பாசம் தேடும் நவீன தசரதர்கள்

பரிணாம வளர்ச்சியில் பாசம் குறைகிறதா? நான் சிறுவனாக இருக்கும் பொழுது ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் எங்கள் வீட்டில் பசுமாடுகள் இருந்தன.

அதிகாலை நான்கு மணி அளவில் அம்மா பால்கறக்கும் பொழுது, நுரை தள்ளிய பாலில் பீச்சப் படும் அந்த ஒலி, அந்த நாத இனிமை, என் அடிமனதில் ஆழப் பதிந்திருக்கிறது. இன்றும் சில நாள்களில் அதிகாலைத் தூக்கத்தில் இருந்து எழும் மயக்க நிலையில் இருக்கும் என்னை, அந்த இனிய ஒலி ஆட்கொள்ளும்.

சில நேரங்களில் கன்றுக் குட்டி இறந்தால், கன்று இல்லாமல் பால் கறக்க அம்மா முயலும் பொழுது, பசு அடம் பிடிக்கும்; ஓங்கி உதைக்கும்; முரண்டு பிடிக்கும். அம்மாவிற்கு அதனால் காயங்கள் ஏற்பட்டதும் உண்டு.

அதற்குப் பின்னர் இறந்த கன்றின் தோலினை உரித்து எடுத்து, அதனுள் வைக்கோலைத் திணித்துப் போலிக் கன்றினைப் பசுவின் அருகில் நிறுத்திப் பால் கறந்த நாள்கள் இன்றும் எனது மனத்தில் பசுமையாக இருக்கிறது.

பலபடி பால் கறக்கும் பசுவிற்கு, ஒருபடி பாச உணர்வு குறைந்ததோ? என்று அந்த நாள்களில் நினைத்துப் பார்த்திருக்கிறேன்.

ஆனால், இன்று வைக்கோல் கன்று கூட இல்லாமல், பசுக்கள் பால் தருகின்றன. பட்டணங்களிலும், சிறுநகரங்களிலும் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் இந்நிலைமையைக் காணலாம்.

பசுக்களுக்கும் பாச உணர்வு குறைந்து போய் விட்டதா? அல்லது சொரணை கெட்டுப் போய் விட்டதா? உயிரியல் வளர்ச்சிப் படிநிலையில் பசுக்களுக்கு மட்டும்தான் இந்த நிலையா?

மனிதர்களுக்கும் பாசம் குறைந்து மரத்துப் போகின்றனரா? என்று சிந்தித்துக் கொண்டு இருந்தபொழுது, ‘மங்கையர் மலர்’ என்ற பத்திரிக்கையில் மீனாட்சி சூரிய நாராயணன் எழுதிய கவிதை, தற்செயலாக எனது கண்ணில் பட்டது.

ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் சிறுத்துப் போன இக்கால கட்டத்தில், நீங்களும் அக்கவிதையைப் படித்து ஒரு நிமிடம் மனத்தில் நிலை நிறுத்திப் பாசம் குறைகிறதா?  என்பதற்குப் பதில் தேடுங்கள்.

 

அடே! அசட்டு தசரதா!

அடே! அசட்டுத் தசரதா!
உன் அருமை ராமனைப்
பதினான்கு வருடம் பிரிந்ததற்கே
அவசரப்பட்டு உயிரை விட்டாயே!
நாங்களெல்லாம்
நவீன தசரதர்கள்!

நடுத்தர வர்க்கத்திலேயே
நாளும் நீச்சல் போட்டு,
நெஞ்சு நிறைய ஆசையுடன்
வங்கியில் கடனுடன் – எங்கள்
கண்மணிகளின் கல்வியைக்
கச்சிதமாய் முடித்துவிட்டு
‘அக்கடா’ என நிமிர்ந்தால்

கம்ப்யூட்டர் படித்த எங்கள்
கண்மணி ராமன்கள்
கைநிறைய காசுடன்
அமெரிக்க வாழ்வுக்கு
அடிமையாகி விட்டார்கள்!

இருவருட இடைவெளியில் – ஏதோ
எட்டிப் பார்க்கும் மகனை – அவனை
அரைக்கால் டிராயரிலும்
அமெரிக்கப் பேச்சிலும் – எங்களுக்கு
அடையாளம் கூடத் தெரிவதில்லை.

பதினான்கு வருடப் பிரிவிற்கே
புத்திர சோகம் என்று
புலம்பித் தள்ளினாயே!
முதுமை முழுவதும் தனிமையுடன்
முகம் தெரியா வியாதிகளுடன் முட்களின் மேல்
நாட்களை நகர்த்தும்
எங்களைக் கண்டிருந்தால்…..
ஒருவேளை நீயும்
உயிரை விட்டிருக்க மாட்டோயோ………..?
அடே! அசட்டுத் தசரதா!

– மீனாட்சி சூரிய நாராயணன்

 

பெற்றோர்கள் யாரும் தம் குழந்தையின் தேவைகளை நிறைவு செய்யும் போது, அவற்றை வெறும் கடமையாக நினைப்பதில்லை; வாழ்க்கையின் அங்கமாகவே அங்கீகரிக்கிறார்கள்.

ஆனால் குழந்தைகளோ, பெரியவர்களான பின்பு, இப்போது மன தளவில் குழந்தைகளாகி விட்ட தமது பெற்றோர்களைப் பராமரிப்பதை வெறும் கடமையாகவே நினைக்கிறார்கள். அதைக்கூடப் பலபேர் செய்வதில்லை.

பொதுவாகவே ஒரு மனிதனுக்குப் பணத்தைவிட உறவுகளின் நெருக்கமே நிம்மதி தரும். அதுவும் வயதான காலத்தில் கோடிக் கணக்கான பணம் தராத நிம்மதியை உறவுகளின் அன்பான வார்த்தைகளே தரும்!

பல பெற்றோர் தம் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு, வீட்டில் ஒண்டிக் கட்டையாகத் தனிமையில், உடல் தளர்ந்த முதிய பருவத்தில் அவர்களின் மனச்சுமையைத் தாங்க உறவின்றித் தனிமைச் சிறையில்  இருந்து கொண்டிருக்கிறார்கள். ஐயோ! பாவம். ‘இவர்களல்லவோ நவீன தசரதர்கள்’.

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.