நாங்களும் மனுஷங்கதான் – சிறுகதை

அபிராமி ஹோட்டல் காம்ப்ளக்ஸிலுள்ள வசந்தபவனில் ராஜேஷூம் மகேஷூம் ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டு சுவாரசியமாக எதையோ பேசிச் சிரித்துக் கொண்டு நுழையும்போது மாலை மணி ஆறு.

“டேய் படம் முடிந்து டிபன் சாப்பிட்டுக்கலாம். ஜஸ்ட் எ கப் ஆஃப் காஃபி எனஃப் நௌ” – இது ஃபைனல் எக்னாமிக்ஸ் மகேஷ்.

“ஐயையோ நமக்குத் தாங்காதும்மா! பிக்சர் ஆறரைக்குத்தான். தியேட்டர் அவ்வளவு சீக்கிரம் ஹவுஸ்ஃபுல் ஆகாது. வாயை மூடிக்கிட்டு டிபன் சாப்பிடு கண்ணு”- இது செகண்ட் இயர் பி.எஸ்.ஸி பாட்டனி ராஜேஷ்.

ராஜேஷின் வலுக்கட்டாயம் மகேஷின் கோரிக்கையை விழுங்க, இருவரும் எதிர்ப்பட்ட காலி டேபிள் முன் அமர்ந்தனர்.

பவ்யமாக பேரர் வந்து மெனுக்களை ஒப்பித்துக் கட்டளைக்காகக் காத்திருக்க, “ரெண்டு மசால் தோசை, அப்புறம் காஃபி. சீக்கிரம் குடுப்பா” டேபிள் மீது விரல்கள் மத்தளமிட, ராஜேஷ் ஆர்டர் செய்தான்.

அடுத்த எட்டாவது நிமிடம் அவர்களின் கட்டளை பேரரால் நிறைவேற்றப்பட்டது.

உலக நடப்புகளை எல்லாம் விமர்சித்தவாறே சாப்பிட்டு முடித்து, வாஷ்பேசினுக்குச் செல்லும் வழியில் அடுத்தடுத்த டேபிள்களில் அமர்ந்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்த குயின்களை ராஜேஷ் சைட் அடிக்கத் தவறவில்லை.

திரும்ப வந்து அமர்ந்ததும் இவர்களுக்காகப் பிளேட் ஒன்றில் ‘பில்’ காத்திருந்தது.

மகேஷ் பர்ஸை எடுக்கப் போக, ராஜேஷ் பில்லைக் கவனித்தவாறே அவன் கையைப் பிடித்துத் தடுத்தான்.

“டேய், இந்த வேலை எல்லாம் எங்கிட்ட வச்சுக்காதே. உங்கிட்ட பணம் இருக்குங்கிறதைக் காண்பிக்க இன்னும் நெறைய சந்தர்ப்பம் இருக்கு. அப்போது வெளுத்துக்கட்டு. பர்ஸை உள்ளே வை இப்போ” என்றவாறே ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றைப் பிளேட்டில் வைத்தான்.

பில்தொகை போக, மீதியை இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களாகவும், ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும், மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களாகவும் பிளேட்டில் கொண்டு வந்து தந்தார் பேரர்.

“என்னப்பா கணக்கு” என்றான் ராஜேஷ்.

“ரெண்டு மசால் தோசை, ரெண்டு காஃபி வரி இருபது ரூபாய்” பவ்யமாகச் சொல்லிவிட்டு டேபிள் அருகிலேயே காலி பிளேட் ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டு அடுத்த கஸ்டமருக்காகப் பேரர் காத்திருந்தார்.

ஒரு ரூபாய் நோட்டையும் விடாமல் அனைத்தையும் எடுத்துக் கொண்டு எழுந்திருந்த ராஜேஷிடம்,

“ராஜேஷ் ஏதாவது டிப்ஸ் வைப்பா. இல்லைன்னா நான் வைக்கிறேன்” என்றவாறே பத்து ரூபாய் நோட்டு ஒன்றைப் பிளேட்டில் போட்டான் மகேஷ்.

“டேய், டிப்ஸ் வைக்கத் தெரியாமலா இருக்கேன். ஏற்கனவே ரெண்டு மசால் தோசைக்கும், ரெண்டு காஃபிக்கும் வரி போட்டிருக்காங்க இதுல டிப்ஸ் வேறயா?

சரியான கொள்ளைக்காரப் பயல்களாய் இருப்பாங்க போலிருக்கு. ஒரு மசால் தோசை எண்பது ரூபாயா? நல்லா கொள்ளைப்பா.

நிக்காறான் பாரு டிப்ஸூக்கு. இதே பொழைப்பாய் போச்சு இந்த பயல்களுக்கு. சம்பளம்தான் வாங்கறான்களே? அப்புறம் இது என்ன கொசுறு?” என அலட்சியமாகச் சொல்லியவாறே மகேஷ் போட்ட பத்து ரூபாயையும் எடுத்துக் கொண்டு பேரரை முறைத்தவாறே வெளியே கிளம்பினான் ராஜேஷ்.

அதிர்ச்சி கலந்த வேதனையுடன் ராஜேஷை நோக்கிப் பேரர் ஏதோ சொல்ல வாயெடுக்க, அதற்குள் நான்கு பேர் அந்த டேபிளைச் சுற்றி அமர்ந்து கொள்ளவும், பேரர் வேதனையை மறைத்து வந்தவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான்.

சாப்பிட்டு முடித்தவர்களுக்குப் பில்லை வாங்கிக் கொண்டு டேபிளை நோக்கி நகரும்போது தான் பேரர் வெளியே கவனித்தான்.

ராஜேஷூம் மகேஷூம் சிகரெட்டும் கையுமாக அங்கு வந்து சேர்ந்த வேறு சில மாணவர்களுடன் சிரித்துப் பேசியவாறே ஒவ்வொருவருக்கும் சிகரெட் சப்ளை செய்து கொண்டிருந்தனர்.

மற்றொரு பேரர் ஒருவரிடம் தன்னுடைய டேபிளைச் சற்று நேரம் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே வந்தான் அவன்.

அந்த சமயம் வெளியிலிருந்து வந்த மாணவர்களில் ஒருவன் அலுத்துக் கொண்டே “அட போங்கப்பா…ஹவுஸ்ஃபுல் ஆயிடுச்சு பிளாக்கிலே ஒரு டிக்கெட்டு 250 ரூபாய் விக்குது. சூப்பர் ஸ்டார் படத்தை சூட்டோட சூடாப் பார்க்கலேன்னா தலை வெடிச்சிடும். சீக்கிரம்… எடு… பணத்தை…” என்று அவரசப்பட,

ராஜேஷ் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து ரூபாயை எண்ணிக் கொடுக்க, எல்லோருமாக ஆரவாரித்தவாறே கிளம்பினார்கள்.

“எக்ஸ்கியூஸ் மீ சார்….” என்றொரு குரல் தனக்கு மிகஅருகே கேட்டதும் ராஜேஷ் திரும்பினான். அவர்கள் சாப்பிட்ட டேபிளுக்குரிய பேரர்!

“டேய் எவ்வளவு தெனாவட்டு இருந்தா, துரத்திக்கிட்டு வந்து டிப்ஸ் கேட்பே? வாசலுக்கே வந்துட்டியா டிப்ஸ் கேட்க? பேசாம ஒண்ணு செய். இப்படியே துண்டைப் போட்டுக்கிட்டு உட்காரு. போறவங்க வர்றவங்க எல்லாம் பைசா போட்டுட்டுப் போவாங்க” என்றான் ராஜேஷ் ஏளனமாக.

“மிஸ்டர் ஜஸ்ட் எ மினிட். உங்க சினிமா அவசரம் எனக்குப் புரியுது. வார்த்தைகளைக் கொஞ்சம் அளந்து பேசுங்க.

பேரர்னா ரொம்ப கேவலமா நினைக்காதீங்க பிரதர். நாங்களும் மனுஷங்கதான். இங்கே இருக்கிற பேரர்களில் ஆறுபேர் கிராஜூவேட்.

நான் ஒரு போஸ்ட் கிராஜூவேட். எம்.எஸ்ஸி பாட்டனி முடிச்சிட்டு இரண்டு வருஷமா வேலைக்கு அலைஞ்சு, திரிஞ்சு எதுவும் கிடைக்காம இங்கே பேரரா வந்து சேர்ந்திருக்கேன்.

உங்களை டிப்ஸ் கொடுக்கச் சொல்லி நாங்க கம்ப்பல் பண்ணல பிரதர். நீங்களா விரும்பிக் கொடுத்தா வாங்கிப்போம்.

முதலாளிங்க கொடுக்கற சம்பளம் எங்களுக்கு அடிப்படைச் சம்பளம். நீங்க எல்லாம் கொடுக்கறீங்களே அதுதான் எங்களுக்குக் கிடைக்கிற டியர்னஸ் அவலன்ஸ். அதாவது கிராக்கிப்படி.

நீங்க இப்போ தண்ணீர் மாதிரி செலவு செய்கிற பணம் இருக்கே, அதையெல்லாம் எங்களைப்போல எத்தனையோ பேரர்களுக்குக் கிராக்கிப்படியா தராமப் போனாலும் பரவாயில்லே; பணத்தோட மதிப்பை உணர்ந்து சேமிச்சு உங்கள் எதிர்கால வாழ்க்கையை நல்லா சீரமைச்சுக்கங்க தம்பி.

இல்லேன்னா நீங்களும் இந்த யூனிஃபார்ம்ல இருக்க வேண்டிய கட்டாயம் ஒருநாள் கண்டிப்பா வரும். மறந்துடாதீங்க” என்றார் பேரர்.

தன் நண்பர்கள் தன்னைவிட்டுச் சென்று விட்டதையும் மறந்து நின்று கொண்டிருந்த ராஜேஷூக்குப் பேரரின் வார்த்தைகளிலிருந்த நியாயம் புலப்பட, இனம் புரியாத எதிர்கால பயம் ஒன்று அவன் மனதைக் கவ்விக் கொண்டது.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.