நம் இராமானுசர் – ஓர் பார்வை

‘பொங்கிலங்கும் முப்புரி நூலோடு பாங்கெனப் பேசும் பொன் இவர் மேனி’ என்னும் படியாக, வடிவழகும் நடையழகும் கொண்ட பைந்துவராடைப் பேராசான் நம் இராமாநுசர்.

இக்காரேய் கருணை இராமாநுசரே பாமரரும் பேதையரும் பேருருவப் பெருமானை அறிந்து, புரிந்து, ஏற்று வணங்கிப் பேரருள் பெற்றிடப் பெரும் காரணராவார்.

காஞ்சி பெரிய பெருமானிடம் நித்தம் பேசும் திருக்கச்சி நம்பிகளிடம் பெரும் பக்தி கொண்டவர்.

ஆகவே “போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” என்பதற்கிணங்கத் திருக்கச்சி நம்பிகளை தன் இல்லத்தில் உபசரித்து உணவளித்து சேடப் ப்ரசாதத்தை ஏற்க வேண்டுமென பேரவாக் கொண்டவர் இராமாநுசர்.

மாற்றார் ஆயினும் மதி சிறந்தோரை மதிப்பவர். ஆகவே மாமறைப் பொருளை யாதவப் பிராகாசரிடம் கற்றுணர்ந்து, அவருரைத்த கருத்தையே திருத்தி உரைத்தவர் நம் இராமாநுசர்.

மாலவன் அருளிய மதிநலத்தால், மன்றத்துள் மறுத்தாரை திருத்தி, தம்மோடு அணைத்த மாமறைச் செல்வர் நம் இராமாநுசரே.

‘இல்லறமின்றேல் துறவறமில்லை’ என்றபடி இருந்தவர் தொண்டர்தம் பிணியொழித்து, அமரர் பெருவிசும்பருளும் பேரருளாளனிடமே துறவு ஏற்க பெருவரம் கேட்டவர் நம் இராமாநுசர்.

உலகமேத்தும் ஆழியான் அத்தியூரில் வைணவ உலகை ஆளவந்த யமுனைத் துறைவர், ‘ஆம்முதல்வன் இவனன்றோ’ எனக் கண்டுகந்தது நம் இராமாநுசரையே.

ஆளவந்தார் திருநாடலங்கரிக்க, அனைவரும் ஆற்றொனா துயருற்றுப் பெருமழை பொழிவதுபோல் கண்ணீர் பெருகத் துடித்தனர்.

அங்கு வந்த இராமாநுசர் ஆளவந்தாரின் மடங்கி இருந்த கைவிரல்களைக் கண்டு, அங்கிருந்தோர் வழியே ஆளவந்தாரின் உளக்குறிப்பறிந்து, அவர்தம் அருள் பெற்ற வள்ளல் நம் இராமாநுசன்.

ஆளவந்தாரின் அருள் பெற்ற மகாபுரணர் என்றேத்தும் பெரிய நம்பிகளின் திருக்கரத்தால் மதுராந்தகம் ஏரிக்கரை மகிழ மரத்தடியில் தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரப் பொறியொற்றிக் கொண்டு யதிகட்கிறைவன் யமுனைத் துறைவர் கதிபெற்றுய்ந்தவர் நம் இராமாநுசன்.

கோதண்டபாணியான இராமபிரானுக்கு பின் சென்று தொண்டு செய்த தம்பி இலக்குவன் போல், இன்று நம்மிடையே திரிதண்டம் தரித்து பெருமாளுக்கு அடிமை செய்தவர் நம் இராமாநுசர்.

கிருமிகண்ட சோழனின் துர்குணத்தால், இன்றைய கர்நாடக மாநிலத்தில் உள்ள திருநாராயணபுரத்தில் பன்னிரண்டாண்டுகள் தங்கி இருந்தார். அப்பகுதியை ஆண்ட அரசன் பிட்டி தேவனின் மகளுடைய நோயைத் தீர்த்து அவ்வரசனை விஷ்ணு தேவனாக மாற்றினார்.

பேலூர் சென்ன கேசவப் பெருமாள் ஆலயம், திருநாராயணபுரம் ஆலயம், தலக்காடு ஆலயம், தொண்டனூர் நீர்த்தேக்கம் போன்றவைகளை நிர்மாணித்து பக்தி சிறக்கவும், வேளாண்மை செழிக்கவும் பெரும் தொண்டாற்றியவர் நம் இராமாநுசர்.

தொண்டனூரில் நீச மாய பிசாசுகள் ஓடியதும், மாயா வாதங்கள் துவண்டதுவும் மாற்றுக் கருத்துளோர் மாறியதும் இங்கு நம் இராமானுசராலேயே.

கொடியணி நெடுமதில் கோபுரம் சூழ்ந்த அரங்கமும், பெருநிலமளிக்கும் பேரருளாளன் கச்சியும், திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடமும், செல்வப் பெருந்தகை வீற்றிருக்கும் திருநாராயணபுரமும் இன்றளவும் பொலிவுடன் இருக்கப் பெருங்காரணர் நம் இராமாநுசரே.

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்து புகுந்து உருக்காட்டாதே ஒளிப்பாயோ என்று ஏங்கித் தவித்து, முன்னவர் வழியிலே அறிந்து தென்னத்தியுரான் சேவடியை சேவித்துய்ந்தவர் நம் இராமாநுசர்.

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை என்று ஆழ்வார் சொன்னதுபோல் வேங்கடத்தைக் கண்டுகந்து, அங்கு கோனேரி அமைத்து, நாளும் நறுமலர் தரும் நந்தவனம் உருவாக்கி, குளிர் அருவி வேங்கடத்துள் மின்வட்டச் சுடராழி வேங்கடவனுக்கு இன்றளவும் இணையில்லாப் பெருமை சேர்த்து ஆனந்தப்பட்டதுவும் நம் இராமாநுசரே.

வேங்கடத்தில் வஞ்சகர் விரித்த வலையை தகர்த்த அற்புதன் நம் இராமாநுசரே. அங்கு நித்திய கைங்கர்யத்திற்கும் நிர்வாகத்தில் கேள்வி கேட்கவும் பெரிய கேள்வி மடத்தை நிறுவி இன்றளவும் தொண்டு சிறக்க காரணம் நம் இராமாநுசரே.

க‌டிகைத் தடங்குன்றின் அக்காரக் கனியையும் கண்டுகந்தவர் நம் இராமாநுசர்.

காசுமீரம் சென்று கூரத்தாழ்வான் துணையோடு, விசிஷ்டாத்வைத கொள்கைக்காக போதாயனர் போன்றோரின் நூல்களின் துணைக்கொண்டு பிரம்ம சூத்திரத்திற்கு பேருரைக்கண்டதால், கலைமகள் கருணையால் பாஷ்யகாரர் என்ற பெரும்பேறு பெற்றவர் நம் இராமாநுசர்.

திருவரங்கக் கோயிலைத் திறம்பட நடத்தி இக்கோயிலுக்கு உடையவர் என்ற பேர் பெற்றவர் நம் இராமாநுசர்.

திருவரங்கத்தில் திருவாய்மொழியை பண்ணுடன் பாடுவதற்கு உகந்தாரை தேர்ந்தெடுத்து இவர்கள் இருக்கும் பகுதிக்கு செந்தமிழ் பாடுவார் வீதி என்றழைத்த செந்தமிழ் வேதியர் நம் இராமாநுசர்.

“ நாளும் நம் திருவுடை தம் நலங்கழல் வணங்கி”

“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி

வழுவிலா அடிமை செய்ய வேண்டும்”

“அடிமை செய்வார் திருமாலுக்கே” என்ற உயர்ந்த கொள்கையினை வைணவர்க்கு உணர்த்தி உணர்வினை ஊட்டியவர் நம் இராமாநுசர்.

கோயில் ஒழுகு என்ற நியதியை உருவாக்கி வைணவத் திருக்கோயில்களின் வழிபாட்டு முறைகளைச் சீரமைத்த சீரியர் நம் இராமாநுசர்.

தாரமே கிளை மக்களென்றும், நோயே பட்டொழிந்து குறிக்கோளொன்றிலாமையால் பல்லுயிர்களைக் கொன்றும், குலந்தான் எத்தனையும் பிறந்தே இறந்தொழியும், நல்லதோர் அறமும் செய்திலா, நலந்தான்.

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 9444410450

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.