நெல்லிக்காய் ஜாம் செய்வது எப்படி?

நெல்லிக்காய் ஜாம் செய்ய அரிநெல்லிக்காய்களை எடுத்து கொள்ள வேண்டும். அரிநெல்லிக்காய் புளிப்பு சுவையாக இருக்கும். அரிநெல்லிக்காயின் தாயகம் கரீபியன் தீவு மற்றும் தென் அமெரிக்கா ஆகும்.

அரிநெல்லிக்காய் இந்தியாவில் கேரளாவில் அதிகளவு காணப்படுகிறது. அரிநெல்லிக்காய் பொதுவாக ஏப்ரல்-மே மற்றும் ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களில் கிடைக்கும்.

அரிநெல்லிக்காயில் விட்டமின் சி சத்து மிகுந்துள்ளது. இது உடலில் உள்ள கழிவுகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை உடையது. பொதுவாக அரிநெல்லிக்காயுடன் உப்பு மற்றும் மிளகாய்ப்பொடி சேர்த்து சாப்பிடுவது வழக்கம்.

அரிநெல்லிக்காயில் உப்பு மிளகாய்ப்பொடி சேர்த்து ஊறுகாய் மற்றும் சட்னி செய்து கார வகையாகவும் அதே நேரத்தில் சீனி சேர்த்து ஜாம் செய்து இனிப்பு வகையாகவும் சாப்பிடலாம்.

நெல்லிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் ஜாம் இனிப்பும் புளிப்பும் சேர்ந்து சுவையாக இருக்கும். இனி சுவையான நெல்லிக்காய் ஜாம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்:

அரிநெல்லிக்காய் – 1 கப்

சீனி – ½ கப்

 

செய்முறை:

முதலில் நெல்லிக்காய்களை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். வாயகன்ற பாத்திரத்தில் சீனி மற்றும் நெல்லிக்காய்களை போட்டு அடுப்பில் வைக்கவும்.

அடுப்பின் தணலை சிம்மில் வைக்கவும். சீனி இளகி நெல்லிக்காயுடன் கொதிக்கத் தொடங்கும். பின் அவ்வப்போது நெல்லிக்காய் கலவையை கிளறி விடவும்.

 

கொதிக்கும் போது நெல்லிக்காய் ஜாம்
கொதிக்கும் போது நெல்லிக்காய் ஜாம்

 

நெல்லிக்காய் வெந்து சிவந்த நிறம் வந்தவுடன் இறக்கவும். சூடு ஆறியவுடன் பாட்டிலில் அடைத்து வைக்கவும். இந்த ஜாமை ஆறு மாதம் வரை உபயோகிக்கலாம்.

 

நெல்லிக்காய் ஜாம்
நெல்லிக்காய் ஜாம்

குறிப்பு:

சீனிக்குப் பதிலாக சர்க்கரையை நன்கு தூளாக்கி ஜாம் தயார் செய்யலாம்.

ஜாம் தயார் செய்ய ஒரே அளவான நெல்லிக்காய்களைத் தேர்ந்தெடுக்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்