திருவையாறு பதிகம்

திருவையாறு பதிகம் திருநாவுக்கரசரால் கயிலைக் காட்சியினை திருவையாற்றில் பார்த்தபோது பாடப்பெற்றது.

ஒருமுறை திருநாவுக்கரசர் சிவதரிசனத்தை கயிலைமலையில் காண விரும்பி கயிலையை நோக்கி பயணமானார்.

வழிநெடுகிலும் உள்ள சிவாலயங்களில் தரிசனம் செய்து இறுதியில் இமயமலையை நோக்கிப் பயணமானார். அவர் மிகவும் உடல் சோர்ந்த நிலையில் நடக்க முடியாமல் தவழ்ந்து சென்றார்.

அப்போது இறைவனார் அவர் முன் முனிவர் வடிவத்தில் தோன்றி “மானிட வடிவில் கையலாயம் செல்வது என்பது கடினமான காரியம்” என்றார்.

அதனைக் கேட்ட திருநாவுக்கரசர் “அடியேன் ஐயனின் தரிசனம் காணமால் திரும்பேன்” என்றார்.

அதனைக் கேட்ட முனிவர் ஒரு பொய்கையை உண்டாக்கி “பொய்கையில் மூழ்கினால் கயிலையில் இருக்கும் சிவதரிசனம் பெறலாம்” என்றார்.

முனிவராக வந்தவர் இறைவனே என்பதனை உணர்ந்த திருநாவுக்கரசர் இறைவனின் ஆணைப்படி பொய்கையில் மூழ்கினார். பொய்கையில் மூழ்கிய அப்பர் திருவையாற்றில் அப்பர் குட்டையில் எழுந்தார்.

அப்போது சிவனடியார்கள் கையில் மலர் மற்றும் காவிரி நீரினை எடுத்துக் கொண்டு இறைவனை வணங்க ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அதனைக் கண்ட அப்பர் இறைதரிசனம் பெற அவர்களோடு திருகோவிலுக்கு செல்ல முனைந்தார்.

அப்போது யானை, சேவல், குயில், அன்னம், மயில், அன்றில், பன்றி, மான், நாரை, கிளி, மாடு ஆகியவை இணைகளாக மகிழ்ந்து வருவதைக் கண்டார்.

அவை எல்லாம் சிவன், சக்தி வடிவங்களாக அவரின் அகக்கண்களுக்குத் தெரிந்தன.

இந்த உலகமே சிவசக்தி வடிவம் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

இந்த உலகமே கையிலாயத்தின் வடிவம்தான். உலகைத் தவிர வேறு ஒரு கையிலாயம் தனியாக இல்லை என்பதை அப்பர் உணர்ந்து கொண்டார்.

தன் கண் முன்னால் இருந்த, தான் முன்பு அறியாத ஒன்றை தற்போது அறிந்து கொண்டேன் என்பதனைக் குறிக்கும் விதமாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘கண்டு அறியாதனக் கண்டேன்’ என்று பாடினார்.

திருவையாறு பதிகம் பன்னிரு திருமுறையில் நான்காம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது.

திருவையாறு பதிகம் பாடினால் கணவன் மற்றும் மனைவி சண்டையின்றி ஒற்றுமையுடன் வாழ்வர்.

அப்பரின் இப்பதிகத்தை கேதார கௌரி விரதத்தின் அன்று பாடி அம்மையப்பரின் அருளினைப் பெறலாம்.

 

திருவையாறு பதிகம்

மாதர்ப் பிறைக்கண்ணி யானை

மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர்சுமந்து ஏந்திப்

புகுவார் அவர்பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல்

ஐயாறு அடைகின்ற போது

காதல் மடப்பிடி யோடுங்

களிறு வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

 

போழிளங் கண்ணியின் ஆனைப்

பூந்துகி லாளோடும் பாடி

வாழியம் போற்றிஎன்ற ஏத்தி

வட்டமிட்டு ஆடா வருவேன்

ஆழிவலவன் நின்று ஏத்தும்

ஐயாறு அடைகின்ற போது

கோழி பெடையோடுங் கூடி

குளிர்ந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

 

எரிப்பிறைக் கண்ணியின் ஆனை

ஏந்துஇழை யாளோடும் பாடி

முரித்த இலயங்கள் இட்டு

முகம் மலர்ந்துஆடா வருவேன்

அரித்து ஓழுகும் வெள்ளருவி

ஐயாறு அடைகின்ற போது

வரிக்குயில் பேடையோடு ஆடி

வைகி வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருபாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

 

பிறைஇளம் கண்ணியின் ஆனை

பெய்வளை யாளோடும் பாடித்

துறையிளம் பன்மலர் தூவித்

தோளைக் குளிரத் தொழுவேன்

அறையிளம் பூங்குயில் ஆலும்

ஐயாறு அடைகின்ற போது

சிறைஇளம் பேடையோடு ஆடி

சேவல் வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

 

ஏடுமதி கண்ணியின் ஆனை

ஏந்திழை யாளொடும்பாடிக்

காடொடு நாடு மலையுங்

கைதொழுது ஆடா வருவேன்

ஆடல் அமர்ந்து உறைகின்ற

ஐயாறு அடைகின்ற போது

பேடை மயிலொடுங் கூடிப்

பிணைந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

 

தண்மதிக் கண்ணியின் ஆனை

தையல் நல்லாளோடும் பாடி

உண்மெலி சிந்தையன் ஆகி

உணரா உருகா வருவேன்

அண்ணல் அமர்ந்து உறைகின்ற

ஐயாறு அடைகின்ற போது

வண்ணப் பகன்றிலோடு ஆடி

வைகி வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

 

கடிமதிக் கண்ணியின் ஆனை

காரிகை யாளோடும் பாடி

வடிவோடு வண்ணம் இரண்டும்

வாய்வேண்டுவன சொல்லி வாழ்வேன்

அடியினை ஆர்க்கும் கழலான்

ஐயாறு அடைகின்ற போது

இடிகுரல் அன்னதோர் ஏனம்

இசைந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

 

விரும்பு மதிக்கண்ணி யானை

மெல்லிய லாளேடும் பாடிப்

பெரும்புலர் காலை எழுந்து

பெறுமலர் கொய்யா வருவேன்

அருங்கலம் பொன்மணி உந்தும்

ஐயாறு அடைகின்ற போது

கருங்கலைப் பேடையோடு ஆடிக்

கலந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

 

முற்பிறை கண்ணியின் ஆனை

மொய் குழலாளோடும் பாடி

பற்றிக் கயிறு அறுக்கிலேன்

பாடியும் ஆடா வருவேன்

அற்றுஅருள் பெற்று நின்றாரோ

ஐயாறு அடைகின்ற போது

நற்றுணை பேடையையோடு ஆடி

நாரை வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

 

திங்கள்மதி கண்ணியின் ஆனை

தேமொழி யாளோடும் பாடி

எங்கருள் நல்குங்கொல் எந்தை

எனக்கினி என்னா வருவேன்

அங்குஇளம் மங்கையர் ஆடும்

ஐயாறு அடைகின்ற போது

பைங்கிளிப் பேடையோடு ஆடிப்

பறந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

 

வளர்மதிக் கண்ணியின் ஆனை

வார்குழ லாளோடும் பாடிக்

களவு படாததோர் காலங்

காண்பான் கடைக்கண் நிற்கின்றேன்

அளவு படாதுஓர் அன்போடு

ஐயாறு அடைகின்ற போது

இளமண நாடு தழுவி

ஏறு வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

 

 

திருவையாறு பதிகம் பொருள்

மாதர்ப் பிறைக்கண்ணி யானை

மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர்சுமந்து ஏந்திப்

புகுவார் அவர்பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல்

ஐயாறு அடைகின்ற போது

காதல் மடப்பிடி யோடுங்

களிறு வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

வழிபட பூவினையும், நீரினையும் எடுத்துக்கொண்டும், விருப்பத்துடன் பிறைநிலவை முடிமீது அணிந்துள்ள சிவபெருமானை உமையம்மையோடு இணைத்து பாடிக் கொண்டும் திருகோவிலுக்கு செல்லும் அடியவர்களின் பின்னால் அடியேன் சென்றேன்.

கயிலையில் சிவ தரினத்திற்கு சென்றபோது உடலில் ஏற்பட்ட காயங்கள் நீங்கி, கயிலையிலிருந்து கால்கள் நிலத்தில் படாமல் திருவையாற்றினை அடைந்தேன்.

அப்பொழுது ஆண் மற்றும் பெண் யானைகள் இணைந்து வருவதைக் கண்டேன். அவற்றை சிவனும் சக்தியுமாக என் அகக்கண்ணால் உணர முடிந்தது. இதனால் முன்பு அறியாத சிவனின் திருவடிப் பாக்கியத்தையும், சிவானந்தத்தையும் அடியேன் அறிந்து கொண்டேன்.

 

 

போழிளங் கண்ணியின் ஆனைப்

பூந்துகி லாளோடும் பாடி

வாழியம் போற்றிஎன்ற ஏத்தி

வட்டமிட்டு ஆடா வருவேன்

ஆழிவலவன் நின்று ஏத்தும்

ஐயாறு அடைகின்ற போது

கோழி பெடையோடுங் கூடி

குளிர்ந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

நிலாவின் பிளப்பாகிய பிறையை அணிந்த சிவபெருமானை, பூ வேலைகள் செய்யப்பட்ட மெல்லிய ஆடையை அணிந்த உமையம்மையோடு இணைத்து அவர்களின் திருவடிகள் வாழ்க என்றும், அவர்களுக்கு அடியேனுடைய வணக்கம் எனவும் அடியேன் சுழன்று ஆடிக்கொண்டு வருவேன்.

வலக்கையில் சக்கரத்தைக் கொண்டு திருமால் புகழும் திருவையாற்றினை அடையும்போது சேவலானது கோழியோடு இணைந்து வருவதை அடியேன் கண்டேன்.

அவற்றை சிவனும் சக்தியுமாக என் அகக்கண்ணால் உணர முடிந்தது. இதனால் முன்பு அறியாத சிவனின் திருவடியைப் பாக்கியத்தையும், சிவானந்தத்தையும் அடியேன் அறிந்து கொண்டேன்.

 

 

எரிப்பிறைக் கண்ணியின் ஆனை

ஏந்துஇழை யாளோடும் பாடி

முரித்த இலயங்கள் இட்டு

முகம் மலர்ந்துஆடா வருவேன்

அரித்து ஓழுகும் வெள்ளருவி

ஐயாறு அடைகின்ற போது

வரிக்குயில் பேடையோடு ஆடி

வைகி வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருபாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

பிறை நிலவினை அணிந்த சிவபெருமானை, சிறந்த அணிகளை உடைய உமையம்மையோடு இணைத்துப்பாடி, முகமலர்ச்சியோடு கூத்துக்கு ஏற்ப தாளங்கள் இட்டு அடியேன் ஆடிக் கொண்டு வருவேன்.

மணலை அரித்துக் கொண்டு வெள்ளைநிற அருவியைப் போல ஓடும் காவிரி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் திருவையாறினை அடையும்போது காதல் கீதங்கள் பாடிக் கொண்டு ஆண் மற்றும் பெண் குயில்கள் வருவதைக் கண்டேன்.

அவற்றை சிவனும் சக்தியுமாக என் அகக்கண்ணால் உணர முடிந்தது. இதனால் முன்பு அறியாத சிவனின் திருவடியைப் பாக்கியத்தையும், சிவானந்தத்தையும் அடியேன் அறிந்து கொண்டேன்.

 

 

பிறைஇளம் கண்ணியின் ஆனை

பெய்வளை யாளோடும் பாடித்

துறையிளம் பன்மலர் தூவித்

தோளைக் குளிரத் தொழுவேன்

அறையிளம் பூங்குயில் ஆலும்

ஐயாறு அடைகின்ற போது

சிறைஇளம் பேடையோடு ஆடி

சேவல் வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

பிறைநிலவினை அணிந்துள்ள சிவபெருமானை உமையம்மையோடு சேர்த்துப்பாடியும், நீர்நிலைக்கு அருகில் உள்ள செடிகொடிகளின் பல மலர்களைக் கொண்டு அடியேனின் தோள்கள் மகிழுமாறு அம்மையப்பரை வழிபடுவேன்.

இளமையான குயில்கள் பாடும் திருவையாற்றினை அடையும்போது வெண்மையான சிறகுகளை உடைய ஆண் மற்றும் பெண் அன்னங்கள் இணைந்து வருவதை அடியேன் கண்டேன்.

அவற்றை சிவனும் சக்தியுமாக என் அகக்கண்ணால் உணர முடிந்தது. இதனால் முன்பு அறியாத சிவனின் திருவடியைப் பாக்கியத்தையும், சிவானந்தத்தையும் அடியேன் அறிந்து கொண்டேன்.

 

 

ஏடுமதி கண்ணி யானை

ஏந்திழை யாளொடும்பாடிக்

காடொடு நாடு மலையுங்

கைதொழுது ஆடா வருவேன்

ஆடல் அமர்ந்து உறைகின்ற

ஐயாறு அடைகின்ற போது

பேடை மயிலொடுங் கூடிப்

பிணைந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

இளைத்த பிறையை அணிந்த சிவபிரானுடன் உமையம்மையை இணைத்துப்பாடிக் காடுகளையும், நாடுகளையும் மலைகளையும் கையால் தொழுது ஆடி மகிழ்ந்து அடியேன் வருவேன்.

ஆடலரசனான சிவபெருமான் விரும்பி தங்கியிருக்கும் திருவையாற்றினை அடையும் போது ஆண், பெண் மயில்கள் இணையாக கூடி வருவதைக் கண்டேன்.

அவற்றை சிவனும் சக்தியுமாக என் அகக்கண்ணால் உணர முடிந்தது. இதனால் முன்பு அறியாத சிவனின் திருவடியைப் பாக்கியத்தையும், சிவானந்தத்தையும் அடியேன் அறிந்து கொண்டேன்.

 

 

தண்மதிக் கண்ணியின் ஆனை

தையல் நல்லாளோடும் பாடி

உண்மெலி சிந்தையன் ஆகி

உணரா உருகா வருவேன்

அண்ணல் அமர்ந்து உறைகின்ற

ஐயாறு அடைகின்ற போது

வண்ணப் பகன்றிலோடு ஆடி

வைகி வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

குளிர்ந்த நிலவினை சூடிய சிவபெருமானை பெண்களில் சிறந்தவளான உமையம்மையோடு இணைத்துப்பாடி குழைந்த திருவடியை நினைத்து உணர்ந்து உருகி அடியேன் வருவேன்.

எம்முடைய தலைவனான சிவபெருமான் விரும்பி இருக்கும் திருவையாற்றினை அடையும்போது நல்ல நிறமுடைய ஆண், பெண் அன்றில் பறவைகள் இணைந்து வருவதைக் கண்டேன்.

அவற்றை சிவனும் சக்தியுமாக என் அகக்கண்ணால் உணர முடிந்தது. இதனால் முன்பு அறியாத சிவனின் திருவடியைப் பாக்கியத்தையும், சிவானந்தத்தையும் அடியேன் அறிந்து கொண்டேன்.

 

 

கடிமதிக் கண்ணியின் ஆனை

காரிகை யாளோடும் பாடி

வடிவோடு வண்ணம் இரண்டும்

வாய்வேண்டுவன சொல்லி வாழ்வேன்

அடியினை ஆர்க்கும் கழலான்

ஐயாறு அடைகின்ற போது

இடிகுரல் அன்னதோர் ஏனம்

இசைந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

சிறப்பு மிகுந்த பிறைநிலவினை அணிந்த சிவபெருமானோடு அழகுடைய உமையம்மையை இணைத்துப் பாடி, அம்மையப்பனின் வடிவத்தினை மனதில் இருத்தி அவர்களை வாழ்த்திப் போற்றுவேன்.

தூக்கிய திருவடியை உடைய ஆடலரசன் விரும்பி திருவையாற்றில் இருக்கின்றார். அடியேன் அத்திருவடியை நோக்கி கட்டி இழுக்கப்படுகின்றேன்.

இதனால் இறைவனின் திருவடியைக் காணும் நோக்கில் திருவையாற்றினை அடையும்போது இடிபோன்ற குரலினை உடைய ஆண் மற்றும் பெண் பன்றிகள் இணைந்து வருவதை அடியேன் கண்டேன்.

அவற்றை சிவனும் சக்தியுமாக என் அகக்கண்ணால் உணர முடிந்தது. இதனால் முன்பு அறியாத சிவனின் திருவடியைப் பாக்கியத்தையும், சிவானந்தத்தையும் அடியேன் அறிந்து கொண்டேன்.

 

 

விரும்பு மதிக்கண்ணி யானை

மெல்லிய லாளேடும் பாடிப்

பெரும்புலர் காலை எழுந்து

பெறுமலர் கொய்யா வருவேன்

அருங்கலம் பொன்மணி உந்தும்

ஐயாறு அடைகின்ற போது

கருங்கலைப் பேடையோடு ஆடிக்

கலந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

விருப்பத்துடன் பிறைநிலவினை அணிந்த சிவபெருமானுடன் மென்மையான குணமுடைய உமையம்மையுடன் இணைத்துப் பாடியும், அதிகாலையில் எழுந்து இறைவனுக்கு உகந்த மலர்களைக் அடியேன் கொய்தும் வருவேன்.

சிறந்த அணிகலன்களையும், பொன்னையும், மணியையும் கரையில் சேர்க்கும் காவிரியின் வடகரையில் திருவையாறு அமைந்துள்ளது.

அத்திருவையாற்றினை அடையும்போது பெரிய ஆண் மற்றும் பெண் மான்கள் இணையாக இரண்டும் வருவதைக் கண்டேன்.

அவற்றை சிவனும் சக்தியுமாக என் அகக்கண்ணால் உணர முடிந்தது. இதனால் முன்பு அறியாத சிவனின் திருவடியைப் பாக்கியத்தையும், சிவானந்தத்தையும் அடியேன் அறிந்து கொண்டேன்.

 

 

முற்பிறை கண்ணியின் ஆனை

மொய் குழலாளோடும் பாடி

பற்றிக் கயிறு அறுக்கிலேன்

பாடியும் ஆடா வருவேன்

அற்றுஅருள் பெற்று நின்றாரோ

ஐயாறு அடைகின்ற போது

நற்றுணை பேடையையோடு ஆடி

நாரை வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

அமாவாசையை அடுத்து ஒருகலையினதாய் முற்பட்டுத்தோன்றும் பிறைநிலவினை அணிந்த சிவபெருமானுடன், செறிந்த கூந்தலை உடைய உமையம்மையை இணைத்துப்பாடி, இறைவனின் திருவடிகளைப் பற்றி உலகினோடு உள்ள பாசத்தைப் போக்கிக் கொள்ள முடியாமல் அடியேன் இருக்கின்றேன்.

இறைவனே இறுதி என்று அவரைப் பற்றிப் பாடியும் ஆடியும் அடியார்களுடன் திருவையாற்றினை அடையும்போது சிறந்த நாரையானது தனது துணையுடன் வருவதைக் கண்டேன்.

அவற்றை சிவனும் சக்தியுமாக என் அகக்கண்ணால் உணர முடிந்தது. இதனால் முன்பு அறியாத சிவனின் திருவடியைப் பாக்கியத்தையும், சிவானந்தத்தையும் அடியேன் அறிந்து கொண்டேன்.

 

 

திங்கள்மதி கண்ணியின் ஆனை

தேமொழி யாளோடும் பாடி

எங்கருள் நல்குங்கொல் எந்தை

எனக்கினி என்னா வருவேன்

அங்குஇளம் மங்கையர் ஆடும்

ஐயாறு அடைகின்ற போது

பைங்கிளிப் பேடையோடு ஆடிப்

பறந்து வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

பிறைநிலவினை அணிந்த சிவபெருமானை தேன் போன்ற சொற்களை உடைய உமையம்மையுடன் இணைத்துப் பாடியும், எம்பெருமான் எப்பொழுது அடியேனுக்கு எங்கு அருள் செய்வாரோ என்று எண்ணியும் திருத்தலங்களை அடியேன் வழிபட்டு வருகிறேன்.

இளம்மங்கையர்கள் கூத்தினை நிகழ்த்தும் திருவையாற்றினை அடையும்போது ஆண் மற்றும் பெண் பச்சைக் கிளிகள் இணைந்து பறந்து வருவதைக் கண்டேன்.

அவற்றை சிவனும் சக்தியுமாக என் அகக்கண்ணால் உணர முடிந்தது. இதனால் முன்பு அறியாத சிவனின் திருவடியைப் பாக்கியத்தையும், சிவானந்தத்தையும் அடியேன் அறிந்து கொண்டேன்.

 

 

வளர்மதிக் கண்ணியின் ஆனை

வார்குழ லாளோடும் பாடிக்

களவு படாததோர் காலங்

காண்பான் கடைக்கண் நிற்;கின்றேன்

அளவு படாதுஓர் அன்போடு

ஐயாறு அடைகின்ற போது

இளமண நாடு தழுவி

ஏறு வருவனக் கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதனக் கண்டேன்

வளரும் பிறைநிலவினை அணிந்துள்ள சிவபெருமானை நீண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு இணைத்துப் பாடி, வீணாக கழிக்கப்படாததொரு காலத்தை காணும் பொருட்டுக் கடைவாயிலின்பால் அடியேன் நிற்கின்றேன்.

எல்லையற்ற அன்போடு திருவையாற்றினை அடையும்போது இளமையான காளை மற்றும் பசு இணைந்து வருவதைக் கண்டேன்.

அவற்றை சிவனும் சக்தியுமாக என் அகக்கண்ணால் உணர முடிந்தது. இதனால் முன்பு அறியாத சிவனின் திருவடியைப் பாக்கியத்தையும், சிவானந்தத்தையும் அடியேன் அறிந்து கொண்டேன்.

-திருநாவுக்கரசர்

ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்வு இறைத்தன்மை நிறைந்த உன்னத வாழ்வு என்று போற்றிய அப்பரின் திருவையாறு பதிகம் படித்துப் பாருங்கள். அதன் பொருளை நீங்களே உணர்ந்து பாருங்கள்.

One Reply to “திருவையாறு பதிகம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.