நவராத்திரி வழிபாடு பற்றி அறிவோம்

நவராத்திரி என்பது அம்மனை வழிபடும் முக்கிய விழாக்களில் ஒன்று. ‘நவம்’ என்றால் ‘ஒன்பது’ ராத்திரி என்றால் ‘இரவு’ எனப் பொருள்படும்.

நவராத்திரிக் கொண்டாட்டம் என்பது ஒன்பது இரவுகள் மற்றும் பத்து பகல்களைக் குறிக்கும்.

சித்திரை (ஏப்ரல் – மே) மாதத்தில் வசந்த நவராத்திரி, ஆடி மாதத்தில் (ஜூன்- ஜூலை) ஆஷாட‌ நவராத்திரி, புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர்- அக்டோபர்) சாரதா நவராத்திரி, மார்கழி (டிசம்பர்-ஜனவரி) மாதத்தில் பாயூசாநவராத்திரி என பொதுவாக வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன.

இவற்றுள் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி மற்றும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி ஆகியவை முக்கியமானவைகளாகும்.

சித்திரையில் குளிர் காலத்திலிருந்து கோடை காலமும், புரட்டாசியில் கோடை காலத்திலிருந்து குளிர் (மழை) காலமும் ஆரம்பமாகின்றன.

எனவே பருவநிலை மாற்றங்கள் நிகழும் இந்த சமயத்தில் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படும் மாற்றங்களை சரிசெய்து புத்துணர்ச்சி பெறுவதற்காக இந்த காலங்களில் கடவுளை வழிபாடு செய்கின்றனர்.

பொதுவாக “நவராத்திரி” எனக் குறிப்படப்படுவது சாரதா நவராத்திரி ஆகும். நவராத்திரி என்பது புரட்டாசி மாதம் வளர்பிறை முதல்நாள் (பிரதமை) இரவு முதல் பத்தாவது நாள் (தசமி) பகல் வரை ஒன்பது இரவுகளும், பத்து பகல்களும் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது மைசூரில் தசரா என்றும், வங்காளத்தில் துர்க்கா பூஜை என்றும், தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகின்றது.

நவராத்திரி வழிபாடு

நவராத்திரியில் ஆற்றலின் வடிவமாக, செல்வத்தின் அதிபதியாக, ஞானத்தின் உருவமாக உள்ள பெரிய சக்தியை முறையே பார்வதி, இலட்சுமி மற்றும் சரஸ்வதி வடிவங்களில் வழிபடுகின்றனர்.

அன்னைக்கு மட்டும் ஏன் இந்த முக்கியத்துவம்? ஒன்பது இரவுகள் கொண்டாட்டம்?

ஏனெனில் கடவுளின் அன்பு, அரவணைப்பு, ஆதிபத்தியம், ஒப்பற்ற ஆற்றல், கருணை, புகழ், பெருமை ஆகியவற்றை அன்னையின் வடிவில்தான் உணரமுடியும்.அன்னை என்பவள் எல்லாவற்றுக்கும் காரணி. எல்லாவற்றையும் உருவாக்குபவள். 

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் பார்வதியை வழிபட்டு தம்மிடம் உள்ள அறியாமை, சோம்பேறித்தனம், மடமை ஆகியவற்றை நீக்க வேண்டுகின்றனர்.

வாழ்வில் தாம் செய்த குற்றங்கள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் அவை நிகழா வண்ணம் இருக்க வழிபடுகின்றனர்.

நடுவில் உள்ள மூன்று நாட்களில் இலட்சுமியை வழிபட்டு அன்பு, கடமை, தன்னடக்கம், நன்னடத்தை, பொறுமை ஆகியவற்றைப் பெற வேண்டுகின்றனர். மேற்கூறியவற்றைப் பெறுவதன் மூலம் மனத் தெளிவு பெற்று வாழ்வில் முன்னேற்றம் பெறலாம்.

அடுத்த மூன்று நாட்களில் சரஸ்வதியை வழிபட்டு ஞானம், கலை, அறிவுத்திறன், தன்திறன் ஆகியவற்றைப் பெற வேண்டுகின்றனர்.

ஒன்பது இரவுகளில் அம்மனை வழிபட்டு தம்மிடம் உள்ள குற்றங்களை நீக்கி நன்னடத்தை பெற்று உயர்ந்த ஞானத்தை அடைந்து இறுதியில் பத்தாவது நாள் பகலில் மேற்கூறியவற்றை பெற்றதன் அடையாளமாக வெற்றியைக் கொண்டாடி அம்மனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

நவராத்திரியில் ஏன் இரவு வழிபாட்டிற்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது?

இரவு என்பது உறக்கத்திற்கான நேரம். இந்த நேரத்தில் அம்மனை வழிபட்டு தம்மிடம் உள்ள குறைகளை (சோம்பல்) நீக்கி வாழ்க்கையின் உயர்ந்த நிலை அடைய உறுதி கொள்ள வேண்டும் என்பதனை உணர்த்த இரவு வழிபாடு செய்யப்படுகின்றது.

தமிழ்நாட்டில் நவராத்திரியின் போது களிமண்ணால் செய்த பொம்மைகளை கொண்டு கொலு வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.

நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலை வேளையில் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளோர் மற்றும் உறவினர்களையும் அழைத்து கூட்டு வழிபாடு நடத்துகின்றனர். வழிபாட்டின் இறுதியில் எல்லோர்க்கும் சுண்டல் மற்றும் புளியோதரை அளிக்கப்படுகிறது.

கொலுவின் முதல்படியில் இருந்து தாவரம், பூச்சிகள், விலங்குகள், மனிதர்கள், மகான்கள், தெய்வங்கள் என வரிசையாக இடம் பெறுகின்றன.

கீழ்நிலையிலிருந்து உயிரானது மனிதப்பிறவியை அடைந்து மகான், தெய்வம் என்ற உயர்நிலையை அடைய வேண்டும் என்ற உண்மையை கொலு உணர்த்துகின்றது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தோல் நோய்களை தடுக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு. எனவேதான் ஒவ்வொரு நவராத்திரி நாள் கொலு வழிபாட்டின் முடிவிலும் சுண்டல் வழங்கப்படுகின்றது.

நவராத்திரியின் இறுதி நாளான சரஸ்வதி பூஜை அன்று நடைபெறும் வழிபாட்டில் புத்தகங்கள், இசைக் கருவிகள் ஆகியவற்றை வைத்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்து விஜயதசமி நாளில் புத்தகங்கள், இசைக் கருவிகள் எடுக்கப்படுகின்றன.

அன்றே சரஸ்வதி பூஜை போன்று ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகின்றது. ஆயுத பூஜைக்காக எல்லோரும் அவரவர் தொழில் சம்பந்தமான கருவிகளை வைத்து வழிபாடு செய்கின்றனர்.

விஜயதசமி இரவில் கொலுவில் உள்ள ஏதேனும் ஒரு பொம்மையை சாய்த்து வைத்து அந்த வருட கொலு வழிபாடு நிறைவுக்கு வருவதை உணர்த்துகின்றனர்.

பழங்காலத்தில் கொலு பொம்மை செய்வதற்கு தேவையான களிமண் குளங்கள், கால்வாய்கள் மற்றும் ஆற்றுப் படுகைகளிலிருந்து எடுக்கப்பட்டது.

இதனால் நீர் நிலைகளின் நீர் தேக்கும் திறன் அதிகரிக்கப்பட்டது. இது விவசாய, பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுகமாக வித்திட்டது.

 

விஜயதசமி

நவராத்திரியின் ஒன்பது நாள் பகலும், இரவுமாக மகிசாசுரன் என்னும் அசுரனுடன் போர் புரிந்த துர்க்கா தேவி விஜயதசமி நாளில் அவனை வெற்றிகொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.

இராமாயணத்தில் இராமன், இராவணனுடன் போர் புரிந்து வெற்றி கொண்டதும் விஜயதசமியில் தான்.

மேலும் மகாபாரதத்தில் பாண்டவர்கள் தங்கள் அஞ்ஞான வாசம் முடித்து தங்கள் ஆயுதங்களை புதுப்பித்துக் கொண்டதும் விஜயதசமி நன்னாளில்தான்.

தற்போது புதிய தொழில் தொடங்குவதும், முதன் முதலில் குழந்தைக்கு கல்வி கற்றுக் கொடுப்பதும் விஜயதசமி நாளில்தான். ஆக மொத்ததில் நவராத்திரி என்பது கூட்டு வழிபாட்டு முறையை வலியுறுத்தும் முக்கிய விழாவாகும்.

வ.முனீஸ்வரன்