தீபாவளி பரிசு – சிறுகதை

தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட், அந்த காலை நேரத்திலும் பரபரப்புடன் காணப்பட்டது.

பஸ் ஸ்டாப்பில் ஈரோட்டில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினாள் ரேணுகா தன் எட்டு வயது மகன் ரமேசுடன்.

ரேணுகா வேகவேகமாக எதிரே உள்ள பிளாட்பாரத்திற்கு விரைந்தாள். அங்கு கூலி தொழிலாளி ஒருவரை அழைத்து வந்து பஸ்சின் மேல் புறத்தில் உள்ள இரண்டு பார்சல் மூட்டைகளை கீழே இறக்கச் சொன்னாள்.

மூட்டைகளை கீழே இறக்கியதும் இருவருமாக சேர்ந்து அதனை பிடித்து பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்து வைத்தனர்.

ரேணுகா தன் இடுப்பில் வைத்திருந்த சுருக்குப் பையிலிருந்து 50 ரூபாயை எடுத்து கூலித் தொழிலாளிக்கு தந்தாள்.

ரமேசை அதன் அருகே உட்காரச் சொல்லிவிட்டு பிளாட்பாரத்தில் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு தட்டு ரிக்சாவை பேரம் பேசி அழைத்து வந்தாள்.

மூட்டை ரிக்சாவில் ஏற்றப்பட்டு முக்கிய சாலைக்கு விரைய, பின் தொடர்ந்தனர் இருவரும்.

சிறிது நேரத்தில் ரேணுகா சொன்ன அந்த சாலையில் வண்டி நின்றது.

ரேணுகாவும் ரமேசும் வண்டியை நெருங்கியதும் சாலையோரத்தில் இருந்த ஒரு சுவற்றின் அருகே மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டன.

ரேணுகா 200 ரூபாய் கேட்ட ரிக்சாஷாக்காரரிடம் தன் சுருக்குப் பையில் இருந்து 150 ரூபாய் எடுத்து கொடுத்துவிட்டு “வச்சுக்கோங்க அண்ணா” என்று சொல்ல நகர, வண்டி நகர்ந்தது.

தீபாவளி நேரம் என்பதால் அந்த சாலையில் கடைகள் அதிகம் முளைத்திருந்தன. மக்கள் நடமாட்டமும் பெருகத் தொடங்கியது.

ரேணுகா தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து தார்ப்பாய் ஒன்றை எடுத்து சுவற்றின் ஓரமாக தன் கடையை விரித்தாள் .

ரமேசை அருகில் இருந்த டீக்கடையில் டீ வாங்கி வர சொல்லிவிட்டு மூட்டையை பிரித்து அதிலிருந்து குழந்தைகளுக்கு உண்டான டிரஸ், சுடிதார், பேபி செட் பெரியவர்களுக்கு தேவையான சட்டைகள் என்று அனைத்தையும் எடுத்து வெளியே வைத்தாள்.

கடை ரெடியானது.

சற்று நேரத்தில் ரமேஷ் டீயுடன் வந்தான். இருவரும் டீ சாப்பிட்டுவிட்டு வியாபாரம் பார்க்க தொடங்கினார்கள்.

அப்போது ரமேஷ் “ம்மா.. ம்மா.. எனக்கு இந்த வருஷம் தீபாவளிக்கு கோட் சூட் வாங்கி தரியா?” என்றான்.

“அதான் நம்ம கிட்ட இவ்ளோ டிரஸ் இருக்கே. அதுல ஒன்னு எடுத்து போட்டுக்க வேண்டியது தானே.”

எனக்கு அதெல்லாம் வேணாம். வர்ற வழியில ஒரு பெரிய கடையில பொம்மைக்கு கோர்ட் சூட் மாட்டி தொங்க விட்டு இருந்தாங்க. அதே மாதிரி தான் வேணும்.

“உங்க அப்பா எனக்குன்னு விட்டு விட்டுப் போன சொத்தே நீயும், அந்த வீடும் தான். உனக்கு இல்லாமயடா ரமேஷ் கண்ணா. வியாபாரம் நல்ல விதமா முடியட்டும். கடவுள் நமக்கு படி அளக்கட்டும். அம்மா உனக்கு வாங்கி தரேன்.

வீட்டுக்கு போறப்போ கடைக்குப் போயி சாமான், முறுக்கு, அதிரசம், சீடை எல்லாம் வாங்கிட்டு போவோம்.”

” அம்மா எனக்கு சீனி உருண்டை வேணும்.”

“அம்மா உனக்கு செஞ்சு தர்றேன். இப்போ நீ சமத்தா இருக்கணும். அம்மா சொல்வதை எல்லாம் கேட்கணும்” என்றாள் ரேணுகா.

வியாபாரம் ஆரம்பித்தது.

வியாபாரத்தில் நாட்டம் செல்லவில்லை.

ரேணுகாவுக்கு, கணவர் இறந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. அவர் விட்டு சென்றது தான் இந்த வியாபாரம்.

அவர் இறக்கும் பொழுது ரமேஷுக்கு ஐந்து வயது. ரமேஷ்சை ரொம்ப செல்லமாக வளர்த்தார்.

இப்போது ரேணுகாவால் அவனை படிக்க வைக்கவும் முடியவில்லை. அவர்களை கவனிக்கவும் ஆளில்லை. அதனால்தான் தன் கூடவே ரமேசை வைத்திருக்கிறாள்.

வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

இந்த சாலையில் மக்கள் வெள்ளம் அலை பாய தொடங்கியது. எங்கு பார்த்தாலும் தலைகளாகவேத் தெரிந்தன.

“நிக்காத! அங்க கூட்டம் போடாத! யோவ் கடையை ஓரமா போடுயா” என்று மக்கள்களையும் வியாபாரிகளையும் போலீஸ்காரர்கள் அதட்டி மிரட்டி கொண்டு இருந்தார்கள்.

அப்போது ஜீப் ஒன்று வந்து நின்றது.

அதிலிருந்து உயரதிகாரி ஒருவர் இறங்கி மற்ற போலீஸ்காரர்களை எல்லாம் அழைத்து, “ம்… ம்… ம்.. அந்த தரைக் கடை எல்லாம் காலி பண்ண சொல்லு. யாரும் தரைக்கடை போடக்கூடாது. ஏம்பா அந்த வண்டிய நகற்றச் சொல்லு.” என்று கட்டளையிட்டார்.

நின்றிருந்த போலீஸ்காரர்கள் வந்து தரை கடைகளை எல்லாம் காலால் உதைத்தும் தள்ளியும் “தூக்கு தூக்கு, எடு எடு” என்றும் சொல்லியும் அப்புறப்படுத்தினார்கள்.

அதில் ரேணுகாவின் கடையும் தப்பவில்லை. ரேணுகாவால் வியாபாரம் பண்ண முடியவில்லை. அவள் எல்லாவற்றையும் எடுத்து மூட்டை கட்டி வைத்துக் கொண்டு அதன் அருகில் தலையில் கைவைத்தபடி அமர்ந்து விட்டாள்.

ரமேஷ் ஒன்றும் புரியாதவனாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் ரேணுகாவிடம் “எனக்கு எப்ப டிரஸ் வாங்கி தருவ?” என்று சொல்வதை மட்டும் நிறுத்தவில்லை.

அடுத்த ஒருமணி நேரத்தில் அங்கிருந்த பெரும்பாலான தரைக்கடைகள் காலி செய்யப்பட்டிருந்தன.

‘நாளை விடிந்தால் தீபாவளி. என்ன செய்வது? ரமேசை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லையே. ‘ என்று எண்ணியபடி ரேணுகா அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் அங்கேயே இருந்தாள்.

அப்போது அங்கே வந்த போலீஸ் ஒருவர், “என்னம்மா கிளம்பலையா?’ என்று கேட்டார்.

“ஐயா, எங்க போகணும்முன்னு தெரியல. கடந்த மூணு வருசமா தீபாவளிக்கு இந்த இடத்திலதான் துணிக்கடை போட்டு வியாபாரம் பண்ணினோம். அத நம்பி இந்த வருசமும் துணிய எடுத்துட்டு வந்து கடை போட்டேன். இப்ப கடைய எடுக்கச் சொன்னதால என்ன செய்யன்னு தெரியல. துணியெல்லாம் வித்தாதான் எங்களுக்கு தீபாவளி” என்று அழுதாள் ரேணுகா.

ரேணுகாவையும் ரமேஷையும் பார்த்த போலீஸ்காரர் “யம்மா, உனக்கு ஒரு வழி சொல்லுறேன். ஒரு தள்ளு வண்டிய எடுத்திட்டு அதில துணிகளைப் போட்டு தெருத்தெருவா தள்ளிக்கிட்டு போய் வித்துப் பாரு. அது மட்டும்தான் உனக்கு இப்ப இருக்கிற ஒரே வழி.” என்றார்.

“ஐயா, நானும் அப்படித்தான் யோசிச்சேன். ஆனா தீபாவளி நேரத்துல வண்டி எதுவும் கிடைக்காதே. நான் என்ன செய்வேன்? என் பொழப்புல மண்ண அள்ளிப் போட்டிட்டாங்களே” என அழுகையைத் தொடர்ந்தாள்.

வறுமையின் சுவடுகளைத் தன் இளவயதில் பார்த்திருந்த அந்த போலீஸ்காரருக்கு வருத்தமாக இருந்தது. தன்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என யோசித்தார்.

“எனக்குத் தெரிஞ்ச பாய் ஒருத்தர் அடுத்த தெருவுல தள்ளுவண்டில பழக்கடை போடுவார். இன்னைக்கு அவர் கடையக் காணோம். நான் அவர்ட்ட வேணும்னா கேட்டுப் பார்க்குறேன். அந்த தள்ளுவண்டிய வாடகைக்கு பேசி தர்றேன். என்னால அத செஞ்சி தர முடியும்” என்றார் போலீஸ்காரர்.

போலீஸ்காரர் பழக்கடை பாயிடம் பேசினார். அவர் ஏதோ வேலையாக வெளியூர் போயிருப்பதாகவும் தள்ளுவண்டியை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

போலீஸ்காரரைக் கையெடுத்துக் கும்பிட்டாள் ரேணுகா.

“உடனே கிளம்பிப் போய் வண்டிய எடுத்துட்டு வந்து வியாபாரத்தப் பாரும்மா” என்று சொல்லி விட்டு போலீஸ்காரர் கிளம்பி விட்டார்.

ரேணுகா பழக்கடைக்காரர் வீட்டிற்கு சென்றாள். அங்கே இருந்த பழக்கடைக்காரர் மனைவி ரேணுகாவிடம் வண்டியைக் கொடுத்து “தைரியமாகச் செல்லுங்கள்; கடவுள் கைவிட மாட்டார்” என்று சொல்லி அனுப்பினார்.

ரேணுகா துணிகளை அதில் ஏற்றி வண்ணியைத் தள்ளினாள். ரமேசும் சந்தோசமாகத் தள்ளினான்.

இருவரும் அடுத்த நான்கு மணி நேரத்தில் முக்கால்வாசி துணிகளை விற்றிருந்தனர்.

“எம்மா, எனக்குக் கோட்டு”

மீண்டும் ரமேஷ் நச்சரிக்கத் தொடங்கினான்.

“கொஞ்சம் பொறுத்துக்கோடா. இன்னும் கால்வாசி துணிகளை எப்படியாவது அலைஞ்சு வித்துட்டோம்முனா இந்த தீபாவளி நமக்கானது தான்.” என்றாள்.

“நடந்து நடந்து கால் வேற வலிக்குதும்மா”

“சரி, சரி, துணிய ஓரமா தள்ளி வச்சிட்டு இந்த தள்ளுவண்டியில ஏறி உட்காந்துக்கோ. அம்மா தள்ளுறேன்.”

“உனக்கு கை வலிக்குமே”

“என்னோட செல்லத்த கோட், சூட்ல பாக்கப்போறேன்னு நினைக்கிறப்போ கை வலிக்காது. நாம துணிகளைச் சீக்கிரம் வித்திட்டா தீபாவளிக்கு நமக்கு வேணுங்கிறத வாங்கிக்கலாம். அதுக்கு நீ எனக்கு முதல்ல ஒத்துழைப்பு செய்.” என்றாள்.

ரமேசும் தள்ளுவண்டியில் ஏறி அமர்ந்தான். ரேணுகா தள்ளு வண்டியைத் தள்ளினாள். மீண்டும் வியாபாரம் ஆரம்பமானது.

மும்மரமாக வியாபாரத்தில் இறங்கியதில் இருவரும் மதிய உணவினைக்கூட உண்ணவில்லை.

இருட்டத் தொடங்கியது. ரேணுகாவும் கிட்டத்தட்ட எல்லாத் துணிகளையும் விற்றிருந்தாள்.

அப்போது வானத்தில் வெடி ஒன்று சிதறி வெடித்தது. அதனைப் பார்த்ததும் ரமேஷ் கை கொட்டிச் சிரித்தான்.

வியாபாரம் நல்லபடியாக முடிந்து கையில் காசு நிறைந்திருந்ததால் ‘இந்த தீபாவளிக்கு மகனின் முகத்தில் சிரிப்பை நிலைத்திருக்கச் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கை துளிர்விட ரேணுகாவின் மனம் மகிழ்ச்சியால் மத்தாப்பாய் சிதறியது.

மகனுக்குத் தீபாவளி பரிசாகக் கோட்டு வாங்க உதவிய தள்ளுவண்டியை நன்றியுடன் பார்த்தாள் ரேணுகா.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.