நான் விரும்பும் நல்லாட்சி

அந்நியரை விரட்டி ஆரம்பித்தோம் நம் குடியாட்சியை! ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்தோம் நம் தலைவர்களை!

“எல்லோரும் இந்நாட்டின் மன்னர்களே” என்ற அடிப்படையில் மக்களை மக்களே ஆளும் குடியாட்சி “நல்லாட்சியாக” அமைய வேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் கனவு.

நல்லாட்சி என்றால் திரும்பிய திசையெல்லாம் பாலாறும் தேனாறும் ஓட வேண்டும் என்பதில்லை. அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, சமதர்மம் இருந்தாலே போதும். “வறுமையே வெளியேறு” என்று வாய்திறந்து முழங்கினால் மட்டும் போதாது. வறுமை வாசற்கதவை தட்டாது இருக்க உழைத்து முன்னேற வேண்டும்.

வளர்ந்து வரும் நம் இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது வறுமை, கல்லாமை, அதனால் ஏற்படும் இயலாமை. இவற்றைக் களைய அரசு பல நல்ல திட்டங்கள் ஏற்படுத்தியும் போதுமான நிறைவு ஏற்படவில்லை. காரணம் கடைக்கோடி மனிதனையும் இத்திட்டங்கள் சரியான முறையில் சென்றடையவில்லை என்பது தான். தன் நிலை மறந்து புகழ், ஆடம்பர மாயைகளில் சிக்கி ஊழலுக்குப் பணிந்தவர்களால் தான் நாம் அல்லல்பட வேண்டியுள்ளது.

நாம் சிந்திக்க வேண்டும், சிந்தனையை ஓட்டுப்பெட்டிகள் மூலம் செயலாக்க வேண்டும். நம் நாட்டில் புரையோடிக் கிடக்கும் சாதிவேறுபாடுகள், சமுதாய ஏற்றத் தாழ்வுகள், பொருளாதாரத் தடைகள், மொழிவாரி வேற்றுமைகள், ஜனநாயகத்தின் உயிரைப் பறிக்கும் ஊழல் இவற்றை களை எடுக்க வேண்டும். இவை இல்லாத ஆட்சி தான் நல்லாட்சியாகக் கொள்ள முடியும்.

மக்களின் தேவைகளை அடிப்படையில் இருந்து சீர்தூக்கிப் பார்த்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயரச் செய்வதோடு, தொண்டு மனப்பான்மையுமே நல்லாட்சியின் தத்துவமாகும்.

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் ஆயிரக் கணக்கான மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே காரண காரியங்களோடு சமாதானம் கூறமுடியாத காரியங்களை நாம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றார் நம் தேசத்தந்தை காந்தியடிகள். இதனை நம் இளைய சமுதாயம் பசுமரத்தாணி போல் மனதில் கொள்ள வேண்டும்.

நம் தேசத்திற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நேர்மையானதாக அமைய வேண்டும். இதற்கு ஒரு நல்ல வழிகாட்டுதலை நாம் விழிப்புடன் தேர்ந்தெடுக்க வேண்டும். நம்மால் முடியும் என்று அனைவரும் ஒரே நேர்கோட்டில் சீராக பயணித்தால் நாம் விரும்பும் நல்லாட்சி என்ற கனவு நனவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை!