நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள்- ‍நூல் மதிப்புரை

‘நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள்’ எனும் தலைப்பில் பேராசிரியர் பாரதிசந்திரன் அவர்கள் எழுதியுள்ள இந்தப் புத்தகம் ஒரு வரலாற்றுப் பெட்டகமாக மின்னுகிறது.

கோயில்கள் பற்றிய தெளிவற்ற, ஆன்மீகத்தில் இன்னும் அரிச்சுவடி நிலையிலே இருக்கும் என்னைப் போன்றவர்கள் கூட, உடனடியாக நூலுடன் ஒன்றிப் போகும் அளவிற்கு இந்தப் புத்தகம் சிறப்பாக‌ எழுதப்பட்டுள்ளது.

ஆன்மீக நூல் மட்டுமல்ல‌

நான் வாசிக்கும் முதல் ஆன்மீகப் புத்தகமிது. கண்டதும் காதல் போல், இந்தப் புத்தகத்தின் காதலனாகவே மாறிவிட்டேன். ஆசிரியரின் மற்ற புத்தகங்களை மாற்றி வைத்துவிட்டேன்.

எனக்குக் கடவுள் நம்பிக்கையை விட, கடவுள் தேடுதலை விட, கோயில்கள் பற்றிய பிரமிப்பு இன்னமும் நெஞ்சை விட்டு நீங்காமல் இருந்து வருகிறது.

குறிப்பாகத் தஞ்சையில் பெரிய கோயிலைப் பார்த்த பின்பு, என்னுள்ளே ஏகப்பட்ட கேள்விகள்; குழப்பங்கள்.

எல்லாவற்றிற்கும் பாரதிசந்திரன் இந்த நூலில் பதிலாக, பாடமாக எழுதித் தந்துள்ளார்.

இந்தப் புத்தகம், வெறும் ஆன்மிகத்தைப் பற்றிப் பேசியிருந்தால், ஆன்மீகம் பேசும் நூல்களில் இதுவும் ஒன்று என்ற நிலையிலேயே அது இருந்திருக்கும்.

ஆனால் இந்நூல் வரலாற்றையும், அரசியல் நிகழ்வுகளையும், அதைச்சார்ந்த பல முக்கியச் செய்திகளையும் கொண்டு ஒரு களஞ்சியமாகத் திகழ்கிறது.

தங்கப் புதையல் மற்றும் சுரங்கப் பாதை போன்ற செய்திகள் ஆச்சரியத்தையும் ஆவலையும் ஏற்படுத்துகின்றன.

‘ஓர் இனத்தை அழிக்க, அதன் வரலாற்றை அழிக்க வேண்டும்’ என்பார்கள்.

தமிழ்ச் சமூகத்தின் அந்த பயத்தை, பாரதிசந்திரன் இந்த நூல் மூலம் போக்கி இருக்கிறார். பண்டைய வரலாற்றை, குறிப்பாகச் சோழர்களின் வரலாற்றை இந்தக் கோயிலின் வழி பேசியிருக்கிறார்.

இந்த நூலை எழுத, அவர் கடுமையான உழைப்பைப் போட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

கோயில் பற்றிய முழுமையான ஞானம் இல்லாவிட்டால், அதன் அமைப்பைப் பற்றி விளக்க முடியாது.

அப்படிப் பார்த்தால் இவர் இதற்காக நிறையப் படித்து, கேட்டறிந்து, விசாரித்து, பயணம் செய்து, எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, இந்த நூலில் அழகாகத் தெளிவாக விவரித்து உள்ளார்.

சின்னச் சின்ன விஷயங்களையும் மிகத் துல்லியமாகப் பொருத்தமாக ஆதாரத்துடனும் நம்பகத் தன்மையுடனும் எழுதியிருக்கிறார்.

என்னைப் போன்ற ஆன்மீகம் பற்றியும் கோவில்கள் பற்றியும் தெரியாத, படித்த நபர்களுக்கு மிக எளிமையாகப் புரியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளார்.

ஆட்கொண்ட நூல்

சில சமயம் புத்தகங்கள் அப்படி நம்மை ஆட்கொண்டு விடும். இந்தப் புத்தகமும் அப்படித்தான் என்னை எங்கெங்கோ அழைத்துச் செல்லுகிறது.

நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள் புத்தகத்தை நான் வாசிக்கும் போது, நானும் பல்லவர், சோழர் காலத்தில் வாழும் நபராகவே மாறும்படி இருக்கிறது.

நானும் ஒரு வணிகன் போல் அந்தப் பகுதிகளில் பயணிப்பது போன்ற எண்ணங்கள் எனக்குள் தோன்றிச் சுக அனுபவத்தைப் பெற முடிகின்றது.

சில சமயங்களில், நானே கவசம் அணிந்து வாளெடுத்து, முத்தரையர்களும் சோழர்களும் பாண்டியர்களும் மற்றும் குறுநில மன்னர்களும் ஆட்சி செய்த நார்த்தாமலையில் சுற்றித் திரிவதாக எனக்குள் கற்பனை ஓடுகிறது.

எனக்கும் நார்த்தாமலை கோயிலுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகவே இப்போது என் மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. அது பிரமையோ உண்மையோ தெரியவில்லை.

கோயில்களும், அதைச் சுற்றியப் பண்பாட்டுக் கூறுகளும் ஒரு சமூகத்தின் அறிவு மேம்பாட்டையும், ஒழுக்கத்தின் சிறப்பையும் எடுத்து ஓதுபவையாக அமைகின்றன என்பர் பண்பாட்டு ஆய்வாளர்கள்.

கிரேக்கக் கட்டுமானப் பணிகளும், தமிழகத் தொல் கட்டுமானங்களும் அறிவியல் கூறுகளோடு ஆச்சர்யங்களும் நிறைந்து ஒருமித்திருப்பவை.

உலகக் கட்டுமானங்களில் சில மீள முடியாத வியப்பைத் தந்து நம்மை மிரட்டுபவை. அந்த வகையில், தமிழகக் கட்டுமானங்களில் குறிப்பிடத் தகுந்தவைகளில் நார்த்தாமலையும், அதைச் சுற்றிய பகுதிகளிலுள்ள கட்டுமானங்களும் சாட்சிகளாகும்.

பண்டைய அரசர்கள் மிகவும் புத்திசாலிகள். தங்கள் வரலாற்றை, வாழ்வியலை அவர்கள் புத்தகமாக ஆக்கவில்லை. அப்படி ஆக்கியிருந்தால், அதைக் குண்டு போட்டுப் பொசுக்கி இருப்பார்கள்.

அதற்குப் பதிலாக வாழ்வின் அடையாளங்களைக் கோயில்களாக, கல்வெட்டுகளாக, நீர் ஆதாரங்களாக, அணைக்கட்டுகளாக மாற்றி, அழியா ஆதாரமாக விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பது விளங்குகிறது.

இந்த நூலில், கோயில் பற்றிக் குறிப்பிடும்போது, அது, படை வீரர்கள் தங்கும் இடமாக இருந்திருக்கலாம்; அதற்கான அடையாளமாக அந்தச் சுவர்கள் இருக்கிறது என்ற விபரத்தையும் தந்துள்ளார்.

நான் முன்பு சொன்னது போல், கோயில் என்றால் கடவுள் பற்றியும், கடவுளின் அருள் பற்றியும், அதனால் நடந்த சாதக, பாதகங்களைப் பற்றியும் தான் இருக்கும் என்றில்லாமல், வரலாற்றோடும், உண்மையோடும் இந்தச் செய்திகளை மிக மிக அழகாகக் கோர்வையாகத் தொகுத்து இருப்பதைக் காணமுடிகிறது.

எதிர்கால மனிதர்களுக்கு எதுவும் தெரியாமல் போய் விடக்கூடாது என்பதற்கான ஓர் ஆவணமாக இக்கோயில்கள் இருக்கின்றன.

பாரதிசந்திரன் அவர்கள் எனக்குத் தெரிந்த வரையில் எந்தப் பிரதிபலனும் பாராமல், இலக்கியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, எழுத்து படிப்பு என்று சதா இயங்கிக் கொண்டிருக்கிறார். அதற்காக எந்த கஷ்டத்தையும் துயரத்தையும் தாங்கிக் கொள்ளத் தயாராகவே இருக்கிறார்.

பெரும்பாலும் ஆன்மீக நூல்கள், வரலாற்று நூல்கள் வாசகர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அவற்றின் இயல்பு அப்படித்தான். மிக நீண்ட விவரங்கள், மிக நுணுக்கமான விவரங்கள் மற்றும் அதைச் சார்ந்த நிகழ்வுகள் என்று எழுத வேண்டியிருக்கும்.

ஆனால் இந்த நூல் அப்படி அல்ல. எந்தச் சலிப்பும் ஏற்படவில்லை. சரளமாக இதைப் படிப்பதற்கும், ஒரே மூச்சில் படித்து முடிப்பதற்கும் ஏதுவாக எழுதியிருக்கிறார்.

அதே சமயத்தில் சொல்ல வந்த கருத்துகளில் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாமல், தகவல்களை மறைக்காமல், திரிக்காமல், உரிய ஆதாரங்களுடனும் தந்திருக்கிறார்.

சரித்திரங்கள் சூழ்ந்த, சாகசம் நிறைந்த, நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள், கட்டாயம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

One Reply to “நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள்- ‍நூல் மதிப்புரை”

  1. அழகான புத்தக மதிப்புரை.

    கூர்மையாக யொசித்து நுணுக்கமாக ஆராய்ந்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

    இதைப்படித்தவுடன் நூல் வாங்க வேண்டும் போல் உள்ளது.

    நன்றி- கட்டுரை ஆசிரியருக்கும் இதழின் ஆசிரியருக்கும்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.