நண்பர்கள்

குழந்தைகளே, நண்பர்கள் என்ற இக்கதையிலிருந்து நண்பர்களைத் தேர்வு செய்யும் முறையை அறிந்து கொள்வீர்கள்.

நண்பர்களைத் தேர்வு செய்யும் போது நம்முடைய சூழல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வீர்கள். வாருங்கள் கதைக்குப் போகலாம்.

ஆமையும் எலியும்

பச்சையூர் என்ற அழகிய கிராமம் ஒன்று இருந்தது. பெயருக்கு ஏற்றபடி அவ்வூரில் சோலைகளும் வயல்வெளிகளும் நிறைந்து பசுமையாகக் காட்சியளித்தது.

அவ்வூரில் தாமரைக் குளம் ஒன்று இருந்தது. அதில் ஆமை ஆனந்தன் வசித்து வந்தது.

அக்குளத்தின் அருகே வயல்வெளிகள் காணப்பட்டன. வயல்வெளியின் அருகே இருந்த பொந்தில் எலி ஏகாம்பரம் வசித்து வந்தது.

ஒருநாள் எலி ஏகாம்பரம் உணவினைத் தேடி அலைந்து கொண்டிருந்தது. அப்போது மாமரத்தின் அடியில் ஆமை ஆனந்தனைச் சந்தித்தது.

இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசி நண்பர்களாயினர்.  அன்றிலிருந்து தினமும் இருவரும் மாமரத்தின் அடியில் சந்தித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

நாளுக்கு நாள் அவர்களிடையே நட்பானது அதிகரித்துக் கொண்டே சென்றது.   ஒரு நாள் எலி ஏகாம்பரம் ஆமை ஆனந்தனிடம் “என் அருமை நண்பனே நீ என்னுடைய வீட்டிற்கு நாளை வரவேண்டும். உனக்கு நான் விருந்தளிக்க விரும்புகிறேன்.” என்று கூறியது.

ஆமை ஆனந்தனும் “சரி. உன் வீடு எங்கிருக்கிறது?. நான் எப்படி உன் வீட்டிற்கு வருவது?” என்று கேட்டது.

அதற்கு எலி ஏகாம்பரம் “நாளை நீ இதே இடத்திற்கு வந்துவிடு. நான் உன்னை என் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்” என்று கூறியது.

ஆமை ஆனந்தனும் “சரி நளை இருவரும் சந்திப்போம்.” என்று கூறி விடைபெற்றது.

 

எலி வீட்டில் விருந்து

மறுநாள் ஆமை ஆனந்தனும் எலி ஏகாம்பரமும் மாமரத்தின் அடியில் சந்தித்துக் கொண்டன. எலி ஏகாம்பரம் தன்னுடைய வீட்டிற்கு ஆமை ஆனந்தனை அழைத்து வந்தது.

எலி ஏகாம்பரம் தன்னுடைய நண்பனுக்காக விருந்தினை ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்தது. எலி ஏகாம்பரமும் ஆமை ஆனந்தனும் தடபுடலான விருந்தினை உண்டு விட்டு மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தன.

மாலையானதும் ஆமை ஆனந்தன் தன் வீட்டிற்கு செல்ல எண்ணியது. “எலி ஏகாம்பரம், நீ அடுத்த வாரம் ஒரு நாள் கண்டிப்பாக என் வீட்டிற்கு வரவேண்டும். நான் உனக்கு விருந்து கொடுக்க நினைக்கின்றேன்.” என்று கூறியது.

 

ஆமை வீட்டிற்குப் பயணம்

எலி ஏகாம்பரம் “நண்பனே உன் வீடு எங்கு உள்ளது?” என்று கேட்டது. ஆமை ஆனந்தன் “தாமரைக் குளம் தான் என்னுடைய வீடு” என்றது.

அதனைக் கேட்டதும் எலி ஏகாம்பரம் “தண்ணீருக்குள்ளா உன் வீடு இருக்கிறது. எனக்கு நீந்தத் தெரியாதே. நான் எப்படி அங்கே வரமுடியும்?” என்று கேட்டது.

ஆமை ஆனந்தன் “கவலைப்படாதே, எலி ஏகாம்பரம், எனக்கு நன்கு நீந்தத் தெரியும். ஒரு கயிற்றை எடுத்து உன் காலில் ஒரு முனையையும், என் காலில் ஒரு முனையையும் கட்டிக் கொள்வோம். பின் நான் நீந்தி உன்னை என் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன்” என்று கூறியது. எலி ஏகாம்பரம் அரைகுறை மனதுடன் ஆமை ஆனந்தனின் வீட்டிற்கு வர ஒத்துக்கொண்டது.

மறுவாரம் எலி ஏகாம்பரம் தாமைக்குளத்துக்கு அருகே ஆமை ஆனந்தனின் வீட்டிற்கு செல்வதற்காக வந்தது. எலி ஏகாம்பரத்தின் வருகைக்காக ஆமை ஆனந்தன் காத்துக் கொண்டிருந்தது.

ஆமை ஆனந்தன் “வா நண்பனே, இந்த கயிற்றின் ஒருமுனையை நீ கட்டிக் கொள். மறுமுனையை நான் கட்டிக் கொள்கிறேன். உன்னை என் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்.” என்று எலி ஏகாம்பரத்திடம் கூறியது.

 

பொருந்தா நட்பு

எலி ஏகாம்பரமும் ஆமை ஆனந்தன் கூறியவாறு செய்தது. ஆமை ஆனந்தன் மிக்க மகிழ்ச்சியுடன் குளத்தில் குதித்து நீந்தத் தொடங்கியது.

தண்ணீருக்குள் சென்ற எலி ஏகாம்பரத்தால் மூச்சுவிட முடியாமல் திணறியது. ஆமை ஆனந்தனோ எதையும் கண்டு கொள்ளாமல் தன் வீட்டிற்கு செல்வதிலேயே குறியாக இருந்தது.

எலி ஏகாம்பரம் மூச்சுவிட முடியாமல் இறந்தது. சிறிது நேரத்தில் எலி ஏகாம்பரம் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கத் தொடங்கியது. இதனை அறியாத ஆமை ஆனந்தன் எலி ஏகாம்பரத்தை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நோக்கில் அதனை கீழே இழுத்தது.

அந்த நேரத்தில் வானத்தில் பறந்து கொண்டிருந்த கழுகு கருப்பன் செத்து மிதந்த எலி ஏகாம்பரத்தை கவனித்தது. ‘இன்றைக்கான இரை கிடைத்துவிட்டது’ என்று எண்ணியவாறே எலி ஏகாம்பரத்தை பிடித்து மேலே இழுத்தது.

என்ன ஆச்சர்யம் எலி ஏகாம்பரத்துடன் ஆமை ஆனந்தனும் சேர்ந்து வந்தது. இதனைப் பார்த்த கழுகு கருப்பன் ‘ஆகா, ஒரு இரைக்குப் பதில் இரண்டு கிடைத்து விட்டது.’  என்று இரண்டையும் தூக்கிக் கொண்டு பறந்தது.

ஆமை ஆனந்தன் ‘நமக்கு பொருந்தாத நண்பனை நாம் தேர்வு செய்ததன் விளைவாக இன்றைக்கு கழுகிற்கு இரையாகப் போகிறோம்’ என்று மனதிற்குள் வருந்தியது.

இக்கதை சொல்லும் நீதி

நாம் நண்பர்களைத் தேர்வு செய்யும்போது நமக்கும், நம்முடைய சூழல்களுக்கும் பொருத்தமானவர்களையே தேர்வு செய்ய வேண்டும்.

வ.முனீஸ்வரன்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.