல்வம், செல்வாக்கு ஆகியவற்றால் ஏற்படும் ஆணவம், அகங்காரம் போன்றவை பிறருக்கு துன்பங்களை விளைவிக்கும். அவர்களை மனித தன்மையற்றவர்களாக்கி விடும்.

ஆனால் இறுதியில் எல்லோரும் பிடி சாம்பல்தான். எனவே ஒவ்வொருவரும் அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும் அனைவரிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை கூறாமல் கூறுவது திருநீறாகும்.

இது ஆணவமில்லாமல் இறைதத்துவத்தை ஏற்று நடத்துதலைப் போதிக்கிறது.

அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது திருநீறானது நம்மைச் சுற்றிலும் உள்ள நல்ல (பாசிடிவ்) அதிர்வுகளை உள்வாங்கி உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.

மேலும் சூரிய கதிர்களை ஈர்த்து சரியான அளவு உடலுக்குள் செலுத்தும் சக்தியை திருநீறானது பெற்றிருக்கிறது. எனவே உடல் மற்றும் உள்ள மேன்மைக்காக நம் முன்னோர்கள் திருநீறினை அணிந்துள்ளனர்.

 

 

திருநீறினை அணியும் முறை

திருநீறு பூசிய அடியவர்
திருநீறு பூசிய அடியவர்

 

சிவாய நம அல்லது நம சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி கிழக்கு அல்லது வடக்கு திசையைநோக்கி நின்று திருநீறினை அணிய வேண்டும்.

வழிபாட்டிடங்களில் திருநீறினை அணிய இந்தத் திசைகளில் ஒன்றை நோக்கியபடி நின்று அணிவது சிறப்பாகும். இவ்விதமாக நின்று கொண்டு அண்ணாந்த நிலையில் வலக்கை நடுவிரல்கள் மூன்றாலும் எடுத்து நிலத்தில் துளியும் சிந்தாத வண்ணம் அணிய வேண்டும்.

நாம் ஒவ்வொரு முறையும் திருநீறினை அணியும்போது இறைவனாரின் திருவைந்தெழுத்தை கூற வேண்டும். இதனால் திருநீறானது பஞ்சாட்சரம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

 

திருநீறினை அணியும் இடங்கள்

நமது உடலில் மொத்தம் பதினெட்டு இடங்களில் திருநீறானது அணியப்படுகிறது. அவை

1.தலை நடுவில் (உச்சி)

2.நெற்றி

3.மார்பு

4.தொப்புளுக்கு சற்று மேலே

5.இடது தோள்

6.வலது தோள்

7.இடது கையின் நடுவில்

8.வலது கையின் நடுவில்

9.இடதுகை மணிக்கட்டு

10.வலதுகை மணிக்கட்டு

11.இடது இடுப்பு

12.வலது இடுப்பு

13. இடதுகால் நடுப்பாகம்

14.வலதுகால் நடுப்பாகம்

15.முதுகுக்கு கீழ்

16.கழுத்து முழுவதும்

17. வலதுகாதில் ஒருபொட்டு

18.இடது காதில் ஒருபொட்டு.

 

 

திருநீறினை வாங்கும் முறை

சிவனடியார் மட்டுமின்றி மதிக்க தக்கவர்கள் நமக்கு தரும் திருநீறினை வணங்கி இருகைகளாலும் பெற்று அணிந்து கொள்ள வேண்டும். பின் மீண்டும் அவர்களை வணங்கவது சிறந்த பணிவுடைய வணக்கம் ஆகும்.

திருநீறினை அளிப்பவர் நிற்கவும், பெறுபவர் அமர்ந்த நிலையிலும் திருநீறு பெறக்கூடாது.

 

 

திருநீறினை அணியும் காலங்கள்

காலை, நண்பகல், மாலை என எல்லா வேளைகளிலும் திருறீறினை அணிய வேண்டும். காலையில் பல் விளக்கி முகம் கழுவியதும் நீறு அணிந்தபின்தான் ஏதேனும் உண்ண வேண்டும்.

பின்னர் குளித்து முடித்ததும் முதல் வேலையாக உடலில் 18 இடங்களில் திருநீறினை பூசவேண்டும். இவ்விதம் செய்வதால் உடலில் உள்ள அதிகப்படியான நீர் உறிஞ்சப்படும்.

பின்னர் காலையில் சிற்றுண்டிக்கு முன்னரும், பகலுணவுக்கு முன்னரும் திருநீறினை அணிய வேண்டும். மாலையில் கை,கால், முகம் கழுவி விளக்கேற்றும் வேளையில் இறைவனை வணங்கி திருநீறினை அணிய வேண்டும்.

இரவு உணவுக்கு முன்னரும், இரவு உறங்கச் செல்லும் முன்னரும் திருநீறினை அணிய வேண்டும். வீட்டினைவிட்டு வெளியே செல்லும்போது இறைவனை வணங்கி திருநீறினை அணிய வேண்டும்.

 

 

திருநீறினை அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

திருநீறினை அணிவதால் இம்மை, மறுமைகளில் செய்த பாவங்கள் விலகும். உடல் மற்றும் உள்ள புத்துணர்ச்சி ஏற்படும். உடலில் சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி உடலினை நோய்களிலிருந்து திருநீறு பாதுகாக்கிறது.

ஒரு மனிதனுக்கு வாழ்வில் மிக வேண்டியவை ஐந்தாகும். அவை

நம் வாக்கு நல்லவையாகவும், செல்வாக்கு உடையதாகவும் அமைய வேண்டும்.

இனிய உணவு கிடைக்க வேண்டும்.

நல்லோரின் நட்பு குறைவற கிடைக்க வேண்டும்.

உயர்ந்த நற்குணங்கள் நிறைந்திருக்க வேண்டும்.

குறைவில்லாத செல்வம் வேண்டும்.

இவையனைத்தையும் திருநீறினை அணிவதால் கிடைப்பதாக இராமலிங்க அடிகளார் கூறுகிறார்.

 

 

திருநீறு அபிசேகம்

சிவபெருமான், பிள்ளையார், உமையம்மை, முருகன் ஆகிய தெய்வங்களுக்கு திருநீறினால் அபிசேகம் செய்யப்படுகிறது. தொடக்கத்தில் பஞ்சகவ்யமும், முடிவில் திறுநீறும் அபிசேகம் செய்யப்படும்.

 

 

திருநீறின் பெருமை

சைவ குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் மதுரையில் கூன்பாண்டியனுக்கு ஏற்பட்ட வெப்பு நோயினை திருநீற்றுப் பதிகம் பாடி இறையருளால் நீக்கினார்.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலை கட்டும்போது தொழிலாளர்களுக்கு இலை விபூதி வழங்கப்படும். தொழிலாளர்கள் கோவில் வளாகத்தில் உள்ள மணியடியைத் தாண்டி இலையைப் பிரிக்கச் சொல்வர்.

அவ்வாறு அவர்கள் இலையைப் பிரிக்கும்போது அன்று செய்த வேலைக்கு தகுந்த கூலியைப் பெற்றனர் என திருச்செந்தூhர் தலபுராணம் குறிப்பிடுகிறது.

இன்றைக்கும் திருச்செந்தூர் கோவிலில் கொடுக்கப்படும் இலை விபூதி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இதனை பக்தியுடன் அணிபவர்களுக்கு கடுமையான காய்ச்சல், தீராத வயிற்று வலி, தொழுநோய் போன்றவை குணமாகின்றன.

திருநீறின் பெருமைகள், அணிவதன் பயன்கள், அணியும் முறைகள் பற்றி அறிந்த நாமும் திருநீறினை முறைப்படி அணிவோம்.

இறைச்சிந்தனையோடு எல்லோருடனும் மகிழ்வான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

One Reply to “திருநீறு – ஒரு பார்வை”

  1. சைவ சமயம் குறித்த மிக நுட்பமான, அவசியமான விஷயங்கள் ஒரே பதிவில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் இந்த ஆன்மிக பரப்புரை.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.