நாற்காலி – எத்தனை வகைக‌ள்?

இன்றைய நவீன உலகில் எத்தனை வகை நாற்காலி உள்ளது? கடைசல் வேலைப் பாடுகளுடன், கலைஞனின் கைவண்ணமும் கற்பனையும் கலந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய நாற்காலிகளை நாம் பார்க்க முடிகிறது.

இந்த நாற்காலி நாகரிகம் பழந்தமிழரிடம் இருந்ததற்குச் சான்றுகளாக இலக்கியக் குறிப்புகளோ, ஓவியங்களோ, கல்லெட்டுக்களோ காணப்படவில்லை.

அரசர்கள் பயன்படுத்தும் அரியாசனம் தவிர சாதாரண மக்களுக்கான நாற்காலிகளைப் பற்றி யாதொரு குறிப்பும் இல்லை.

ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னரே மேல்தட்டு இந்தியரிடம் நாற்காலி நாகரிகம் பரவத் தொடங்கியது. அவர்களை வரவேற்கும் பொருட்டே, இந்தியாவின் மேல்தட்டு வகுப்பினர் நாற்காலியைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

ஆன்மிகமும் நாற்காலியும்

சமீபத்தில் ஒரு விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கு நாற்காலியில் பட்டு மெத்தையிடப்பட்டு மலர்கள் தூவி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் சாய்பாபா வீற்றிருப்பதாகப் பக்தர்களுக்கு ஒரு நம்பிக்கை.

மற்றொரு நாள் முதியோர் இல்லம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அதன் நுழைவாயிலில் அலங்கரிக்கப்பட்ட நாற்காலி ஒன்றைப் பார்த்தேன்.

இல்லத்தின் பொறுப்பாளரிடம் விபரத்தினைக் கேட்ட பொழுது, மாதா அமிர்தானந்தமயி அமர்வதற்காக அலங்கரிக்கப் பட்டுள்ளது என்று கூறினர்.

ஆன்மிக உலகில் நாற்காலிக்கு அவ்வளவு மரியாதை இருக்கிறது.

அரசியலும் நாற்காலியும்

அரசியல் உலகிலும் நாற்காலிக்குத் தனி மவுசுதான். நாற்காலி என்றாலே பதவி என்ற பொருளையே அரசியல் அகராதி தருகிறது.

பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்கள், ஏன் திருமண விழாக்களில் கூட உயர்பதவியில் இருப்பவர்கள் அல்லது கௌரவிக்கப்பட வேண்டியவர்களுக்குப் போடப்படும் நாற்காலிகள் மற்றவர்களின் நாற்காலிகளை விட உயர்ந்த வகையினதாக இருக்கக் காணலாம்.

நானும் நாற்காலியும்

என்னுடைய திருமணத்தின் போது ஆசிரியர்கள் சார்பாக எனக்கு ஒரு பரிசு வந்தது.

நல்ல பிளாஸ்டிக் வயரால் பின்னப்பட்ட ‘S’ டைப் நாற்காலி. அதில் அமர்ந்தாலே கம்பீரமாக உணர்வேன். கடந்த இருபத்து எட்டு வருடங்களாக அது என்னைத் தாங்குகிறது.

என்னைத் தவிர இந்த நாற்காலியில் என் மனைவியோ, மகளோ, உறவினரோ யாரும் அமர்வதில்லை. அதற்கு அப்படி ஒரு மரியாதை.

பள்ளியும் நாற்காலியும்

சில வருடங்களுக்கு முன்பு ஓர் ஆசிரியர் மாணவனை அடித்துப் பின்னிவிட்டார். காரணம் அம்மாணவன் அவரது நாற்காலியில் அமர்ந்து அவரை அவமதித்து விட்டானாம்.

ஆசிரியர் பயன்படுத்துவாரோ மாட்டாரோ இன்றும் பள்ளிகளில் ஆசிரியரின் நாற்காலிக்கு ஒரு கௌரவம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

சில கல்வி நிலையங்களில் தேர்வுச் சமயங்களில், ஆசிரியர்கள் அமர்ந்துவிடக் கூடாதே என்று அனைத்து நாற்காலிகளையும் ஒரு அறையில் போட்டுப் பூட்டிவிட்டு, சுழல் நாற்காலியில் இருக்கும் படுபாதகர்களும் இருக்கிறார்கள்.

எங்கள் பள்ளியில் கருப்பையா என்ற மூத்த ஆசிரியர் முன்பு என்னுடன் வேலை பார்த்தார். தலைமையாசிரியரின் அறைக்குள் நுழைந்ததும் தலைமையாசிரியரின் நாற்காலிக்கு இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்வார்.

நாற்காலியில் தலைமையாசிரியர் இல்லாவிடினும் கூட நாற்காலிக்கு அவ்வளவு மரியாதை!

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்