சொர்க்க வனம் 9 ‍- நண்பனை சந்தித்த இருன்டினிடே

பகலில் ஓய்வு, இரவில் பயணம் என ஸ்வாலோ இன குருவிக்கூட்டம் மேலும் நான்கு நாட்கள், பயணத்தை தொடர்ந்தது.

அப்பொழுது, குடியிருப்புகள், கோபுரங்கள், வாகனங்கள், பாலங்கள், நெடுஞ்சாலைகள் என மனிதனின் பிரம்மாண்ட படைப்புகளை கண்டு அவை வியந்தபடியே பயணித்தன.

குருவிக் கூட்டத்தின் தாயகமான வடமுனை பகுதியிலிருந்து வெகுதூரம் அவை பயணித்து வந்துள்ளன.

அவ்வப்பொழுது ஓய்வு எடுத்துக் கொண்டாலும் தொடர் பயணத்தால், அவை வெகுவாக சோர்வு அடைந்திருந்தன.

அன்று காலை, சுமார் ஒன்பது மணி இருக்கும். ஒவ்வொரு பயணத்திலும், வழக்கமாக தங்கும் அந்த ‘தீவு’ இருன்டினிடேவின் கண்களுக்கு தென்பட்டது.

அடுத்த சில மணித்துளிகளில், தரையிறங்குவதற்கான சமிக்ஞையை இருன்டினிடே கொடுக்க, குருவிக் கூட்டம் அந்த தீவில் தரையிறங்கியது.

கடற்கரையிலிருந்து சில மீட்டர் தொலைவில் இருக்கும் அந்த தீவின் எழிலில் குருவிகள் எல்லாம் மயங்கின. எனினும் உடனே தீவை சுற்றி பார்க்கும் எண்ணம் அவற்றிற்கு தோன்றவில்லை.

 

“என்ன நண்பர்களே, முதல்ல தங்கும் இடத்தை தேர்வு செய்வோமா?” என்று கேட்டது இருன்டினிடே.

“ஐயா, கொஞ்ச நேரம் கழிச்சு இருப்பிடத்தை பார்க்க போலாமா?” என்று சில குருவிகள் கேட்டன.

“சரி, இப்ப இங்க ஒய்வு எடுப்போம். அப்புறம் தங்கும் இடத்தை பார்த்துக்கலாம்.” என்றது இருன்டினிடே.

குருவிக்கூட்டம் கடற்கரையை ஒட்டியிருந்த தென்னை மரநிழலில் அமர்ந்திருந்தது. குருவிகள் கடற்கரையை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன.

தூய கடல் நீர், நீல நிறத்தில் காட்சியளித்தது. அவ்வப்போது அலைகள் கரையை தொட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்றுவிட்டன.

கரையில் வேறு சில பறவை இனங்களும் ஆங்காங்கே சிறு குழுக்களாக திரிந்து கொண்டிருந்தன. வெகு தொலைவில் ஒரு சில பட‌குகள் வந்து கொண்டிருந்தன. வெயிலின் இளஞ்சூட்டில், குளிர்ந்த கடல் காற்று, குருவிகளுக்கு மகிழ்வை தந்தது.

அப்பொழுது “நண்பர்களே என்ன சோர்வா இருக்கா?” என்றது இருன்டினிடே.

மெதுவாக, “இப்ப கொஞ்சம் பரவாயில்லங்க, சோர்வு நீங்கியிருக்கு” என்று சில குருவிகள் கூறின.

“இன்னும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தா சரியாகும்” என்று பதில் சொன்னது இருன்டினிடே.

குருவிகள் எல்லாம் ஒருமித்த குரலில் “ஆமாம் ஐயா” என்றன.

 

“ஐயா, சொர்க்க வனத்துக்கு போக இன்னும் எவ்வளவு தூரம் கடக்கணும்?” என்று கேட்டது வாக்டெய்ல்.

“வாக்டெய்ல, பயணம் ரொம்ப சலிப்பா இருக்குதா?” என்றது இருன்டினிடே.

“இல்லைங்க.. சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன்” என்றது வாக்டெய்ல்.

“இம்ம்.. இன்னும் மூன்று நாட்கள் தான். சொர்க்க வனத்துக்கு போயிடலாம்” என்றது இருன்டினிடே.

“அப்படியா!.. அப்ப ரொம்ப மகிழ்ச்சி ஐயா…” என்று உற்சாகமாய் சொன்னது வாக்டெய்ல்.

புன்னகைத்தது இருன்டினிடே. அதன் பின் குருவிகள் எதுவும் பேசவில்லை. அவை உறங்கின.

இரண்டு மணி நேரம் கடந்தது. நண்பகல் வேளை என்பதால் சூரியக்கதிர்கள் செங்குத்தாய் குருவிகள் இருந்த பகுதியை தாக்கியது. சூடு சற்று அதிகரிக்க, குருவிகள் எல்லாம் எழுந்தன.

பின்னர், மூன்று குருவிகளை தங்கும் இருப்பிடத்தை தெரிவு செய்வதற்காக அனுப்பியது இருன்டினிடே.

பிறகு அதுவும் இரண்டு குருவிகளை அழைத்துக் கொண்டு, தீவின் நிலைமையை அறிய புறப்பட்டுச் சென்றது. மற்ற குருவிகள் அந்தப் பகுதியிலேயே திரிய தொடங்கின.

சிறிது நேரத்திற்கு பிறகு இருன்டினிடேவும் உடன் சென்ற இரண்டு குருவிகளும் அங்கு வந்தன. தங்கும் இருப்பிடத்தை தேர்வு செய்யச் சென்றிருந்த மூன்று குருவிகளும் அங்கு ஏற்கனவே வந்திருந்தன.

இருப்பிடம் பற்றிய தகவல்களை இருன்டினிடேவிடம் அக்குருவிகள் கூறின.

உடனே, “சரி நண்பர்களே, முதலில் அங்கு செல்வோம்” என்று சொல்ல, குருவிக்கூட்டம் அங்கிருந்து நகர்ந்து தேர்வு செய்திருந்த இருப்பிடத்தை வந்தடைந்தது.

 

அது ஒரு உயர்ந்த மரம். சற்று அகலமானது. ஒட்டுமொத்த குருவிக்கூட்டமும் வசதியாக தங்குவதற்கு ஏற்ப அம்மரம் இருந்தது.

அத்தோடு, மரத்தின் உச்சிக்கிளையில் இருந்து பார்க்க, தீவு முழுவதும் தெளிவாக தெரிந்தது. குருவிகள் மகிழ்ச்சியுடன் அந்த மரத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தன.

அப்பொழுது, எல்லோரையும் அழைத்து, “நண்பர்களே, இந்த தீவு, நாம முன்ன தங்கின இடங்கள் மாதிரி இல்ல. இங்க நம்மள‌ மாதிரி நிறைய வேற்று பறவைகள் இருக்காங்க. கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். தனியா எங்கும் போகாதீங்க… என்ன சரியா?” என்றது இருன்டினிடே.

“சரி ஐயா” என்றன எல்லா குருவிகளும்.

அதன் பின்னர், குருவிகள் தங்குவதற்கான இடம் நிர்ணயம் செய்யப்பட்டது. உணவு சேகரித்து வருவதற்காக பத்து குருவிகள் புறப்பட்டுச் சென்றன.

சிறிது நேரத்தில் அவை மிகுதியான உணவை எடுத்துக் கொண்டு வந்தன. உணவை குருவிக்கூட்டம் பகிர்ந்து உண்டது.

 

அப்பொழுது மதியம் ஒரு மணி ஆகியிருந்தது. உண்ட மயக்கத்தில் குருவிக் குடும்பங்கள் தத்தம் இடத்திற்கு ஓய்வெடுக்க சென்றன. இருன்டினிடேவும் தனியே சென்று தனது இடத்தில் ஓய்வெடுத்தது.

மதியம் இரண்டு மணியளவில், கூட்டத்தில் இருந்த ஐந்து நடுத்தர வயதுடைய குருவிகள் மட்டும் அங்கிருந்து புறப்பட்டு சற்று தொலைவில் இருந்த பகுதிக்குச் சென்றன.

கடற்கறையை ஒட்டி இருந்த அப்பகுயில் பாறைகளால் ஆன மலைக்குன்று இருந்தது. அதில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. அதை ஒட்டி அதிக அளவில் மரங்கள் இருந்தன. கடல் அலைகள் குன்றில் மோதி இசையை எழுப்பியவாறே இருந்தன.

அந்த இடத்தின் அழகை கண்டும், கடல் அலைகளின் ஓசையை கேட்டும் மகிழ்ந்தவாரே, அங்கிருந்த ஒரு மரத்தில் அவை சென்று அமர்ந்தன.

சிறிது நேரம் சென்றது.

 

சுற்றிப் பார்க்க சென்ற ஐந்து குருவிகளுள் ஒன்று, வேகவேகமாக இருன்டினிடேவிடம் வந்து நின்று, “ஐயா! ஐயா!” என்று மூச்சிரைக்க அழைத்தது.

திடுக்கிட்டெழுந்த இருன்டினிடே, “என்ன… என்ன ஆச்சு?” என்று கேட்க, “நம்ம நண்பர்களோடு சில வேற்று பறவைகள் சண்ட போடுறாங்க” என்று பதற்றத்துடன் அக்குருவி கூறியது.

இருன்டினிடே, வேறு எதுவும் கேட்கவில்லை. தகவல் சொன்ன குருவியுடன், சில குருவிகளை மட்டும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தது இருன்டினிடே.

அங்கு நான்கு ஸ்வாலோ குருவிகளுடன், ஆறு வேற்றுப் பறவைகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அந்த வேற்றுப் பறவைகள், பூங்குருவிகள் தான் என்பதை இருன்டினிடே எளிதில் தெரிந்துக் கொண்டது.

அங்கிருந்த தனது குருவி நண்பர்களையும், சண்டையிட்டுக் கொண்டிருந்த பூங்குருவிகளையும் சமாதானம் செய்ய முற்பட்டது இருன்டினிடே.

இருன்டிடேவின் தோற்றம் மற்றும் அதன் பேச்சை கேட்டு, சண்டையிட்ட பூங்குருவிகள் சற்று அமைதி அடையத் தொடங்கின.

 

பூங்குருவிகளை பார்த்து, “என்ன நடந்தது, எங்க நண்பர்கள், உங்கள என்ன பண்ணாங்க?” என்று கேட்டது இருன்டினிடே.

“எங்க கூடுகள் இங்க நிறைய இருக்கு. அப்படியிருக்க இவங்க எப்படி இங்கு வரலாம்?” என்று உரத்த குரலில் கேட்டது ஒரு பூங்குருவி.

அந்த ஐந்து குருவிகளையும் பார்த்து, “நீங்க என்ன பண்ணீங்க?” என்று கேட்டது இருன்டினிடே.

அதற்கு அவை “ஐயா, நாங்க சும்மா தான், இங்க வந்து நின்னோம், வேற எதுவும் பண்ணல” என்று கூறின.

“நண்பர்களே, பொதுவா கூடுகள் இருக்கிற இடத்துக்கு போகாதீங்க. கூட்டுல பறவைகளோட முட்டைகளோ அல்லது குஞ்சுகளோ இருக்கும்ல… அப்படி இருக்க, பாதுகாப்பு கருதி உங்களோட இவங்க சண்டைக்கு வந்திருக்காங்க” என்று கூறியது இருன்டினிடே.

அந்த ஐந்து குருவிகளும் “மன்னிச்சுக்குங்க, தெரியாம வந்துட்டோம்” என்று மட்டும் கூறின.

அந்த பூங்குருவிகளை பார்த்து, “நண்பர்களே, எங்க நண்பர்கள் தெரியாம வந்துட்டாங்க, இதுக்கு நான் வருந்துகிறேன்” என்றது இருன்டினிடே.

அப்பொழுது, “ஐயா வாங்க.. இவங்க தான்…” என்று அந்த பூங்குருவிகள் இருன்டினிடேவின் பின்புறம் நோக்கியபடி கூறின.

பின்புறம் இருந்து ஒரு முதிர்ந்த பூங்குருவி தனது இறகை இருன்டினிடேவின் தோள்பட்டையில் வைத்தது.

 

சட்டென திரும்பி பார்க்க, இருன்டினிடேவிற்கு ஆச்சரியம். காரணம் அந்த முதிர்ந்த பூங்குருவி, அதன் நீண்ட கால நண்பரான ’ரெட்விங்’ ஆகும். ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்பொழுது தான் அவை சந்தித்துக் கொள்கின்றன.

உடனே “நண்பா! எப்படி இருக்க…?” என்று ரெட்விங் கேட்டுக் கொண்டே இருன்டினிடேவை கட்டி தழுவிக் கொண்டது.

இருன்டினிடேவும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தது. “நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க நண்பா?” என்று தனது நண்பன் ரெட்விங்கை பார்த்து நலம் விசாரித்தது இருன்டினிடே.

“ரொம்ப நல்ல இருக்கேன். உன்ன பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சி” என்று ரெட்விங் சொன்னது.

அங்கிருந்த ஸ்வாலோ குருவிகளுக்கும், பூங்குருவிகளுக்கும் முதலில் எதுவும் புரியவில்லை. பின்னர் இருன்டினிடேவும், பூங்குருவி கூட்டத்தின் தலைவன் ரெட்விங்கும் நண்பர்கள் என்பதை அவை புரிந்து கொண்டன.

பின்னர், நடந்தவற்றை தெளிவாக ரெட்விங்கிடம் எடுத்துரைத்தது இருன்டினிடே.

“சரிப்பா, இங்க யாருக்கும் எந்த தீங்கும் வரல இல்லையா.. பிறகு என்ன? பிரச்சனைய இத்தோட விடுங்க” என்றது ரெட்விங்.

அதனை தொடர்ந்து, தனது நண்பர்களுக்கு இருன்டினிடேவை அறிமுகம் செய்துவைத்தது ரெட்விங்க். அவ்வாறே, ரெட்விங்கையும், தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தது இருன்டினிடே.

பூசலை மறந்து அவை எல்லாம் நட்பு கொண்டன.

 

“சரிப்பா.. நீ எப்ப வந்த… எவ்வளவு நாட்கள் இங்க இருப்ப?” என்று கேட்டது ரெட்விங்.

“நண்பா… இன்னிக்கு தான் வந்தோம்… நாளை இரவு இங்கிருந்து புறப்படுவோம்” என்றது இருன்டினிடே.

“என்னது… இரண்டு நாட்கள்ல கிளம்புறீங்களா? ஏம்ப்பா ஒரு வாரம் தங்கிட்டு போனா என்ன?” என்று நட்பின் காரணமாக கேட்டது ரெட்விங்.

“இல்ல நண்பா… ஏற்கனவே சில வாரங்களா பயணத்துல இருக்கோம். அதே வேகத்துல சொர்க்க வனத்துக் போயிட்ட நல்லா இருக்குன்னு பார்க்கிறேன்” என்றது இருன்டினிடே.

“சரி எங்க தங்கியிருக்கீங்க?” என்று ரெட்விங் கேட்க, அவை தங்கியிருக்கும் இருப்பிடத்தின் அடையாளங்களை சரியாக சொன்னது இருன்டினிடே.

“சரி இருன்டினிடே, அந்த இடம் எனக்கு நல்ல தெரிஞ்ச இடம் தான். இன்னிக்கு சாயந்திரத்துக்கு மேல நாம சந்திப்போமா?” என்று ரெட்விங்க் கேட்க, “நிச்சயமா நண்பா உனக்காக காத்திருப்பேன்” என்றது இருன்டினிடே.

அதன்பின்னர் குருவிகள் எல்லாம் பறந்து தங்களது இருப்பிடத்திற்கு வந்தன.

மரத்தில் பதற்றத்துடன் ஸ்வாலோ குருவிகள் எல்லாம் காத்துக் கொண்டிருந்தன. நடந்தனவற்றை எல்லாம் இருன்டினிடே கூற, குருவிகள் நிம்மதி அடைந்தன.

அத்தோடு தனது நண்பர் ரெட்விங், அங்கு மாலையில் வருவதும் பற்றியும் இருன்டினிடே கூறியது.

குருவிக்கூட்டம் மகிழ்ந்தது. அதை தொடர்ந்து, இரவு உணவு விருந்திற்கான ஏற்பாடுகளை குருவிகள் செய்யத் தொடங்கின.

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

 

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 8 – செயற்கை ஒளி விளைவு

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.