நெல்லிக்காய் – மருத்துவ பயன்கள்

நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது; கண்களுக்குக் குளிர்ச்சி தரும்; செரிமானத்தைக் தூண்டும்; சிறுநீர் பெருக்கும்; குடல் வாயுவை அகற்றும்; பேதியைத் தூண்டும்; உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும்.

நெல்லி வேர், நரம்புகளைச் சுருக்கும்; வாந்தி, அருசி, மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணமாக்கும். நெல்லிக்காய் வற்றல், குளிர்ச்சி தரும்; இருமல், சளி போன்றவற்றைக் குறைக்கும்; உடலைப் பலப்படுத்தும்.

நெல்லிக்காய் தைலம் நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத் தலையில் தேய்த்துத் தலைமுழுகிவர கண்கள் பிரகாசமாக இருக்கும்; பொடுகு கட்டுப்படுவதுடன், முடி உதிர்தலும் தடுக்கப்படும்.

நெல்லிக்காய் மரப்பிசின் பல மருந்துகளில் கூட்டுப்பொருளாகச் சேர்கின்றது.
நெல்லிக்காய் சிறிய அல்லது நடுத்தர உயரமான, இலையுதிர்க்கும் மர வகையைச் சார்ந்தது. நெல்லி இலைகள் புளியன் இலையை விட சிறியவை. இறகு வடிவமானவை. நெல்லி கிளைகள் இறகு போன்ற தோற்றமுள்ளவை.

நெல்லி ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை. சிறியவை, வெளிறியவை, பசுமையானவை, அடர்த்தியானவை, கொத்தானவை. நெல்லிக்காய்கள் கொத்தானவை. இளம் மஞ்சள் நிறமானவை. பழங்கள் 2.5 செ.மீ. வரை குறுக்களவு கொண்டவை. சதைப்பற்றானவை. உருண்டையானவை. ஆறு விதைகள் கொண்டவை.

தமிழ்நாடு முழுவதும் காடுகளில் வளர்கின்றன. வீட்டுத் தோட்டங்களில், தோப்புகளில் விளையும் மரங்கள் பெரிய கனிகளுடன் காணப்படும். நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த காய் எல்லாக் காலங்களிலும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். நெல்லிக்காய் இலை, காய், வற்றல் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்ததாக உள்ள நெல்லிக்கனிகள் பழ வகைகளுள் மிகவும் முக்கியமானவை. நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவை ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களாகும்.

நெல்லி மரங்கள், வீட்டு மராமத்து வேலைகளுக்கும் பயன்படுபவை. நெல்லிக்காய் பட்டைகள், சாயங்கள் மற்றும் தலைக்கழுவி நீர்மம் தயாரிப்பதில் பயன்படுகின்றன.

நெல்லி கட்டைகள், நீரால் எளிதில் பாதிக்கப்படுவதில்லை. நெல்லிக்காய் இலைகள், ஏலக்காய் செடிகளுக்கு உரமாகவும் பயன்படுகின்றன. இவை மண்ணில் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன.

நெல்லிக்காய் சாறு 15 மி.லி., தேன் 15 மி.லி., எலுமிச்சம்பழ சாறு 15 மி.லி. ஒன்றாகக் கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டுவர மதுமேகம் குணமாகும்.

 

திரிபாலா சூரணம்

விதை நீக்கிய நிலையில் உள்ள கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றையும் தனித்தனியாக காயவைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு, சம அளவாக ஒன்றாகக் கூட்டி நன்கு, கலந்து, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே திரிபலம் அல்லது திரிபலா சூரணம் எனப்படும் ஒரு பலநோக்கு கை மருந்து ஆகும்.

2 தேக்கரண்டி பொடியை ½ லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். 6 முறைகள் தினமும் கண்களை இந்த நீரால் பஞ்சு கொண்டு துடைக்க கண் எரிச்சல் மற்றும் கண்ணில் தண்ணீர் வருவது கட்டுப்படும்.

புளிச்ச ஏப்பம், செரியாமை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளுக்கு ஒரு தேக்கரண்டி பொடியை வாயிலிட்டு, வெந்நீர் அருந்த வேண்டும். இதை ஒரு மந்திர மருந்தாக உணரலாம்.

ஒரு பிடி நெல்லக்காய் இலைகளை 1 ½ லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதைப் பொறுக்கும் சூட்டில் வாயில் ஊற்றிக் கொப்பளிக்க வேண்டும். அல்லது பட்டையை தூள் செய்து வைத்துக் கொண்டு, தேனில் குழைத்து புண்ணின் மீது தடவ வாய்ப்புண் குணமாகும்.

சாதாரணமாக நமக்கு குறைந்த செலவில் கிடைக்கும் ஒரு சத்துள்ள பழம் நெல்லிக்காய் ஆகும். நுரையீரல் சார்ந்த காசநோயை இது விரைவாக குணப்படுத்துவது மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நெல்லிக் கனிகளை உலர்த்தி வற்றலாக்கி, வைட்டமின் “சி” சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்களை நெல்லிக்காய் குணப்படுத்தும். மேலும், இது உடலில் எதிர்ப்பு சக்தியை நிலைப் படுத்தக் கூடியது. மொத்தத்தில் நெல்லிக்காய ஒரு கற்ப மருந்தாகத் திகழ்கின்றது.