நிலத்தடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 25

‘மக்கும் குப்பைகளை, வீட்டுத் தோட்ட மண்ணில் புதைத்து வைத்தால், மண் வளம் கூடுமே. அந்த செழிப்பான மண்ணை பயன்படுத்த, செடிகள் நன்றாக வளருமே’ என்ற எண்ணம் வெகுநாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

இன்று இந்த வேலையை செய்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.

வீட்டின் பின்புறத்தில் இருந்த தோட்டத்திற்குச் சென்றேன். மண்வெட்டியை பயன்படுத்தி ஒரு சிறிய பள்ளத்தை உண்டாக்கினேன்.

இன்னும் ஆழத்தை அதிகப்படுத்தலாம் என்று தோன்றியது. அதன்படி, பள்ளத்தின் ஆழத்தை மேலும் அதிமாக்கினேன்.

முதலில் மண் வற‌ண்டுதான் இருந்தது. ஆனால், தோண்ட தோண்ட மண் ஈரத்துடன் இருந்தது.

அதற்கிடையே, எனக்கு நன்றாக வியர்க்க ஆரம்பித்துவிட்டது. முகத்தில் வழிந்த வியர்வைத் துளிகள் நிலத்தில் சிந்தின.

சோர்வும் தொற்றிக் கொள்ள, சில நிமிடங்கள் அமைதியாக நின்றேன். மீண்டும் அந்த பள்ளத்தை தோண்ட முயன்றேன்.

பள்ளத்தில் சில மில்லிலிட்டர் அளவு நீர் தேங்கியிருந்தது. ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

அப்பொழுது நெற்றியில் வழிந்த வியர்வை துளிகள் பள்ளத்தில் ஊறியிருந்த நீரில் சொட்டின.

“என்ன சார் புதுசா வேர்வ சிந்த வேல பார்க்குறீங்க?” என்று நீர் கேட்டது.

நீர் தான் பேசுகிறது என்று தெரிந்து கொண்டேன்.

“என்னது? புதுசாவா! நானும் வேர்க்குற‌ அளவுக்கு வேல செஞ்சிருக்கேன்.”

“என்ன வேல சார்?”

“இம்ம்.. காலைல வேலைக்கு போகும்போது, வீட்டில இருந்து பேருந்து நிலையம் வரைக்கும் ஓடாத குறையா நடந்து போவேன். அப்போ வராத வேர்வையா?”

“நடக்கிறதே உங்களுக்கு பெரிய வேலையா?” – நகைப்புடன் கேட்டது நீர்.

நான் பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால், நீருக்கு சொல்ல வேண்டிய தகவல் ஒன்று அக்கணம் என் நினைவிற்கு வந்தது.

உடனே, “நிலத்தடி நீரை பற்றி தெரியுமா?” என்றேன்.

“நீங்க எனக்கு ஏதேதோ பேர் இருக்கிற‌தா சொல்லியிருக்கீங்க. அதுமாதிரி நிலத்தடி நீரும் எனக்கு இருக்கிற மற்றொரு பேரா?”

“ஆமாம்”

“நல்லது சார். அப்ப அதுபத்தி எனக்கு சொல்லுங்க.”

நிலத்தடி நீர்

“இம்…ம்… நிலத்தடி நீர் என்பது நிலத்தடியில் தேங்கும் நீர் தான்.”

“அதான் பேர்லையே தெரியுதே. இன்னும் விவரமா சொல்லுங்க சார்.”

“சரி சரி சொல்றேன். நிலத்தடி நீரானது புவியின் மேற்பரப்பிற்கு அடியில் மண் துகள்களுக்கு இடையே உள்ள துளைகளிலும், பாறை விரிசல் அல்லது பாறை துண்டுகளுக்கு இடையிலும் தேங்கி இருக்கும் நீர் ஆகும்.

நிலத்தடி நீரானது புவியின் மேற்பரப்பில் இருந்துதான், தனது நீரை எடுத்துக்குது. அதாவது, மழை பெய்யும் போது, நீர் மண்ணில் ஊடுருவி நீர் மட்டத்தை அடையும் வரை கீழ்நோக்கி ஊடுருவிச் செல்கிறது.

மண் வகையைப் பொருத்து ஊடுருவும் நீரின் அளவு அமைகிறது. குறிப்பாக, சரளை மண்ணில் அதிக அளவு நீர் எளிதாக ஊடுருவிச் செல்லும்.”

“அப்படியா?”

“ஆமாம். இன்னும் ரெண்டு செய்தி இருக்கு. ஒன்னு ‘நிலத்தடி நீர் படுகை’ ஆங்கிலத்துல Aquifer-ன்னு சொல்லுவாங்க. மற்றொன்று ‘நிலத்தடி நீர் மட்டம்’ முதல்ல, ‘நிலத்தடி நீர் படுகை’ பற்றி சொல்றேன்”

“சொல்லுங்க சார்”

“ஒரு குறிப்பிட்ட அளவு பாறைகளோ அல்லது கெட்டிபடாத பாறை படுகையோ, பயன்படுத்தும் வகையில் இருக்கும் நீரை தந்துச்சுன்னா அதை ‘நிலத்தடி நீர் படுகை’ன்னு சொல்றாங்க.

மண் துளைகள் அல்லது பாறை பிளவுகள் அல்லது பாறை இடையில் காணப்படும் வெற்றிடம் நீரால் நிரப்பப்பட்டு இருக்கும் ஆழத்திற்கு ‘நிலத்தடி நீர் மட்டம்’ என்று பெயர்.”

“சரி சார். மண்ணுக்கு மேல இருக்கும் நீர், நிலத்தடி நீர் மட்டத்தை சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும்?”

“மழை நீர், நிலத்தடி நீரானது தனது மட்டத்தை அடைய பல மாதங்கள், ஏன் பல ஆண்டுகள் கூட ஆகுமாம்.”

“அப்படீன்னா, இப்ப நிலத்தடியில சேமிக்கப்பட்டிருக்கும் நீர் பல வருடங்களுக்கு முன்பு பெய்த மழை நீரா?”

“இருக்கலாம். சில நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழைநீர் கூட நிலத்தடி நீராக இருக்கலாம்.”

“சரி சார், எனக்கு ஒரு சந்தேகம்.”

“சொல்லு”

“நிலத்தடி நீரின் அளவு எல்லா இடங்கள்லையும் சமமா இருக்குமா?”

“இல்ல. பாறைகளின் வகை உள்ளிட்ட நில அமைப்பு மற்றும் பிற காரணிகளைப் பொருத்து நிலத்தடி நீரின் அளவு வேறுபடுது.

சில இடங்கள்ல மேற்ப‌ரப்பு நீரின் அளவைவிட நிலத்தடி நீரின் அளவு தான் அதிகமாம். அதோட, உலகில் உள்ள அனைத்து நிலத்தடி நீரையும் பூமியின் மேற்பரப்பில் குவித்தால், அது 120 மீட்டர் உயரம் வரை நிரப்பும் எனவும் ஒரு ஆய்வு சொல்கிறது.”

“ஆச்சரியமா தான் இருக்கு. ஆனா, நிலத்தடி நீர நீங்க எப்படி எடுப்பீங்க?”

“கிணறு, போர் மூலமாகத்தான்”

“ஆமாம்ல… சரி நிலத்தடி நீரால உங்களுக்கு என்ன நன்மை?”

நிலத்தடி நீரின் நன்மைகள்

“அப்படிக் கேளு. நிலத்தடி நீர்தான் எங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமே. துணி துவைக்கிறது, பாத்திரம் கழுவறது உள்ளிட்ட எல்லாப் பயன்பாட்டுக்கும் நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்துறோம். நான் சின்னப் பையனாக இருந்த போது, நிலத்தடி நீரை குடிநீராகப் பயன்படுத்தியது எனக்கு நினைவுல இருக்கு.”

“இப்ப என்னாச்சு?”

“இப்ப, எங்க பகுதியில இருக்கும் நிலத்தடி நீருல உப்பு அதிகமாயிடுச்சு. அதனால அத குடிக்க பயன்படுத்துறது இல்ல.”

“சரி சார். நிலத்தடி நீரால வேறு நன்மைகள் இருக்கா?”

“ஓ..இருக்கே. நிலத்தடி நீரானது விவசாயத்திற்காகவும், மாநகர தேவைக்காகவும், தொழிற்சாலைகள் உபயோகத்திற்காகவும் பயன்படுகிறது. மேலும் நிலத்தடி நீரின் மூலமாகத்தான் பாலைவனச் சோலையும், ஈர நிலமும் உருவாக்கப்படுகிறது.”

“ஓ… ஓ…”

“அதுமட்டுமில்ல.. புவிவெப்ப ஆற்றல் நிலத்தடி நீர் மூலமாக வெந்நீரூற்றாக வெளிக் கொணரப்பட்டு பயன்படுத்துகிறது. இயற்கையான வெப்ப நீரூற்றுப் பகுதிகள் நீச்சல் குளமாகவும் பொழுதுபோக்கு இடமாகவும் பயன்படுது.”

“ஆமாம். சில இயற்கை வெந்நீருற்றுகள்ல, நன்மை பயக்கும் வேதிமங்கள் இருப்பதாக ஏற்கனவே ஒருமுறை சொல்லியிருக்கீங்க. அதனால அந்த வெந்நீருற்றுகள் உடல்நலன் மற்றும் சுற்றுலா சார்ந்து பயன்படுதுன்னும் சொன்னீங்க, சரியா?”

“ஆமாம். சரியா நியாபகம் வச்சிருக்க, சிறப்பு.”

“மகிழ்ச்சி சார். நான் கிளம்புறேன்” என்று கூறி புறப்பட்டது நீர்.

“சரி” என்று கூறி, தோண்டிய பள்ளத்தை சீர் செய்யும் பணியில் நான் இறங்கினேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீரின் நிறம் – ‍நீருடன் ஓர் உரையாடல் 26

நீர்க்கடிகாரம் ‍- நீருடன் ஓர் உரையாடல் ‍- 24

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

One Reply to “நிலத்தடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 25”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.