நகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை

நகை என்றால் சிரிப்பு என்று பொருள். மெய்ப்பாடு என்றால் வெளிப்படுதல் என்று பொருள்.

மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எட்டு வகை மெய்ப்பாடுகளுள் நகை முக்கியமானது.

எப்பொழுதெல்லாம் சிரிப்பு வரும் என்று நமது பழைய தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன?

இகழ்ச்சியே பெரும்பாலும் சிரிப்பாக வெளிப்படுகின்றது என்றே நம் இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன‌.

வடிவேலு மற்றும் கவுண்டமணி செந்தில் காமெடிகளை நினைத்துப் பார்த்துவிட்டு இக்கட்டுரையைப் படியுங்கள். நம் இலக்கியங்கள் எவ்வளவு தெளிவாக சிரிப்பைப் பற்றி ஆராய்ந்து சொல்கின்றன எனப் புரிந்து கொள்ளலாம்.

நகை எப்போது தோன்றும்?

நகை என்னும் மெய்ப்பாடு தனது பொருளைக் கொண்டு நான்கு நிலைகளில் தோன்றுமென்பதை, தொல்காப்பிய நூற்பா கீழ்க்கண்டவாறு விளக்குகின்றது.

எள்ளல் இளமை பேதைமை மடனென்று

உள்ளப் பட்ட நகைநான் கென்ப

எள்ளல்

எள்ளல் என்னும் சொல்லுக்கு இகழ்ச்சி, நிந்தை செய்தல், நகைத்தல் என பல பொருள்களைக் கழகத் தமிழ் அகராதி தருகிறது.

இதற்கு ஒருவனுடைய முட்டாள்தனத்தை பிறர் சிரிக்கும்படியாக சுட்டிக்காட்டும் பரிகாசமும் கேலியும் எனப் பொருள் கொள்ளலாம்.

மேலும், எள்ளல் என்பதற்குப் பழிச்சொல் என்ற பொருளைத் தருகிறார் திருவள்ளுவர்.

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்

 கள்ளாமை காக்கதன் நெஞ்சு

என்ற குறளில் பிறரின் பொருளைக் கவரும் எண்ணமில்லாதவன் பழிச்சொல் கேட்காமல் வாழ்வான் எனக் குறிப்பிடுகிறார்.

இளமை

இளமை என்னும் சொல்லுக்குச் சிறுபருவம், அறிவின்மை, முதிராமை எனப் பல பொருள்களைக் கழகத் தமிழ் அகராதி தருகிறது.

இதற்கு உடல் பலமும் தோற்றக் கவர்ச்சியும் பெற்ற முதிராத அறிவையுடைய பருவம் எனப் பொருள் கொள்ளலாம்.

இழுக்கல் இயல்பிற்று இளமை

என இளமைப் பருவமானது நகைத்தலுக்குறிய பருவமென்பதைத் திரிகடுகம் உணர்த்துகிறது.

பேதைமை

பேதைமை என்னும் சொல்லுக்கு அறிவின்மை, மடமை எனப் பல பொருள்களைக் கழகத் தமிழ் அகராதி தருகிறது.

இதற்கு எந்த ஒரு செயலையும் பகுத்தறியத் தெரியாத தன்மை என்று பொருள் கொள்ளலாம். பேதைமையை திருவள்ளுவர் பின்வருமாறு விளக்கியுள்ளார்.

பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு

ஊதியம் போக விடல்

மடன்

மடன் என்னும் சொல்லுக்கு அறிவிலான் என்ற பொருளையே கழகத் தமிழ் அகராதி தருகிறது. மேலும் சில அகராதிகள் மடமை என்றும் பொருள் தருகின்றன.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருத்துவ நூலாக விளங்கும் சிறுபஞ்சமூலத்தில் அடக்கம் என்னும் பொருளில் மடன் என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

மக்கள் பெறுதல், மடன் உடைமை, மாது உடைமை,

ஒக்க உடன் உறைதல், ஊண் அமைவ-தொக்க

அலவலை அல்லாமை பெண் மகளிர்க்கு-ஐந்தும்

தலைமகனைத் தாழ்க்கும் மருந்து

என்ற பாடல் பெண்களுக்குரிய ஐந்து குணங்களுள் மடன் (அடக்கம்) இடம்பெறுகின்றது.

இக்குணங்களுள் ஒன்று கெடுமானால், அவளது கணவன் நகைப்புக்கு உரியவனாகி விடுவான் எனக் குறிப்பிடுகிறது.

 

சிறுபஞ்சமூலம் சொல்லும் நகை

நகை என்னும் சொல்லுக்கு சிரிப்பு, இகழ்ச்சி, இன்பம் எனப் பல பொருள்களை அகராதி3 தருகிறது. நகை என்பது இகழ்ச்சியிற் பிறப்பது என இளம்பூரணர் உரையில் காணப்படுகிறது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலத்தில் வரும் கீழ்க்காணும் பாடல்கள் எவையெல்லாம் இகழப்படும் என்பதை உணர்த்துகின்றன.

 

கல்லாதவனின் அறிவும், காதுகளை இழந்தவனின் அழகும், தேவையற்ற பொருளை பிறருக்கு வழங்கும் குணமும் நல்லவர்களுக்கு சிரிப்பை உண்டாக்கும் என்று கீழ்க்கண்ட பாடல் சொல்கிறது.

கல்லாதான் தான் காணும் நுட்பமும், காது இரண்டும்

இல்லாதாள் ஏக்கழுத்தும் செய்தலும், இல்லாதான்

ஒல்லாப் பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும்,

நல்லார்கள் கேட்பின் நகை

 

நாணமில்லாதவனின் அமைதி, நன்னடத்தையில்லாதவனின் நோன்பு, உண்பொருளில்லாதவனின் ஈகை, வலியில்லாதவனின் வீரம், தமிழ் தேர்ச்சியற்றவனின் கவி ஆகியனவும் நகைக்கு இடமாகும் என்று கீழ்க்கண்ட பாடல் சொல்கிறது.

நாண் இலான் சால்பும், நடை இலான் நல் நோன்பும்,

ஊண் இலான் செய்யும் உதாரமும், ஏண் இலான்

சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவு செயலும்,

நாவகம் மேய் நாடின் நகை

 

செல்வர்களும் நல்லவர்களும் தங்களது பணத்தாலும் குணத்தாலும், பிறர் தம்மை இகழாத வண்ணம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கீழ்க்கண்ட பாடல் சொல்கிறது.

………. பல் பொருளால் பல்லார்

நகை கெட வாழ்வதும், நன்று

 

கல்லாதவரும் கற்றவர் கூட்டத்தை சேராதவரும் நல்லவர்களால் இகழப்படுவார்கள் என்று கீழ்க்கண்ட பாடல் சொல்கிறது.

கல்லார் கற்றார் இனத்தார் அல்லார் பெறுபவே

நல்லார் இனத்து நகை

 

பிறநூல்கள் சொல்லும் நகை

ஒருவன் இல்லாத நேரத்தில் அவனை இகழ்வதும், விளையாட்டின் போது ஒருவனை இகழ்வதும் தீமையை உண்டாக்கும் என்று கீழ்க்கண்ட திருக்குறள் சொல்கிறது.

அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறன்அழீஇப் பொய்த்து நகை

 

சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நாலடி நானூறு, பொது மகளிரால் ஏழ்மை நிலையை அடையும் செல்வந்தர் நகைத்தக்கவர் எனக் கூறுகிறது.

இக்கருத்து செல்வந்தனாக இருந்த கோவலன் மாதவிபால் காமம் கொண்டு அனைத்தையும் இழந்த கதையை மையமாகக் கொண்டுள்ளது.

ஆமாபோல் நக்கி, அவர் கைப்பொருள் கொண்டு

சேமாப்போல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை

ஏமாந்து, எமது என்று இருந்தார் பெறுபவே,

தாமாம் பலரால் நகை

 

பிறரால் மணமுவந்து கொடுக்கப்படாத பொருளைப் பெற்று வாழ்பவன் இகழ்ச்சிக்குரியவன் என்பதை நான்மணிக்கடிகை இயம்புகிறது.

தெற்ற நகை ஆகும், நண்ணார்முன் சேறல்

 

பிறரது திறனை அறியாது அவரை இகழ்ந்து பேசும் மக்கள் நகைப்புக்கு உரியவர்கள் என்று பழமொழி நூல் இயம்புகிறது.

மானமும் நாணும் அறியார், மதி மயங்கி,

ஞானம் அறிவார் இடைப்புக்கு, தாம் இருந்து,

ஞானம் வினாஅய் உரைக்கின், நகை ஆகும்.

 

ஷா. முஹம்மது அஸ்ரின்
முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு
ஜமால் முகமது கல்லூரி
திருச்சி-620020

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.