நீர் உலகம் – நீருடன் ஓர் உரையாடல் 42

காகிதம், எழுதுகோல் உள்ளிட்ட எழுது பொருட்களை வாங்கி வந்தேன். எல்லாவற்றையும் எடுத்து அதற்குறிய இடத்தில் வைத்தேன்.

‘உலக உருண்டையை எங்கு வைக்கலாம்’ என்று யோசித்தேன். ‘சரி மேசையிலேயே வச்சிப்போம்’ என்று தோன்றியது.

உடனே அட்டைப் பெட்டியை பிரித்து அதிலிருந்த அந்த மாதிரி உலக உருண்டையை எடுத்து மேசையில் ஒரு ஓரத்தில் வைத்தேன். சுண்டி விட, சில நிமிடங்கள் உருண்டை சுழன்ற பின்னர் நின்றது.

“என்ன சார் இது?” – குடுவையில் வைத்திருந்த குடிநீர் தான் கேட்டது.

“வந்துட்டியா!”

“இம்ம்… சொல்லுங்க சார். என்ன இது?”

“இதுவா… மாதிரி உலக உருண்டை”

“உலக உருண்டையா?”

“ஆமாம். பூமியோட மாதிரி வடிவம் தான் இது.”

“பூமி இப்படித்தான் இருக்கும்ணு எப்படி தெரிஞ்சுது.”

“பூமியின் வடிவத்த எப்பவோ கண்டுபிடிச்சிட்டாங்களே?”

“எப்படி சார்?”

“செயற்கைகோள் மூலமாத்தான். எப்படி ஒரு பொருள புகைப்பட கருவி மூலம் படம்பிடிக்கிறோமோ, அதுமாதிரி, பூமியிலிருந்து ஏவப்பட்ட செயற்கைகோள் பூமிக்கு வெளியே போய் தூரத்திலிருந்து பூமிய முழுசா படம் எடுத்து அனுப்பும். அதவச்சி தான் இந்த மாதிரி உலக உருண்டையும் செஞ்சிருக்காங்க.”

“சிறப்பு சார். ஆனா ஒரு சந்தேகம்.”

“என்ன?”

“இந்த பூமி உருண்டை ஏன் நீல நிறத்துல இருக்கு?”

“இம்..ம்.. இதுக்கு நீ தான் காரணம்.”

“நானா?”

“ஆமாம். பூமியில சுமார் 75 சதவிகிதம் நீர் தானே இருக்கு. பெரும்பாலான பகுதி கடலால் சூழப்பட்டிருக்கு. கடலைப் பார்க்கும் போது நீல நிறத்துல காட்சியளிக்கும். அதனால இந்த மாதிரி உலக உருண்டைக்கும் நீல நிறம் தந்திருக்கலாம்.”

“நல்லது சார்.”

சட்டென ‘நீர் உலகம்’ என்ற சொல் நினைவிற்கு வந்தது. உடனே, “உனக்கு நீர் உலகம் பற்றி தெரியுமா?” என்று நீரைப் பார்த்துக் கேட்டேன்.

“தெரியாதே”

“சொல்றேன். கணிசமான அளவு நீர் இருக்கும் ஒரு கோளிற்கு நீர் உலகம் என்று பெயர்.”

“அப்ப, பூமி?”

“பூமி ஒரு நீர் உலகம் தான். சொல்லப்போனா, சூரியக் குடும்பத்தில இருக்கும் மற்ற வான் பொருட்களோட ஒப்பிட, பூமியின் மேற்பரப்பில தான் திரவ நீர்நிலைகள் இருக்கு.”

“ஆமா, நீங்க ஏற்கனவே சொல்லியிருக்கீங்களே?”

“உனக்கு நியாபகம் இருக்கா?”

“இருக்கே. நான், திட, திரவம், மற்றும் வாயு நிலையில இருக்கேன்னு சொல்லியிருக்கீங்களே. சரி தானே?”

“சரிதான். கடலில் திரவ நீரா இருக்க. பூமியின் துருவப் பகுதிகளில் பனிக்கட்டியாகவும், உயரமான மலைகளில் பனிப்பாறையாகவும் பரவலாக இருக்குறீயே. பூமியின் வளிமண்டலத்துலையும், மேகங்கள் வடிவிலும் வாயுவா இருக்க.”

“ஆமாம் சார். நீங்க சொன்னது எனக்கு நினைவிருக்கு.”

“நல்லது. அத்தோட, எரிமலை வெடிப்பின் போது, பூமியின் உட்புறத்தில் இருக்கும் ஆழமான பாறைகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுது.”

“ஓ..ஓ.. அப்ப பூமியில எல்லாப் பகுதிகளிலும் நான் இருக்கேன். அப்படித்தானே?”

“ஆமாம். அத்தோட அனைத்து உயிரினங்களிலும் நீர் இருக்கு. மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது.”

“சரி சார். பூமிய தவிர வேற நீர் உலகம் இருக்கா?”

“இருக்கு. சூரியக் குடும்பத்துல இருக்கிற காலிஸ்டோ, என்செலடஸ், யூரோபா, கேனிமீட் மற்றும் டைட்டன் போன்றவைகளும் நீர் உலகங்கள் தான்னு விஞ்ஞானம் சொல்லுது.”

“இப்ப நீங்க ஏதோ பேர சொன்னீங்களே அதெல்லாம் என்ன?”

“சொல்றேன். சொல்றேன். காலிஸ்டோ (Callisto) வியாழன் கோளின் இரண்டாவது பெரிய இயற்கைத் துணைக்கோள். அதாவது நிலா.

சூரிய குடும்பத்திலேயே இதான் மூன்றாவது பெரிய நிலா. வியாழனின் மற்றொரு துணைக் கோளான கேனிமீட் (Ganymede), சூரிய குடும்பத்தின் நிலவுகளில் மிகப் பெரியது. யூரோபா (Europa) வியாழனைச் சுற்றி வரும் நான்கு கலிலியன் நிலவுகளில் மிகச் சிறியது.

என்செலடஸ் (Enceladus), டைட்டன் (Titan) என்பவையும் சனிக் கோளின் நிலாக்கள் தான்.

குறிப்பா, பூமியைத் தவிர டைட்டனின் மேற்பரப்பில் தான் நிலையான நீர்ம பரப்புகள் உள்ளதற்கான ஆதாரங்கள் கிடைச்சிருக்காம்.”

“நல்லது சார். ஆனா, இதுபத்தி ஆராய்ச்சி செய்யறதுனால என்ன பயன்?”

“பயன் இருக்கு. நீர் உலகங்களின் பண்புகளை ஆராய்வதன் மூலம் அவற்றின் வரலாறு, ஒட்டு மொத்த சூரிய குடும்பத்தின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சிக்கான தடயங்களை கண்டறியலாம். அத்தோட, உயிரினங்கள் வாழ்வதற்கு சதகமான நீர் சூழ்நிலை மண்டலம் இருந்தா, அந்தக் கோளில் மனிதர்கள் குடி பெயர்வதற்கும் சாத்தியம் இருக்கே.”

“சிறப்பு சார். அப்ப நான் புறப்படுறேன்.”

“சரி சரி பிறகு சந்திப்போம்” என்றுக் கூறி எனது பணிகளைத் தொடங்கினேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீர் விளையாட்டுகள் – நீருடன் ஓர் உரையாடல் − 43

நீர் நிறம் – நீருடன் ஓர் உரையாடல் 41

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.