திருமண வாழ்வு உயர செய்ய வேண்டியது

திருமண வாழ்வு உயர செய்ய வேண்டியது என்ற  இக்கட்டுரை,  மணமக்களுக்கு  என்னும்  நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறிய அறவுரை ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.

திருமண வாழ்வு உயர செய்ய வேண்டியது

மணமக்களின் வாழ்வு உயர வேண்டுமானால், அவர்கள் தங்கள் உள்ளங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். உள்ளம் உயராவிடில், ஒருபோதும் வாழ்வு உயராது.

தாமரைக் குளத்தில் உள்ள பூக்கள் அதிலுள்ள நீரின் அளவைவிட உயர்ந்திருக்கும்.

ஒரு அடி நீர் இருந்தால் பூ ஒரு அடி உயரத்தில் இருக்கும். மூன்றடி தண்ணீர் வந்து விட்டால் பூ மூன்றடியிலும், ஐந்தடி தண்ணீர் வந்துவிட்டால் பூ ஐந்தடி உயரத்திலும் இருக்கும் அக்குளத்தில் 9 அடி தண்ணீர் வந்துவிட்டால், பூவும் ஒன்பதடி உயரத்தில் காட்சி அளிக்கும்.

 

வெள்ளம் உயர உயர மலர் உயரும், உள்ளம் உயர உயர நீ உயர்வாய்‘ என்பது வள்ளுவர் வாக்கு. குறளும் இதுதான்:

‘வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு’

இதிலிருந்து, வாழ்வை உயர்த்திக் கொள்வதற்கு உள்ளத்தை உயர்த்திக் கொள்வது ஒன்றே சிறந்த வழி என்பது புலனாகிறது.

ஆகவே மணமக்கள் தங்கள் உள்ளத்தைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும்.

பறங்கிக்காய் அளவு பூசணிக்காய் அளவு பெரிதாக்க முடியாவிட்டாலும் தேங்காயளவு மாங்காயவேனும் பெரிதாக்கிக் கொள்ளலாம்.

அதுவும் முடியாதவர்கள், நெல்லிக்காய் அளவேனும் கடுக்காய் அளவிலேனும் தங்கள் உள்ளத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். கடுகு உள்ளமும் துவரை உள்ளமும் ஒரு போதும் கூடாது.

 

உள்ளத்தை உயர்த்திக் கொள்ளுவது என்பது பெருமனம் படைப்பது என்றாகும்.

அது தாமும் வாழ்வது பிறரும் வாழ்வது என்பது ஆகும்.

பிறரை வாழவைத்து வாழ்வதே பெருவாழ்வு என்பது வள்ளுவர் கருத்து.

அது இரக்க மனம் படைப்பதும், இரப்பவர்க்கு வழங்குவதும், எளியவர்க்கும் உதவுவதும் ஆகும்.

இதுமட்டுமல்ல,  தாழ்ந்தவரைப் பழிக்காததும், உயர்ந்தவரைத் தாழ்த்தாததும் உள்ளத்தை உயர்த்திக் கொண்டவருடைய செயல்களாகும்.

இவையே நல்வாழ்வுக்கு ஏற்ற வழிகள். இவைகளை மணமக்கள் உள்ளத்தே வைத்து, வாழத் தொடங்குவது நல்லது.

குழந்தை வளர்ப்பு

நம் நாட்டில் குழந்தை வளர்ப்புகளில் அதிகமான கவனிப்பு இல்லை. குறைவாகக் குழந்தைகளைப் பெறுவதே அவர்கள் நன்றாகக் குழந்தைகளை வளர்க்கத் துணை புரியும்.

உணவை அதிகமாகக் கொடுப்பதை விட, சத்தான உணவைக் குறைவாகக் கொடுத்து வளர்ப்பது நல்லது.

அவர்களைப் புழுதியில் புரள விடாமல், கெட்ட பிள்ளைகளோடு சேரவிடாமல், தீய சொற்களைப் பேசவிடாமல், மிகவும் பாதுகாப்பாக வளர்த்தாக வேண்டும்.

பிள்ளைகளின் உடலை வளர்ப்பதைவிட, அறிவை வளர்ப்பதே நலம் பயக்கும். பிள்ளைகள் பள்ளியில் படிப்பதனால் மட்டும் அறிவைப் பெற முடியாது.

பெற்றோர்களும் ஆசிரியர்களாக மாறி அவர்களுக்குக் கல்வியையும், ஒழுக்கத்தையும் நாள்தோறும் கற்பித்து, நல்லவழியில் நடத்தியாக வேண்டும்.

 

குழந்தைகள் தவறு செய்தால், அடித்துத் திருத்துவதை விட அதட்டித் திருத்துவதுதான் நல்லது. 

தவறு செய்த பிள்ளைகளை, ‘ஏன் செய்தாய்?’ என்று கேட்டு மிரட்டுவதைவிட ‘இனிமேல் அப்படிச் செய்யாதே’ என்று அன்போடு கூறி வளர்ப்பது நல்லது.

பெற்ற பிள்ளைகளுக்குப் பொருளைத் தேடி வைப்பதைவிட, புகழையும், பெருமையையும் தேடி வைப்பதே பெற்றோர்களின் கடமையாகும். இதில் மணமக்கள் கருத்தைச் செலுத்துவது நல்லது.

முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்

 

திருமண வாழ்வில் ஒத்த உரிமை அவசியம் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.