துணை – சிறுகதை

மழை பெய்து ஓய்ந்தாற் போல் அமைதியாக இருந்தது வீடு.

சென்ற ஒரு மாத காலமாக மகள், மாப்பிள்ளை, பேரக் குழந்தைகள் என அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலை இன்று காலை முதல் மாறி விட்டிருந்தது.

அவர்களை வைகை எக்ஸ்பிரஸில் சென்னை அனுப்பிவிட்டு வீடு திரும்பிய சுப்பிரமணியன் தளர்ச்சியுடன் சோபாவில் வந்து உட்கார்ந்தார்.

அவர் வந்ததை அறிந்த விசாலாட்சி ‘பூஸ்ட்’ கலந்து எடுத்து வந்து அவரிடம் நீட்டினாள்.

அதை வாங்கி அருகிலிருந்த டீபாய் மீது வைத்த சுப்பிரமணியன் விசாலாட்சியை உற்று நோக்கினார்.

பொழுது விடிந்து, பொழுது சாயும்வரை பாவம் எப்படி உழைக்கிறாள்? மருமகள் இருந்தும் அவளால் இவளுக்கு எவ்வித பயனும் இல்லை.

வேலைக்குச் செல்லும் மருமகளை வைத்துக் கொண்டு, அவளுக்கும் சேர்த்து இவள் தானே செய்ய வேண்டியிருக்கிறது.

நாத்தனார், குழந்தைகளுடன் ஒரு மாதம் இங்கு வந்து தங்கப் போகிறாள் என்பதை அறிந்த மாத்திரத்திலேயே ரமணியை நச்சரித்து, அவனையும் ஒரு மாதம் லீவு எடுக்க வைத்து பிறந்தகம் சென்று விட்டாளே.

தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதுமே ரமணியும், மீனாவும் தனிக்குடித்தனத்தைக் கலைத்து விட்டு இங்கேயே வந்து நிரந்தரமாக வேறு தங்கிவிட்டார்கள்.

பேரனை நர்சரி கூட்டிச் செல்ல, மின் கட்டணம், பால் கட்டணம் செலுத்த, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர, வங்கி செல்ல என்றெல்லாம் என் சேவை அவர்களுக்குத் தேவையாய் இருக்கிறது.

அதற்காகத்தானே இங்கேயே வந்து இருக்கிறார்கள். ஓய்வு பெற்றதும் வந்த கணிசமான தொகையின் மீது வேறு ஒரு கண். மனைவி மீனா யோசனை கூறியதும் இங்கு வந்து கலந்து விட்டான்.

பாவம் அம்மா தனியாக இருந்து கஷ்டப்படுவாளே, மனைவியும் கூடமாட ஒத்தாசைக்கு இருக்கட்டுமே என்று அவனுக்கு தோன்றவில்லை.

விசாலாட்சி என்ன சுகத்தைக் கண்டாள்? மகனுக்கும், மகளுக்கும் திருமணமானது முதல் ஒன்று மாற்றி ஒன்று செலவுகளும் பொறுப்புகளும் வந்து அலைக்கழித்துக் கொண்டு இருக்கின்றன.

“என்ன யோசனை? பூஸ்ட் ஆறிண்டிருக்கு. அதைக் குடிங்கோ” என்றாள் விசாலாட்சி.

விசாலாட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு சிந்தனையிலிருந்து சுப்பிரமணியன் அவள் ஞாபகப்படுத்தியதும் சிந்தனையிலிருந்து விடுபட்டு டீபாயிலிருந்து பானத்தை எடுத்து அருந்த ஆரம்பித்தார்.

ஒரு மாதத்திற்குள் வீடு அடியோடு மாறிப் போயிருந்தது. பேரக் குழந்தைகளின் லூட்டியில் பொருட்கள் யாவும் தாறுமாறாகக் கிடந்தன.

வருடத்திற்கு ஒரு முறைதான் பெண் பிறந்தகம் வந்து தாய், தந்தையோடு இருக்கிறாள் என்றாலும் தாய்க்கு ஒத்தாசையாக இருக்கக்கூடாதா என்ன?

மகன், மகள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். வேளா வேளைக்கு நாவுக்கு ருசியான டிபன், சாப்பாடு. வெளியே சென்று சினிமா, பொருட்காட்சி எனச் சுற்றுவது, வீட்டிலிருக்கும் நேரத்தில் டீவி பார்ப்பது. இவைகள் தவிர, எதுவும் செய்யத் தோன்றாது அவர்களுக்கு.

வீடு பெருக்குவதிலிருந்து, சமையல் பாத்திரங்கள் கழுவி, சமையல் செய்து, துணி துவைப்பது வரை அனைத்துமே விசாலாட்சிதான்.

சுப்பிரமணிக்கு நினைக்க நினைக்க மனம் வலித்தது.

“விசாலாட்சி உள்ளே என்ன பண்ணின்டிருக்கே?”

“காலம்பற காயத்ரிக்கு வழிக்குக் கொண்டு போக‌ செஞ்ச டிபன் பாத்திரங்கள் எல்லாம் அப்படி அப்படியே கிடக்கு. அதையெல்லாம் தேய்ச்சிக்கிட்டுருக்கேன். உங்களுக்கு என்ன செய்யணும் சொல்லுங்கோ. மிளகு ரசம் பண்ணி, வாடாம் பொரிச்சுடட்டுமா?”

அப்பாவித்தனமாக பதில் சொன்னாள் விசாலாட்சி.

“மீனாவும், ரமணியும் நாளைக்குக் காலையில தானே வர்றாங்க?” சுப்பிரமணியன் மீண்டும் கேட்டார்.

“ஆமாம்.”

“சமையல் எல்லாம் வேண்டாம் விசாலாட்சி. கொஞ்சம் டிரஸ்களை சூட்கேஸ்ல எடுத்து வச்சுக்கோ. வீட்டைப் பூட்டி சாவியை மாடிப் போர்ஷனில் கொடுத்துவிட்டு நாம கிளம்பறோம்.”

“எங்கேங்க?”

“எங்கேயோ போறோம். காயத்ரி ஒரு மாசம் இங்கு வந்து இருந்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் ஆசுவாசப் படுத்திக்கிட்டுப் போயிட்டா.

ரமணியும், மனைவி குழந்தைகளோட துணையும், குடும்பமும்தான் முக்கியம்னு இருக்கிறப்போ, எனக்கு மட்டும் என்னோட துணை முக்கியமில்லையா?.

நாளைக்குக் காலையில் ரமணியும், மீனாவும் வந்துட்டாங்கன்னா திரும்பவும் அதே பல்லவிதான். காலையிலே ஆரம்பிச்சா, படுக்கைக்குப் போகிற வரை சரியா இருக்கும்.

நீ இப்படி உழைச்சு, உழைச்சு தேய்ஞ்சுக்கிட்டே போய் படுக்கையிலே விழுந்துட்டா எனக்கு யார் இருக்கா விசாலாட்சி? நீ இல்லாம நான் எப்படிம்மா இருக்கிறது? உனக்கு ரிலாக்ஸ் வேண்டாமா?

இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு நீ எதைப்பற்றியும் கவலைப்படக் கூடாது. உனக்கு வாழ்க்கையிலே சந்தோஷம், நிம்மதி வேண்டாமா?

உன் சந்தோஷம்தான் என் சந்தோஷம் விசாலாட்சி. ஆயிரம் நண்பர்கள் இருக்காங்க. நிம்மதியா இருந்துட்டு வருவோம். கிளம்பு.” என்றார்.

கண்களில் நீர் மல்கியது விசாலாட்சிக்கு. சுப்பிரமணியன் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

விசாலாட்சியின் கேசத்தை வாஞ்சையுடன் கோதினார் சுப்பிரமணியன்.

அந்த சுகத்திலேயே மன அசதியும், உடல் அசதியும் பஞ்சாகப் பறந்து போய்க் கொண்டிருப்பதை உணர்ந்தாள் விசாலாட்சி.

This image has an empty alt attribute; its file name is RajaGopal.webp

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.