திருவிளக்கு – சிறு விளக்கம்

திருவிளக்கு மிகவும் புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருப்பது; இருக்க வேண்டியது.

பூஜைக்கு முன் பூவும் பொட்டும் வைத்து மங்களத்துடன் சுடர் ஏற்றி தினமும் வழிபடத்தக்கதாகும்.

திருவிளக்குகள் இரண்டு பூஜையறையில் சுடர்விட்டுப் பிரகாசிக்குமானால் அங்கே மங்களம் பொங்கி தங்கும்.

திருவிளக்கின் அடிப்பகுதி – சரஸ்வதி – பிரம்ம பாகம்

தண்டுப்பகுதி – லட்சுமி – நாராயண பாகம்

குழிப்பகுதி – பார்வதி – சிவ அம்சம்

திருவிளக்கில் முப்பெரும் தெய்வங்களும் தம் தேவியர்களுடன் வீற்றிருப்பதாகக் கருதப்படுவதால், திருவிளக்கு தூய்மையானதாக வழிபடப்படுகிறது.

திருச்சுடரில் மூன்று தேவியர்களும் ஒருங்கே பிரசன்னமாகி அருள் செய்வதாகக் கருதப்படுகிறது.

சுடர் – லட்சுமி

ஒளி – சரஸ்வதி

வெப்பம் – பார்வதி

எந்த வகையான பூஜையோ மங்கள நிகழ்ச்சியோ திருவிளக்கின் திருச்சுடரை ஏற்றுவதுடன் தொடங்கி விடுகின்றது. அதில் தெய்வம் பிரசன்னமாகிறது.

சுடர் நின்று நிதானமாகப் பொலிவுடன் எரிய வேண்டும். நடுங்கவோ புகையவோ கூடாது. மிகச் சிறியதாகவோ மிகப்பெரியதாகவோ எரியாமல் திருவிளக்கின் அமைப்பு அளவுக்குத் தகுந்தபடி எரிவது அழகு.

சுடரில் புகை தோன்றினாலும் திரியில் கரிபடிந்தாலும் அதற்குக் காரணமான திரியையோ எண்ணையோ உடனே மாற்ற வேண்டும்.

திருவிளக்கு தொடர்ந்து எரிய வேண்டிய சூழ்நிலை இருந்தால் விளக்கில் எண்ணெயைத் தொடர்ந்து விட்டுக் கொண்டிருப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

பூஜை வேலைகள் அத்தனையும் முடிந்து விட்டால் திருவிளக்கின் சுடர்களைக் குளிர வைப்பது அடுத்த பணியாக இருக்க வேண்டும்.

விளக்கின் சுடர் எதிர்பாராத விதமாக தானே அணைவதோ எண்ணெய் இல்லாமல் தானே குளிர்வதோ குற்றமாகும்.

விளக்குச் சுடரில் மகாலட்சுமி நிறைந்து, நிலைத்து, நிற்கின்ற காரணத்தால் அச்சுடரைக் கையால் வீசியோ, வாயல் ஊதியோ குளிர வைப்பது பெரிய குற்றம்.

திரியைப் பின்னுக்கு இழுத்தும், பூவால் சுடரை ஒற்றியும், சுடரின்மேல் பால் துளிகளைத் தெளித்தும் சுடரை குளிர வைப்பது மிகவும் பொருத்தமான முறைகள் ஆகும்.

விளக்கின் சுடர், தெய்வம் குடிக்கொண்டிருக்கும் ஒருகோவில். ஆகவே சுடரை ஏற்றும் போதும், குளிர வைக்கும் போதும் பணிந்து பயபக்தியுடன் செயல்பட வேண்டும்.

ராகு காலத்தில் துர்க்கையின் முன் எலுமிச்சை பழப்பிளவை விளக்குகளாக்கி நெய்யோ எண்ணையோ விட்டு எரிய விடுகின்றனர்.

எலுமிச்சம் பழவிளக்கைப் பயன்படுத்துவது சமீப கால வழக்கம் தான். சாஸ்திரங்களிலோ, பழைய நூல்களிலோ இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. கூடிய வரையில் அகல் விளக்குகளை ஏற்றுவதே நன்மை தரும்.

திருவிளக்கு வழிபாட்டுப் பாடல்

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன் பிறப்பே

ஜோதி மணி விளக்கே ஸ்ரீதேவி பொன்மணியே

அந்தி விளக்கே அலங்கார நாயகியே

காந்தி விளக்கே காமாட்சித் தாயாரே

பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத்திரி போட்டுக்

குளம்போல எண்ணெய் விட்டுக் கோலமுடன்

ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடி விளங்க

வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க

மாளிகையில் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு கொண்டேன்

மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா

சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா

பெட்டி நிறையப் பூஷணங்கள் தாருமம்மா

கொட்டில் நிறைப் பசுமாடு தாருமம்மா

புகழுடம்பைத் தந்து என் பக்கத்தில் நில்லுமம்மா

அல்லும் பகலும் என் அண்டையில் நில்லுமம்மா

சேவித் தெழுந்தேன் தேவி வடிவு கண்டேன்

வஜ்ஜிரக் கீரிடங் கண்டேன் வைடூர்ய மேனி கண்டேன்

முத்து கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்

சவுரிமுடி கண்டேன் தாழைமடல் சூடக் கண்டேன்

பின்னழகு கண்டேன் பிறைபோல் நெற்றி கண்டேன்

சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவு கண்டேன்

கமலத் திருமுகத்தில் கஸ்தூரி பொட்டுக் கண்டேன்

மார்பில் பதக்கம் மின்ன மாலை அசையக் கண்டேன்

தந்தையும் தாயும் நீயே தயவுடன் ரசிப்பாயே

கை வளையல் கலகலவென்ன கணையாழி மின்னக் கண்டேன்

தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்

காலில் சிலம்பு பாவாழி பீலிகண்டேன்

மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு கொண்டேன்

அன்னையே அருள்துணையே அருகிருந்து காத்திடுவாய்

வந்த வினையகற்றி மகா பாக்கியம் தந்திடுவாய்

குடும்பகொடி விளக்கே குற்றங்கள் பொறுத்திடுவாய்

குறைகள் தீர்த்திடுவாய் குடும்பத்தைக் காத்திடுவாய்

கருணைக் கடல் நீயே கற்பக வல்லி நீயே

ஸகல கலா வல்லி நீயே தஞ்சம் உனையடைந்தேன்

தாயே ரசிப்பாயே துக்கமெல்லாம் போக்கி அம்மா

அபிராமவல்லி அம்மா அடைக்கலம் நீயே அம்மா

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.