தொலைந்து கிடைத்த லேப்டாப்

வாழ்க்கையில் எல்லாமே அனுபவம்தான் என்பதை, தொலைந்து கிடைத்த லேப்டாப் கதை விளக்குகிறது.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு, அவசர அவசரமாக வந்தாள் நிலா.

பேருந்தில் ஏறியதும்  தன்னிடமிருந்த லேப்டாப் பையினை, தன் தலைக்கு மேலே பொருட்கள் வைக்கும் இடத்தில் வைத்து விட்டு, பர்ஸினை மடியில் வைத்துக் கொண்டாள்.

பேருந்தில் மொத்தத்தில் ஐந்தாறு நபர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

தனக்கு வந்த கைபேசி அழைப்பினை ஏற்றுப் பேச ஆரம்பித்தாள்.

 

அப்போது கண் தெரியாத ஒரு ஆள், உதவியாள் ஒருவனுடன் பேருந்தில் ஏறி, ஒவ்வொருவரிடமும் பிச்சை கேட்டான்.

பிச்சை கேட்டவன் நிலாவைக் கடந்ததும், உள்ளுணர்வு காரணமாக லேப்டாப் பேக்கை நிமிர்ந்து பார்த்தபோது, அது அங்கு இல்லை.

“என்னுடைய லேப்டாப்…” என்று கத்திக் கொண்டே, அதிர்ச்சியில் பேருந்தை விட்டு இறங்கினாள்.

லேப்டாப் பையுடன் யாரும் செல்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்த போதும், ஒருவரையும் அடையாளம் காண இயலவில்லை.

பிளாட்பார்ம்மில் அமர்ந்திருந்த பஸ் கண்டக்டர், டிரைவர்கள் சிலர் “போலீஸ் ஸ்டேசன் போம்மா” என்றனர்.

“எங்கே இருக்கு போலீஸ் ஸ்டேசன்?”

“மாட்டுதாவணியின் முன்பக்கத்தில இருக்கு” என்றபடி, ஸ்டேசன் இருக்கும் திசையை நோக்கி கையைக் காட்டினர்.

போலீஸ் ஸ்டேசன்

இதுவரை போலீஸ் ஸ்டேசன் சென்றிராத நிலா, அவசரமாக ஸ்டேசன் நோக்கி ஓடினாள். ஸ்டேசனில் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் மட்டுமே இருந்தார். நடந்தவைகளை பெண் போலீசிடம் கூறினாள்.

பெண் போலீஸ், சப் இன்ஸ்பெக்டரிடம் நடந்தவைகளை போனில் கூறுமாறு, சப்இன்ஸ்பெக்டருக்கு தன்னுடைய போனில் இருந்து டயல் செய்து கொடுத்தார்.

சப் இன்ஸ்பெக்டரிடம் நடந்தவைகளைக் கூறியதும், “பையை எடுத்துட்டு, அவன் எந்த பக்கம் ஓடினான்? நான் பஸ் ஸ்டாண்டு வாசல்ல நிக்றேன். அவனுடைய அடையாளத்தைச் சொல்லுங்க” என்றார்.

“பிச்சை எடுப்பவன் கைலி கட்டியிருந்தான். அவன்கூட வந்தவன் பேண்ட், சர்ட் போட்டுருந்தான்.”

“வேறு ஏதும் அடையாளம் சொல்லுங்க. அவன் முகத்த பார்த்தா கண்டுபிடிச்சிடுவீங்களா?”

“இல்ல, அவனோட முகம் எனக்கு ஞாபகம் இல்ல. நான் போன்ல பேசிக்கிட்டு இருந்ததால சரியா கவனிக்கல.”

“சரி, இருங்க வாரேன்” என்று போனை கட் பண்ணி விட்டார் சப்இன்ஸ்பெக்டர்.

 

நேரில் வந்த சப் இன்ஸ்பெக்டரிடம் தன்னை அறிமுகம் செய்து விட்டு, நடந்தவைகளை மீண்டும் கூறினாள் நிலா.

“எம்மா, நல்லா கேட்டுக்கங்க.  இருக்கிறதுலயே ரொம்ப களவாணிப் பயலுக இருக்கிற இடம், இந்த‌ மாட்டுதாவணி. நீங்கதான் கவனமா இருக்கணும்.

இங்க வாங்க. அந்தா நிக்கானே, அவன மாதிரியா இருந்தான் அப்ப வந்த பிச்சைக்காரன்?” என்றபடி ஒரு கையில் வெள்ளை நிற குச்சியையும், மறுகையில் தட்டையும் நீட்டியபடி இருந்த ஒருவனைக் காண்பித்தார்.

“இல்லை”

“யம்மா, இந்த பயலுக எல்லாம் பெரிய நெட்வொர்க். நாம தான் ஜாக்கிரதையா நம்ம பொருட்களையும், குழந்தைகளையும் பார்த்துக்கணும். இல்லனா நஷ்டம் நமக்குத்தான்” என்றார்.

நிலாவுக்கு மிகவும் அவமானமாக இருந்தது.

 

அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு போன் செய்து, நிலாவைப் பற்றியும் நடந்தவைகளையும் கூறிவிட்டு, போலீசார் ஒருவரை அங்கு வருமாறு சப் இன்ஸ்பெக்டர் கூறினார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்து சென்ற போலீஸ்காரர்கள் ஒவ்வொருவரும், நிலாவிடம் நடந்தவைகளைக் கூறுமாறுக் கேட்டனர்.

பின்னர் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டியது உங்களுடைய கடமை என்று, நிலாவிடம் வலியுறுத்திச் சென்றனர்.

இறுதியாக அண்ணாநகர் காவல் நிலையத்திலிருந்து ஏட்டு ஒருவர் வந்தார்.

அவரும் நிலாவிடம் நடந்தவைகளைக் கேட்டுக் கொண்டு, சம்பவ இடத்திற்குச் சென்று விசாரிப்போம் என்று கூறி நிலாவை பேருந்து நின்ற இடத்திற்கு அழைத்து சென்றார்.

அங்கே பெண் போலீஸ் கான்ஸ்டபிள் லதாவைச் சந்தித்தாள் நிலா.

லதாவிடமும் நடந்தவைகளைக் கூறியதும், அங்கிருந்த டயம் கீப்பர் லதாவிடம் “இவங்க பஸ்ல ஏறி இரண்டு நிமிசத்துல, லேப்டாப்பக் காணும்முன்னு கத்திட்டு இறங்குனாங்க. நாங்க தான் ஸ்டேசனுக்குப் போகச் சொன்னோம்.” என்றார்.

 

நிலாவை அழைத்துக் கொண்டு, கேமரா பதிவுகளைப் பார்ப்போம் என்று, இரண்டு காவலர்களும் கேமிரா ரூம்மிற்குச் சென்றனர்.

பேருந்து நின்ற இடம், நேரம் ஆகியவற்றைக் கூறியதும், காமிரா ரூமிலிருந்தவர் திரையில் காட்சிகளை ஓடவிட்டார்.

டிப்டாப்பாக ஒருவன் பேருந்திலிருந்து லேப்டாப் பையை எடுத்துக் கொண்டு, மெதுவாக கீழே இறங்கி, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, நிதானமாக பையைச் சுமந்து செல்வதைப் பார்த்தனர்.

அதனைக் கண்டதும் நிலா, “ஐயோ! என்னோட லேப்டாப் பேக்” என்று அழுதபடி மயங்கிச் சரிந்தாள்.

தண்ணீர் தெளித்து நிலாவை எழுப்பி, கேமரா காட்சிகளை அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பிவிட்டதாகவும், அண்ணா நகர் காவல் நிலையம் சென்று புகார் செய்யும்படிம் லதா கூறினார்.

அண்ணா நகர் காவல் நிலையம்

அப்போதுதான் தன்னுடன் பணிபுரியும் ரவியின் ஞாபகம் நிலாவிற்கு வந்தது. ரவியைப் பற்றி அவ்வளவாக நிலாவிற்கு தெரியாது.

ரவியின் சொந்த ஊர் மதுரையாதலால் தனக்கு உதவக்கூடும் என்று எண்ணி, ரவிக்கு போன் செய்து விவரங்களைக் கூறினாள்.

ரவியும் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு தான் வந்து விடுவதாக கூறி, நிலாவையும் காவல் நிலையம் வரச்சொன்னார்.

காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், காவலர்களிடம் பேசவும் ரவி நிலாவிற்கு உதவினார். போலீசாரிடம் சி.எஸ்.ஆர் (சமூக சேவை பதிவு) நகலினைப் பெற்றுக் கொண்டு ரவிக்கு நன்றி கூறிவிடை பெற்றாள் நிலா.

தொலைந்து கிடைத்த லேப்டாப்

இரண்டு நாட்கள் கழித்து நிலாவிற்கு கைபேசி அழைப்பு வந்தது.

“ஹலோ, நான் அண்ணா நகர் கிரைம் இன்ஸ்பெக்டர் பேசுறேன். நீங்க லேப்டாப் காணும்ன்னு புகார் கொடுத்த நிலா தானே?”

“ஆமாம் சார்.”

“உங்க லேப்டாப் என்ன கம்பெனி? எப்படி இருக்கும்?”

“ஏசர் லேப்டாப். கருப்புக் கலர்.”

“நாங்க ஒரு ஏசர் லேப்டாப்ப கண்டுபிடிச்சிருக்கோம். நீங்க வந்து உங்களோடதான்னு அடையாளம் காட்டுங்க. இதுவிசயமா ஒருத்தன ரிமாண்ட் பண்ணிருக்கேன். இப்ப வர்ரீங்களா?”

“இல்ல சார், நாளைக்கு காலைல வர்றேன்.”

“காலைல எத்தன மணிக்கு வருவீங்க?.”

“பதினோரு மணிக்கு வர்றேன்.”

“சரி வாங்க.”

 

மறுநாள் காலையில் பதினோரு மணிக்கு போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றாள் நிலா. ரவியும் அதே நேரத்தில் அங்கு வந்து விட்டார்.

லேப்டாப்பை நிலாவிடம் காண்பித்ததும், அவளுடையது என்று அடையாளம் காட்டினாள்.

“ஃஎப்.ஐ.ஆர் போட்டாச்சு. கோர்ட்ல நீங்க லேப்டாப்ப வாங்கிக்கங்க.” என்றார் இன்ஸ்பெக்டர்.

அடுத்ததாக‌, கைபேசியில் ஐம்பது வயதில் ஒருநபரின் போட்டோவை காண்பித்து “இவன தெரியுதா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

இல்லை என்பது போல் தலையசைத்தாள் நிலா.

“இவன்தான் உங்க லேப்டாப்ப திருடினவன்.”

 

“எப்படி சார், இவனப் பிடிச்சீங்க?” என்றார் ரவி

“நாங்க சந்தேகப்படுற ஒவ்வொருத்தரையும் பிடிச்சு விசாரிக்க ஆரம்பிச்சோம். அதுல இவனும் ஒருத்தன். இவன விசாரிச்சப்ப, இந்த லேப்டாப்பும் இன்ன சில பொருட்களும் மாட்டுச்சு.

இந்த லேப்டாப்ப ஊருக்கு வெளியே, முள்ளுக் காட்டுக்குள்ள ஒளிச்சு வச்சிருந்தான்.

ரெண்டு நாளு அடிச்சு விசாரிச்சதுலதான், லேப்டாப் பத்தின விவரம் சொன்னான். அத எடுக்க முள்ளு காட்ல ரொம்பவே கஷ்டப்பட்டுட்டோம்.”

“லேப்டாப் மட்டும்தான் கிடைச்சதா? லேப்டாப் பையில சார்ஜர், ஐ.டி.கார்டு, ஆபீஸ் சாவி இருந்துச்சு” என்றாள் நிலா.

“அந்த பைய எடுத்திட்டு வாங்க” என்று கான்ஸ்டபிள் ஒருவரிடம் கூறினார் இன்ஸ்பெக்டர்.

ஜவுளிக்கடையில கொடுக்கும் டிராவல்பேக் ஒன்றை எடுத்து, அதனை கீழே தட்ட, சில துணிகளும், நீளமான சாவிகளும் கீழே விழுந்தன.

“யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி, இந்த துணிகளுக்கு இடையில வச்சிருந்தான்.” என்றார் கான்ஸ்டபிள்.

“யம்மா, உங்க லேப்டாப் கிடச்சதே அதிசயம். நீங்க என்னவோ கேக்குறீங்க.” என்றார் ஏட்டு.

அங்கிருந்த போலீசார் எல்லோரும் ஏட்டு சொன்னதையே திரும்பச் சொன்னனர்.

“எங்க ஏட்டு ஒருத்தர் கோர்ட்ல இருப்பார். அவரோட பேரு ரகு. அவரோட நம்பர் 9XXXXXXXXX. அவர்ட மத்தத பேசிக்கங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.

தனக்கு மீண்டும் கிடைக்காது என்று எண்ணிய லேப்டாப்பினை, இரண்டே நாட்களில் கண்டுபிடித்துத் தந்த தமிழக காவல் துறையினை, ஸ்காட்லாந்து யார்டு காவல் துறையோடு ஒப்பிடுவது சரிதான் என்று நினைத்துக் கொண்டாள் நிலா.

“ரொம்ப தேங்ஸ் சார்.” என்றபடி ரவியும், நிலாவும் வெளியேறினர்.

கோர்ட்

தொலைந்து கிடைத்த லேப்டாப், எப்போது தன்னிடம் ஒப்படைக்கப்படும் என்று நினைத்தாள் நிலா.

கோர்ட்டில் ரவிக்குத் தெரிந்த வக்கீல் ஒருவர் இருந்தார்.

அவரிடம் நடந்தவைகளைக் கூறியதும் “சரி ரவி, பெட்டிசன கொடுப்போம். மேடம் நீங்க 1/2 மணி நேரம் இருந்து, பெட்டிசனுல்ல கையெழுத்து போடுங்க.

எனக்கு ஒருகேஸ் வருது. நான் டைப் பண்ணுறவங்க கிட்ட விவரம் சொல்லிடுறேன்.” என்று நிலாவிடம் பெட்டிசனுக்கான விவரங்கள் அனைத்தையும் குறித்து வாங்கிக் கொண்டார்.

ஒருமணி நேரம் கழித்து வந்த வக்கீல் “டைப் பண்ணியாச்சு, பிரின்ட் எடுக்கப் போகையில கரண்ட் கட்டாயிருச்சு. டைப்பிஸ்ட் இன்னைக்கு மதியம் லீவு.

நீங்க நாளைக்கு 10.15க்கு இங்க வந்து கையெழுத்து போட்டா, 10.30க்கு உள்ளே கொடுத்துரலாம். நாளை மறுநாள் விசாரணைக்கு வந்து, அன்னைக்கு லேப்டாப்ப வாங்கிக்கலாம்.” என்றார்.

 

மறுநாள் காலையில் 10 மணிக்கு ரவி நிலாவிற்கு போன் செய்து “மேடம் நான் கோர்ட்டுக்கு வந்துட்டேன். நீங்க எங்க இருக்கீங்க?” என்றார்.

“சார், பத்து நிமிசத்துல வந்துருவேன்” என்றாள் நிலா. டிராபிக்கில் மாட்டிக் கொண்டதால் நிலா 10.25க்குதான் கோர்ட்டுக்கு சென்றாள்.

ரவி நிலாவிடம் “10.30க்கு ஜட்ஜ் அவர் சீட்ல உட்கார்ரதுக்கு முன்னாடியே, பெட்டிசன உள்ளே கொடுக்கனும். அட்வகேட் உங்களுக்காக வெயிட் பண்ணிகிட்டு இருக்கார். வாங்க போவோம்” என்றார். இருவரும் வக்கீலின் இருப்பிடத்தை அடைந்தனர்.

“மேடம், சீக்கிரம் பெட்டிசனப் படிச்சுப் பார்த்துட்டு கையெழுத்து போடுங்க. ஜட்ஜ் வந்துட்டாரான்னு பார்ப்போம்” என்றபடி பெட்டிசனை நிலாவிடம் நீட்டினார்.

நிலாவும் பெட்டிசனைப் படித்துப் பார்த்து விட்டு, கையெழுத்திட்டு வக்கீலிடம் கொடுத்தாள். உடனே வக்கீல் அதனை எடுத்துக் கொண்டு கோர்ட் அலுவலத்திற்கு விரைந்தார்.

 

ஐந்து நிமிடங்களில் வெளியே வந்து, “இன்னைக்கு பெட்டிசன உள்ளே குடுக்குற டைம் முடிச்சு போயிருச்சு. ஜட்ஜ் சீட்டுக்கு வந்துட்டார். நாளைக்கு வெள்ளிக்கிழமை. நாளைக்குத்தான் உள்ளே கொடுக்க முடியும். திங்கள் கிழமை கேஸ் வர்ற மாதிரி பார்த்துக்குவோம்.” என்றார்.

நிலா அவரிடம் “சார், நான் அலுவலக விசயமா, திங்கள் கிழமை சென்னை போக வேண்டியிருக்கு. ஆதனால செவ்வாய் கிழமைதான் தோதா இருக்கும்” என்றாள்.

“சரி செவ்வாய் கிழமை கேஸ் வர்ற மாதிரி ஏற்பாடு பன்னிருவோம். நீங்கள் செவ்வாய் கிழமை மதியம் 2.00மணிக்கு இங்க வாங்க.

உங்களோட ஆதார் கார்ட் ஒரிஜினல் கொண்டு வாங்க. ரவி, இவங்களுக்கு ஜாமீன் போட ஒருத்தர் ஆதார் கார்ட்டோட வேணும்.’ என்று வக்கீல் சொன்னார்.

“சார், நான் என்னோட ஆதார் கார்ட செவ்வாய்கிழமை கொண்டு வந்து, இவங்களுக்கு ஜாமீன் போடுறேன்” என்றார் ரவி.

 

“சரி ரவி, நாளைக்கு உங்க போட்டோ, ஆதார் கார்ட் ஜெராக்ஸ் கொண்டு வந்து என்கிட்ட குடுங்க. நான் ஜாமீன் பேப்பர் ரெடி பண்ணிரேன். நீங்க செவ்வாய் கிழமை வந்து அதுல கையெழுத்து போடுங்க” என்றார்.

செவ்வாய் கிழமை கோர்ட்டில் கேஸ் வருவதை ரவி வக்கீலிடம் உறுதிப்படுத்தி, திங்கள் கிழமை மாலையில் நிலாவிடம் தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை மதியம் 1.30 மணிக்கு நிலா கோர்ட்டுக்கு வந்தாள். 1.40-க்கு ரவியும் கோர்ட்டுக்கு வந்தார்.

“எப்ப மேடம் வந்தீங்க?”

“இப்ப பத்து நிமிசத்துக்கு முன்னாலதான் வந்தேன்.”

“பரவாயில்லையே, 1/2மணி நேரம் முன்னதாகவே வந்துட்டீங்க. வாங்க அட்வகேட்ட பாப்போம்.”

இருவரும் வக்கீலின் அறையை அடைந்தனர். ரவி ஜாமீன் பேப்பரில் கையெழுத்திட்டு வக்கீலிடம் கொடுத்தார்.

வழக்கு விசாரணை

சரியாக இரண்டு மணிக்கு ஜட்ஜ் அவருடைய சீட்டில் அமர்ந்தார். வழக்கிற்காக சுமார் 50 பேர் 6-ம்நம்பர் கோர்ட் வாசலில் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.

மூன்றாவது வழக்காக நிலாவின் வழக்கு வந்தது.

“நிலா…, நிலா…” என்று அழைத்தனர்.

நிலா ஜட்ஜ்க்கு முன்னால் சென்று வணக்கம் தெரிவித்தாள்.

“நீங்கதான் நிலாவா? ஆதார் கார்ட் கொடுங்க”

ஆதார் கார்டை வாங்கி சரிபார்த்தனர்.

“என்ன கேஸ்?” என்றார் ஜட்ஜ்.

“லேப்டாப் சார்” என்றார் வக்கீல்.

“ஜாமீன் இருக்கா?”

“இருக்கு சார்” ஜாமீன் பேப்பரைக் கொடுத்தார் வக்கீல். ரவி முன்னால் வந்து நின்றார்.

“உங்க பேர்?”

“ரவி”

“ஆதார் கார்ட்”

ரவியின் ஆதார் கார்டையும் சரி பார்த்தனர்.

“உங்களுக்கும், இவங்களுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க ஏன் ஜாமீன் கொடுக்கீங்க?”

“என்னோட வேலை பார்க்கிறாங்க.” என்றார் ரவி

“சரிம்மா, உங்க லேப்டாப்ப வாங்கிட்டு போங்க. ஆனா நாங்க விசாரணைக்காக‌ கேக்குறப்ப, இங்க லேப்டாப்ப கொண்டு வரணும்.” என்றார் ஜட்ஜ்.

கோர்ட் அலுவலகத்தில் நிலாவும், ரவியும் கையெழுத்திட்டனர். லேப்டாப் நிலாவிடம் வழங்கப்பட்டது.

வக்கீலுக்கு வழக்காடு பணத்தை அளித்துவிட்டு கோர்ட்டை விட்டு வெளியே வந்தனர் நிலாவும், ரவியும்.

 

“சார், ரொம்ப நன்றி சார். என்னுடைய சின்ன கவனக் குறைவு, எவ்வளவு பெரிய சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. போலீஸ் ஸ்டேசன், கோர்ட் பார்மாலிட்டிஸ் எல்லாம் எனக்கு தெரியாது.

ரெண்டு இடத்துலயும் எனக்கு ரொம்ப உதவி செஞ்சீங்க. தேங்க் யூ சோ மச். உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போறேனோ” என்றாள் கண்களில் நன்றி பெருக்குடன்.

“மேடம், வாழ்க்கையில எல்லாமே அனுபவம்தான். இந்த அனுபவம், நீங்க மத்தவங்களுக்கு வழிகாட்ட உதவும்.

எனக்கு போலீஸ் ஸ்டேசன், கோர்ட் பத்தி தெரிஞ்சதுனால உங்களுக்கு உதவி செஞ்சேன்.

நமக்கு உதவி பண்ணுனவங்களுக்கு தான் நாம உதவி பண்ணனும்னு இல்ல. நீங்களும் உங்களுக்கு தெரிஞ்ச விசயங்கள்ல மத்தவங்களுக்கு உதவி பண்ணுங்க.

இன்னைக்கு இக்கட்டுல இருக்குற ஒருத்தங்களுக்கு நாம உதவுனா, நமக்கு நாளைக்கு பிரச்சினை ஏற்படுறப்ப, நமக்கு யாராவது உதவுவாங்க. இதுதான் என்னுடைய அனுபவம்.

நாம எப்பவுமே நம்மளால முடிஞ்ச உதவிய மத்தவங்களுக்கு பண்ணனும்.” என்றார் ரவி.

தொலைந்து கிடைத்த லேப்டாப் மற்றும் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்று கிடைத்ததையும் எண்ணி மகிழ்ச்சி கொண்டாள் நிலா.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.