நீர் சுழற்சி – நீருடன் ஓர் உரையாடல் – 27

“டிக்.. டிக்.. டிக்..” என சுவர் கடிகாரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஒலியை கவனித்தேன்.

கடிகாரத்தைப் பார்த்தேன். நேரத்தை சரியாக காண முடியவில்லை. காரணம் வெளிச்சம் இல்லை.

மின்விளக்கிற்கான பொத்தானை அழுத்தினேன். மின்விளக்கு பளிச்சிட்டது. கடிகாரத்தில், நேரம் 3.20 எனக் காட்டியது.

இது பிற்பகல் நேரம். உடனே, சன்னல் கதவுகளை திறந்து பார்த்தேன். இருட்டாக இருந்தது. சன்னல் வழியே வானத்தை பார்த்தேன்.

கார்மேகம் சூழ்ந்திருந்து. குளிர்ச்சியும் இருட்டும் சேர்ந்திருந்த அந்த பிற்பகல் வேளை எனக்கு மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும்.

அதனால் தான் நான் ஆர்வமோடு வானத்தையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காற்று மிதமான வேகத்தில் வீசிக் கொண்டிருந்தது.

சில நிமிடங்களுக்குப் பிறகு மழைப் பொழிவு சடசடவெனத் தொடங்கியது. எனது கவனம் மழையின் மீது திரும்பியது.

அப்பொழுது, ‘பூமியில் இருந்து நீர் மேகத்திற்குச் செல்வதும், அது மீண்டும் பூமிக்கு மழையாக வருவதும்’ என ‘நீரின் சுழற்சி’ குறித்த அறிவியல் செய்திகள் என் மனதில் சுழன்றுக் கொண்டிருந்தன.

திடீரென கடிகாரத்தைப் பார்த்தேன். கடிகார முற்களின் சுழலும் ஒலி கேட்கவில்லை. ஆயினும், முற்கள் சுழன்றுக் கொண்டிருந்துதான் இருந்தன.

மீண்டும் மழைப் பொழிவைக் கண்டு மகிழ்ந்துக் கொண்டிருந்தேன். மேகத்திலிருந்து, மழை பூமியை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்ததை அதன் இரைச்சலால் உணர முடிந்தது.

அப்பொழுது தான் கவனித்தேன். மேசையில் நீர்த்துளிகள் பரவியிருந்தன. அவை மழைநீர் துளிகள் தான். சன்னல் வழியாக உள்ளே வந்திருக்கின்றன.

உடனே, சன்னல் கதவுகளை சாத்தினேன். ஒரு துணியை எடுத்துக் கொண்டு மேசையில் விரவி இருந்த நீரை துடைக்க முற்பட்டேன்.

“இருங்க… இருங்க…”

நீர் தான் பேசுகிறது என்பதை உணர்ந்துக் கொண்டேன்.

“சார், கொஞ்ச நேரத்துக் முன்னாடி தான் என்னை பார்த்துக்கிட்டு இருந்தீங்க. உங்க மேசையில வந்தவுடனே, என்ன விரட்டுவ‌தற்கு முயற்சி பண்றீங்களே!”

எனக்கு உடனே, என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அமைதியாக நின்றேன்.

“சரிங்க… சன்னல் வழியா என்னப் பாத்துகிட்டு ஏதோ யோசிச்சா மாதிரி இருந்தது. அது என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?” நீர் கேட்டது.

“ஓ! அதுவா? நீர் சுழற்சி பத்தி தான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன்.”

“நீர் சுழற்சியா?”

“ஆமா!”

“கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?”

நீர் சுழற்சி என்றால் என்ன?

“ஓ! சொல்றேன். நீர் சுழற்சிங்கறது, பூமிக்கும் வளிமண்டலத்திற்கும் இடையே தொடர்ச்சியாக நிகழும் நீரின் இயக்கம் தான். ஆங்கிலத்துல Water cycle-ன்னு சொல்லுவாங்க.”

“இது தானா?”

“என்ன இப்படி சாதாரணமா சொல்லிட்ட. நீர் சுழற்சியில எவ்வளவு அறிவியல் தத்துவங்கள் இருக்கு தெரியுமா?”

“அப்படியா!”

“ஆமாம். ஆவியாதல், பதங்க‌மாதல், மழைப்பொழிவு, மேற்பரப்பு ஓட்டம், ஊடுருவல், உள்ளிட்ட பல அறிவியல் தத்துவங்கள் மூலமா தான் நீர் சுழற்சி நடந்துகிட்டே இருக்குது.

அத்தோட, நீர் சுழற்சியின் போது ஆற்றல் பரிமாற்றம் நிகழ்வதால, நீரானது திடம், திரவ‌ம், மற்றும் வாயு என வெவ்வேறான வடிவங்களையும் பெறுது.”

“சார், முதல்ல நீங்க சொன்னீங்களே, நீர் பூமிக்கும் மேகத்துக்கும் இடையே போயிட்டு வருதுன்னு – அது சுலபமா புரிஞ்சுது. அதுக்கப்புறம் சொன்னது புரியல சார்.”

“விளக்கமா சொல்றேன். கடல், ஏரி, குளம், குட்டை போன்றவற்றிலிருந்து நீர் நீராவியாக, அதாவது வாயுநிலைக்கு மாறி காற்றுல கலந்திடும். இதுக்கு ஆவியாதல்னு சொல்றாங்க.

இதுவே நீர் தாவரத்திலிருந்தும் ஆவியாக மாறி காற்றில் கலக்கும். இதுக்கு நீராவிப் போக்குன்னு சொல்றாங்க.”

“சார், அப்ப நான் பனிக்கட்டியா இருக்கும் போது எப்படி காற்றுல கலப்பேன்?”

“பதங்கமாதல் மூலமா. அதாவது, திடநிலையில இருக்கும் பனிக்கட்டி திரவநிலைக்கு மாறாம, நேரடியா வாயுநிலையான நீராவியாக மாறி வளிமண்டலத்தில் கலக்கும்.”

“ஓ…ஓ..சரிதான்.”

“புரிஞ்சுதா?”

“ஆம்! ஒரு சந்தேகம்.”

“கேளு”

“நீரோ பனிக்கட்டியோ எப்படி அவை ஆவியாகுது?”

“சூரிய ஒளியின் வெப்ப ஆற்றல் மூலமாகத் தான்.”

“ஆமாம் சார். சரிதான்.”

“இன்னும் தகவல்கள் இருக்கு.”

“சொல்லுங்க”

“அடர்த்தி வேறுபாடு காரணமாக, நீராவி மிதக்குந்தன்மை பெற்று மேலே உயர்ந்து மிதக்குது. உயரம் அதிகரிக்க அதிகரிக்க காற்றின் அழுத்தம் குறைந்து வெப்பநிலையும் வெகுவா குறையும்.

அதனால, நீராவி மீண்டும் சிறிய திரவ நீர்த் துளிகளாக மாறும். இவை காற்றை விட கனமானதாக இருக்கும். அதனால, இவை மீண்டும் பூமியை நோக்கி மழையாக வருது.”

“ஆமாம்”

“இம்… மழைநீர் நிலபரப்புல வெள்ளமாக ஓடி, பின்னர் சிற்றோடைகள், அருவிகள், ஆறுகள் வழியாகப் பாய்ந்து மீண்டும் சமுத்திரத்தை நோக்கி செல்லும். மறுபடியும் பூமியிலிருந்து நீர் நீராவியாக மாறி வளிமண்டலத்துக்குச் சென்று, அது மீண்டும் மழையாக பூமிக்கு திரும்பும். இந்த சுழற்சிக்குத் தான் நீர் சுழற்சின்னு பேர்.”

“இப்ப புரியுது சார்.”

“இம்ம். அதேநேரத்துல வெள்ளநீர் நிலத்திற்குள்ளும் ஊறிச் செல்லும். இப்படி சென்று சேரும் நீருக்கு நிலத்தடி நீருன்னு பேரு.”

“சார். ஏற்கனவே நிலத்தடி நீர் பற்றி சொல்லியிருக்கீங்களே”

“ஞாபகம் இருக்கா?”

“இருக்கு சார்.”

“நல்லது.”

நீர் சுழற்சியின் முக்கியத்துவம்

“சார். நீர் சுழற்சியால என்ன நன்மை?”

“நீர் சுழற்சி தான் காலநிலை மாற்றத்துல முக்கிய பங்கு வகிக்கிது.”

“அப்படியா!”

“ஆமாம், நீர் சுழற்சியினால் வெப்பநிலை மாற்றம் நிகழுது. அதாவது, திரவ நீர் ஆவியாகும் பொழுது, அது தன் சுற்றுப்புறத்திலிருந்து வெப்ப ஆற்றலை எடுத்துக்கும்.

அதனால, அந்த சுற்றுப்புறம் குளிர்ச்சியாகும். இதுவே, நீர் உறையும் போது வெப்பத்தை வெளியிடும், இதனால் அதன் சுற்றுப்புறம் சூடாகும்.”

“சிறப்பு சார், வேற நன்மை இருக்கா?”

“ஓ.. இருக்கே. வளிமண்டல நீர் சுழற்சியால நீராவியானது உலகெங்கும் நகர்கிறது. மழைநீர் நிலத்தடி நீராகவும், ஏரிகள் அணைகள் போன்ற நீர்த்தேக்கங்கங்களில் நன்னீராகச் சேமிக்கப்படுகிறது.

அத்தோட அரிப்பு மற்றும் படிவு மாதிரியான செயல்முறைகள் மூலமாக, புவியின் புவியியல் அம்சங்களை மாற்றியமைப்பதிலும் நீர் சுழற்சி முக்கிய பங்கு வகிக்கிது.

பொதுவா சொல்லனும்னா, உயிரினங்களின் வாழ்க்கைக்கும் சுற்றுச்சூழல் பராமரிப்பிற்கும் நீரின் சுழற்சி ரொம்பவும் முக்கியம்.”

“நல்லது சார். அப்ப நான் கிளம்புறேன். பிறகு சந்திப்போம்.”

“சரி” என்று கூறி, மேசையில் இருந்த நீர்த்துளிகளைத் துடைத்தேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

குளிர்விப்பான் – நீருடன் ஓர் உரையாடல் 28

நீரின் நிறம் – ‍நீருடன் ஓர் உரையாடல் 26

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.