நீரின் ஒட்டுந்தன்மை – நீருடன் ஓர் உரையாடல் – 19

அதிகாலை பொழுது. சுமார் ஆறு மணி இருக்கும். மாடிக்கு வந்தேன்.

காலநிலை குளிர்ச்சியாக இருந்தது. சூரியக் கதிர்கள் இன்னமும் பூமியை வந்தடையவில்லை. ஆனால் வெளிச்சம் இருந்தது.

அங்கிருந்த பூச்செடிகளை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். செடியின் இலைகளில் நீர்த்திவலைகள் ஆங்காங்கே இருந்தன. அவற்றை உற்றுப் பார்த்தேன்.

ஒரு இலையின் முனையில் கோள வடிவில் நீர் துளி ஒன்று ஒட்டியபடி, புவி ஈர்ப்புவிசையை எதிர்த்து கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தது. இயற்கையின் இந்த நுட்பமான அறிவியலை எண்ணி வியந்தேன்.

அப்பொழுது நீருடன் பேச விரும்பினேன். பேச்சை நாமே தொடங்குவோமே என்று தேன்றியது.

உடனே “பாத்து… பத்திரம்… இலையில இருந்து கீழ விழுந்திடப் போற‌” என்று அந்த நீர்த்திவலையைப் பார்த்துக் கூறினேன்.

“சார், அவ்வளவு சீக்கிரம் கீழ விழமாட்டேன்” என்றது நீர்.

“வாழ்த்துக்கள்.”

“எதுக்கு?”

“எல்லாத்துக்கும் தான்.”

“எல்லாத்துக்கும்னா? தெளிவா சொல்லுங்க சார்.”

“நீ கோள விடிவில உருண்டு திரண்டு திவலையா இருக்க. இலை நுனியில ஒட்டிக்கிட்டு இருக்க. இதுக்கெல்லாம் தான்.”

“நான் இலையில் ஒட்டிக்கிட்டு இருப்பது என்ன அவ்வளவு பெரிய விஷயமா?”

நீரின் ஒட்டுந்தன்மை நன்மைகள்

“என்ன இப்படி கேட்கிற. உன்னோட ஒட்டும்தன்மையால எவ்வளவு நன்மைகள் இருக்கு. தெரியுமா?”

“என்ன சார் சொல்றீங்க? விளக்கமா சொல்லுங்களேன்.”

“சொல்றேன். நீரோட ஒட்டுந்தன்மைய இரண்டு வகையா பிரிச்சிருக்காங்க. ஒன்று, தன்னினக் கவர்ச்சி விசை. அதாவது, நீர் நீரோட ஒட்டிக்கிற தன்மைக்கு தன்னினக் கவர்ச்சி விசைன்னு பேரு. ஆங்கிலத்துல Cohesion-ன்னு சொல்லுவாங்க.

நீரின் மேற்பரப்பு இழுவிசைக்கு காரணமாக இருப்பது இந்த தன்னினக் கவர்ச்சி விசை தான். மேற்பரப்பு இழுவிசையினால நீர் துளி கோள வடிவில இருக்கு.”

“ஓ! நான் கோள வடிவில நீர்த்திவலையா இருப்பதற்குள் இவ்வளவு அறிவியல் இருக்கா?”

“ஆமாம். அதுவே, நீர் அதாவது நீ மற்ற பொருட்களோட ஒட்டியிருந்தா, அதுக்கு வேற்றினக் கவர்ச்சி விசை அப்படின்னு பேரு.

அதாவது, நீ இப்ப இலையோட ஒட்டிக்கிட்டு இருக்கியே, இதுக்கு காரணம்?”

“வேற்றினக் கவர்ச்சி விசை. சரீங்களா?”

“சரியா சொன்ன.”

“நன்றி. வேற்றினக் கவர்ச்சி விசைக்கு ஆங்கிலத்துல எப்படி சொல்லுவாங்க?”

“Adhesion-ன்னு சொல்லுவாங்க?”

“நல்லது சார். ஒட்டுந்தன்மையால நன்மைகள் இருக்குன்னு சொன்னீங்களே?”

“ஆமாம், நீரின் ஒட்டுந்தன்மை, வாழ்விற்கு அடிப்படையா இருக்கு.”

“எப்படி?”

“தாவரங்கள், வேர் மூலமா நீரை உறிஞ்சி மற்ற எல்லா பாகத்துக்கும் எடுத்துக்கிட்டு போகுது. இது, ‘நுண்புழை ஏற்றம்’ அப்படீங்கற தத்துவம் மூலமா இயங்குது. இதுக்கு காரணம் நீரின் ஒட்டுந்தன்மை தான்.

இப்படி நீர் தாவரம் முழுக்க செல்வதால தானே, அவை வளர்ந்து விலங்குகளுக்கு தேவையான உணவ தயாரிச்சு தருது. இதனால தானே உயிரினங்களும் வாழுது. அதனால் தான் சொன்னேன், நீரோட ஒட்டுந்தன்மை வாழ்விற்கு அடிப்படைன்னு.”

“நன்றி சார். எனக்கு பெருமையா இருக்கு.”

“இதுக்கு நாங்க தான் உனக்கு நன்றி சொல்லனும்.”

“பரவாயில்ல.”

“இதுமட்டுமில்ல, உயிரியல் சார்ந்த பல செயல்முறைகள்ல உன்னோட ஒட்டுந்தன்மைக்கு முக்கிய பங்கு இருக்குது. எடுத்துக்காட்டா, கண்களிலிருந்து கண்ணீர் வடிவது கூட, உன்னோட ஒட்டுந்தன்மையால தான் சாத்தியமாகுது.”

“நல்லது சார். நாம பிறகு சந்திக்கலாமா?”

“ஏன்? உனக்கு இப்ப ஏதாவது வேலையிருக்கா?”

“இல்ல சார். இதுக்கு மேல புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக என்னால நிற்க முடியாது.”

அப்பொழுது, இலை விளிம்பில் கோள வடிவில் இருந்த நீர்த்திவலை அப்படியே கீழ்நோக்கி வழிந்த படி இருந்தது.

“சரி அப்புறம் சந்திப்போம்” என்று கூறி மாடியிலிருந்து கீழே இறங்கினேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

பொதுக் கரைப்பான் – நீருடன் ஓர் உரையாடல்- 20

அயனிமம் கிளர்வுற்ற நீர்- நீருடன் ஓர் உரையாடல் -18

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.