நிலவின் சுடர் – அப்பா

எல்லாரும் நல்லா இருக்கீங்களா? தலைப்பை பார்த்ததும் அது என்னடா ‘நிலவின் சுடர்’ னு நினைச்சிருப்பீங்க.

உங்க எல்லோருக்கும் தெரியும், நிலவுல இருந்து வர கூடிய சுடர்கூட நமக்கு கெடுதல் விளைவிக்காது. மாறாக அது குளுமையானவெளிச்சத்த மட்டும் தான் தரும்.

அது மாதிரிதாங்க எங்க அப்பாவும். கோபத்துல கூட அன்பை மட்டுமே காட்டுவாங்க. நான் எங்க அப்பாவ பற்றித்தான் சொல்ல போறேன்.

புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்களுக்கு தெரியும் அவங்க, அப்பாவ அவங்க எவ்ளோ மிஸ் பண்றாங்கன்னு.

எங்க அப்பாவுக்கு மூணு பொண்ணுங்க. நான் மூத்த பொண்ணு.

எங்க அப்பா ‘மூணும் பொண்ணா பொறந்திடுச்சினு‘ வருத்தப்பட்டதும் இல்லை. கோபப்பட்டதும் இல்லை. மாறாக எங்கள அன்பின் மடியில் தாலாட்டாத நாட்கள் இல்லை.

நான் 5ம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் ஓட்டப்பந்தயதில் தோல்வியை தழுவி அழுது கொண்டே இருந்தேன்.

அப்போ என் அப்பா என் கையை பிடித்து கொண்டு, எனக்கு பரிசு வாங்கி, என் அம்மா, தங்கை முன்பு தந்து, “நீதான் வெற்றி பெற்றாய்” என்று ஆறுதலையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தினார்.

எனக்கு ஒருநாள் சரியான காய்ச்சல். அப்போ டாக்டர் “நரம்பு ஊசி போடனும்னு” சொல்லிடாங்க…

நான் வலியில அழ… எங்க அப்பா நான் அழுறத பார்த்து கதறி கதறி அழ ஆரம்பிச்சிட்டாரு.

எங்க அப்பா அழுறத பார்த்த டாக்டர் எங்க அப்பாவ வெளியே போய் வெயிட் பண்ண சொல்லிட்டாங்க.

எங்க அப்பா பாசத்துக்கு முன்னாடி என் வலி கூட பெரிசா தெரியலை. உடனே அழுறத நிப்பாட்டினேன்.

ஒருநாள் என் பள்ளில டூர் கூட்டிடு போறோம்முன்னு சொன்னாங்க. அந்த டூருக்கு நான் போறது உறுதி ஆயிடுச்சு.

ஆனால் என் நெருங்கிய தோழி வீட்டுல பண கஷ்டம். அவ டூர் வர முடியாதுன்னு சொன்னா.

“அப்பா என் பிரண்டும் என்கூட டூர் வந்தா நல்லாருக்கும் பா”ன்னு எங்க அப்பாட்ட விசயத்த சொன்னேன்.

அதுக்கு உடனே எங்க அப்பா “இது என்ன ஒரு பெரிய விஷயமாலே?” என்று சொல்லி, உடனே என் கையில் பணத்தை தந்து “உன் தோழியையும் உன்கூட டூர் கூட்டிட்டு போ”ன்னு சொன்னார்.

என் அப்பா மட்டும் இல்லங்க நானும் அவர் மேல் அதிகமான பாசம் வச்சிருந்தேன்.

நான் மேல்நிலை பள்ளி படிக்கும் போது கிளாஸ்கு லேட்டா வந்தேனு, என் ஆசிரியர் என்னை தலைமை ஆசிரியரிடம் அழைத்து சென்றார்.

அப்போது தலைமை ஆசிரியர் என் அப்பாவை மறுநாள் அழைத்து வரும்படி கூறினார்.

நான் அவரிடம், “என் அப்பா அங்கு தான் கடை வைத்திருக்கிறார். நீங்கள் போய் பாருங்க”என்று கூறினேன்.

என் தோழி “ஏன் இப்படி பேசுறனு?” ன்னுகேட்கும் போது “எனக்கே தெரியவில்லை” என்று சொன்னேன்.

ஆனால் எனக்கு மட்டுமே தெரியும், என் அப்பா யார் முன்னாடியும் தலை குனிந்து நிற்கக் கூடாது என்று

மறுநாள் என் அப்பாவ தலைமை ஆசிரியரிடம் அழைத்து வந்தேன்.

தலைமை ஆசிரியரும் “உங்க பொண்ணு ஸ்கூலுக்கு லேட்டா வந்தா. ஏன்னு கேட்டா திமிரா பேசுறா”ன்னு புகார்கள்ள அடுக்கி வைக்க, என் அப்பா முகத்த என்னால பாக்க முடில.

அப்படி இருந்தும் எங்க அப்பா “ஏலே இதுக்கெல்லாம் பீல் பண்ண கூடாது. உன்ன பற்றி எனக்கு தெரியும். கூல்” அப்படினு சொன்னார்.

அதே மாதத்தில் பள்ளியில் மாவட்ட அளவில் ஓவிய போட்டியில் முதல் பரிசு பெற்று அதே தலைமை ஆசிரியர் முன் என் தந்தையைப் பெருமைப் படுத்தினேன்.

அதன் பின் பரீட்சையில் முதல் மதிப்பெண், பேச்சு போட்டியில் முதல் பரிசு என தொடர் வெற்றியை அப்பாவுக்கு வழங்கினேன்.

இப்போ எனக்கு வயசு 25. கல்யாணம் ஆகி ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க.

என் மூத்த பொண்ணு எங்க அப்பாவோட குட்டி இளவரசி!

காலம் மாறலாம்; ஆனால் என் தந்தை அன்பு நிலையானது.

அன்பை அதிகமாக விதையுங்கள். அது உங்களுக்கு இணையான வாழ்வின் வெற்றியைக் கொடுக்கும் என்பதே நிலவின் சுடரான அப்பா எனக்கு சொல்லித் தந்தது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.