பங்குனிப் பொங்கல் மழை – சிறுகதை

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பிறந்த ஊரில் பங்குனி மாதம் நடைபெறும் அம்மன் பொங்கல் திருவிழா கொரனா நோய் பரவல் காரணமாக நடைபெறவில்லை.

இந்த வருடம் கொரனாவுக்கான தடை நீக்கப்பட்டதால் திருவிழாவை சிறப்பாக கொண்டாட ஊரில் தீர்மானிக்கப்பட்டது.

ஊரில் உள்ள எல்லோர் வீட்டிலும் வெளியூரிலிருக்கும் விருந்தினர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.

என் பெற்றோரும் வெளியூரில் இருக்கும் எனக்கும் என் தம்பிக்கும் அழைப்பு விடுக்க, நாங்கள் இருவரும் அவரவர் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவிற்காக ஆஜரானோம்.

எங்கள் ஊரில் பங்குனி கடைசி ஞாயிறு, திங்கள், செவ்வாய் என மூன்று நாட்களுக்கு திருவிழா அமர்க்களப்படும்.

ஞாயிறு அன்று அம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் விழாவும், திங்கள் அன்று அக்னி சட்டி, முளைப்பாரி, ஆயிரம்கண் பானை, பூப்பெட்டி ஊர்வலமும், செவ்வாய் அன்று அக்னி குண்டம் இறங்கும் விழாவும் அதனைத் தொடர்ந்து அம்மன் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுவது வழக்கம்.

பொங்கல் விழாவிற்காக வீடுதோறும் கிடாக்கறி, கோழிக்கறி என அசைவ உணவு இடம் பெறுவது வழக்கம்.

பங்குனி மாத கொளுத்தும் வெயில் காலத்தின் பொங்கல் திருவிழாவின் போது திருவிழாக்கடையில் விற்கப்படும் மாம்பிஞ்சும், கலர் சர்ப்பத்தும் இன்பத்தை அளிப்பதாகவே என்னுடைய சிறுவயதில் நான் உணர்ந்திருக்கிறேன். அதனை நினைக்கும்போது இப்போதும் எனக்கு தித்திக்கிறது.

இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் விழாவில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பொங்கல் வைத்து மகிழ்ந்தோம்.

மறுநாள் திங்கள் கிழமை எனது கணவர் அவசர வேலை என கோவைக்குக் கிளம்பி மறுநாள் அக்னிகுண்டம் இறங்கும் விழாவிற்கு வந்துவிடுவேன் என்று கூறிச் சென்று விட்டார்.

திங்கள் கிழமை பகலில் பனைக்குருத்தோலையில் பனையோலை கருப்பட்டிக் கொழுக்கட்டை அவித்து கிடாக்கறியுடன் விருந்துண்டோம்.

மாலை அக்னி சட்டி சாமி ஊர்வலத்திற்குச் செல்வதற்கு எல்லோரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். சுமார் பிற்பகல் 3.30 மணி அளவில் லேசாக தூறல் விழ ஆரம்பித்தது.

அப்போது என் அம்மா, “பங்குனி வெக்கையில சனங்க கஷ்டப்படக்கூடாதுன்னு மாரித்தாயி மழையக் கொடுக்கா. சாமி ஊர்வலம் கிளம்புறதுக்கு முன்னாடி மழை நின்னு, வெக்கையும் குறைஞ்சு போகும்” என்றார்.

‘எப்படியோ வெக்க குறைஞ்சா சரி’ என்று எங்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம்.

வழக்கமாக மாலை ஐந்து மணிக்கு சாமி ஊர்வலம் கோவிலில் இருந்து தொடங்கி, வடக்குத்தெரு, கீழத்தெரு, தெற்குத்தெரு, மேலத்தெரு என நான்கு தெருக்களையும் தாண்டி இறுதியில் சுமார் 8 மணி அளவில் கோவிலைச் சென்றடையும்.

நிமிடங்கள் ஆக ஆக, தூறல் சாரலாக மாறி, மழையாகப் பெய்யத் தொடங்கியது. இடியுடன் கனத்த மழை பெய்தது. ஒருமணி நேரம் பெய்த பெருமழை சற்று ஓய்வு எடுத்து சாரலாக மாறியது.

எங்கள் வீடு ஊருக்கு வெளியே சற்று தொலைவில் இருந்தது.

ஆதலால் நாங்கள் எப்போதும் சாமி ஊர்வலம் பார்ப்பதற்காக வடக்குத் தெருவையும், கீழத்தெருவையும் இணைக்கும் தார் ரோட்டின் மீது இருக்கும் பெரியப்பா கடையின் அருகில் நிற்போம்.

ஆளுக்கொரு குடையை பிடித்துக் கொண்டு சாமி ஊர்வலத்தைக் காணலாம் என்று தீர்மானித்து, குடையுடன் கிளம்பினோம்.

அடுத்த கால்மணி நேரத்தில் சாரல் மழை, தூரலாக மாறி காலையில் அடித்த வெயிலால் உண்டான வெக்கைக்கு இதம் அளித்தது.

மழையின் காரணமாக தார் ரோட்டில் மக்கள் நெரிசல் சற்று குறைவாகவே இருந்தது. என் பிள்ளைகள் மற்றும் என்னுடைய தம்பியின் பிள்ளைகள் சாமி ஊர்வலத்தைக் காண்பதற்காக முன்னால் நின்று கொண்டிருந்தனர்.

என் தந்தை அவர்களிடம் “உள்ளே தள்ளி நில்லுங்க. ஊர்வலக் கூட்டம் உங்களை நசுக்கி விடும்” என்று எச்சரித்தபடியே நின்றிருந்தார்.

வழக்கத்தைவிட அரைமணி நேரம் தாமதமாகவே சாமி ஊர்வலம் கோவிலில் இருந்து கிளம்பியது. ஆதலால் தார் ரோட்டிற்கும் தாமதமாகவே வந்தது. ஆனாலும் ஊர்வலத்தைக் காணும் மக்களின் ஆர்வம் பொங்கி வழிந்தது.

சாமி ஊர்வலத்திற்கான பேண்ட் வாத்தியம் முதலில் வர, அக்னி சட்டி அதனைத் தொடர்ந்து வந்தது.

இருபத்தியோரு சின்ன விளக்குகளைக் கொண்ட இரும்புக்கம்பியை உடலில் பொருத்தியும், கையில் அக்னி சட்டி ஏந்தியபடியும் முதலில் ஐந்து பக்தர்கள் சற்று இடைவெளி விட்டுச் சென்றனர்.

அவர்களைத் தொடர்ந்து அக்னி சட்டியை கையில் ஏந்தியபடி இருவரிசையில் அணி வகுத்து சுமார் 80 நபர்கள் வந்தனர். அதில் கடைசி 20 பெண்களும் அடங்குவர்.

வழக்கமாக கொளுத்தும் வெயில் வெக்கைக்காக அக்னி சட்டி ஏந்தி வருபவர்களுக்கு ஆங்காங்கே குடங்களில் தண்ணீர் வைத்து ஊற்றி விடுவார்கள்.

அக்னி சட்டி எடுப்பவர்களும் சட்டி வைத்திருக்கும் கையை லாவகமாக நீட்டி தூக்கி, ஒரு முட்டியை 90 டிகிரி செங்கோணத்திற்கு வளைத்து மற்றொரு காலை நீட்டி, உடலை குனிந்து தலையிலும், உடலிலும் தண்ணீர் வாங்குவர்.

இந்நிகழ்வினை எங்கள் ஊரில் ‘சாமி தண்ணீ வாங்குது’ என்பர்.

சாமி தண்ணீர் வாங்குவது பார்ப்பதற்கு ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கையில் வைத்திருப்பதைப் போலே இருக்கும்.

சாமி தண்ணீர் வாங்கும் நிலையைப் பார்க்கையிலேயே என்னுடைய உடல் சிலிர்ப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

இந்த வருடமும் தார் ரோட்டின் இருபறங்களிலும் சுமார் 5 அடி இடைவெளியில் பெரிய பேரல்களில் தண்ணீரை நிரப்பி சாமி தண்ணீர் வாங்கும் நிகழ்விற்காக வைத்திருந்தனர்.

தூரல் விடாது விழவே சாமி தண்ணீர் வாங்கும் நிகழ்விற்கு அவசியம் இல்லாமல் போனது. ஆனால் அன்று அக்னி சட்டியில் நெருப்பினை அணையாது பாதுகாப்பது சவாலாக இருந்தது.

அக்னிச் சட்டியைத் தொடர்ந்து கொட்டுச் சத்தம் வானதிர முளைப்பாரி ஊர்வலம் வந்தது. அழகழகான அம்மன் உருவத்திலேயே முளைப்பாரியை உருவாக்கி இருந்தனர்.

சுமார் 120 முளைபாரியைத் தொடர்ந்து 70 ஆயிரங்கண் பானையும், 150 பூப்பெட்டியும் ஊர்வலமாக வந்தனர்.

சாமி ஊர்வலம் முடிந்து வீடு திரும்பிய நாங்கள் எலும்புக் குழம்புடன் தோசை உண்டோம்.

இரவு 10 மணி அளவில் அம்மன் கோவிலுக்கு குடும்பம் சகிதமாகச் சென்று தேங்காய் உடைத்து வழிபாட்டினை முடித்தோம்.

ஊருக்கு மேற்கே அக்னி குண்டத்தின் அருகில் இருக்கும் கலையரங்கத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியை சிறிது நேரம் கவனித்து விட்டு வீடு திரும்பி அலுப்பில் உறங்கினோம்.

மறுநாள் வானம் தெளிவாகி வெயில் வெளுத்து வாங்கியது. மாலையில் சுமார் 7 மணி அளவில் நடைபெறும் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சிக்காக, அக்னி வளர்க்கும் நிகழ்வு பகல் 11.30 அளவில் அக்னி குண்டம் திடலில் நடைபெற்றது.

அதிலும் குடும்பம் சகிதமாகக் கலந்து கொண்டு, வேர்த்து கொட்டி வீடு வந்து மதிய உணவினை உண்டு அரட்டை அடித்தோம்.

மாலை 5.30 மணி வரை மழை வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. எல்லோரும் உற்சாகத்துடன் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியைக் காண கிளம்பிக் கொண்டிருந்தோம்.

அப்போது என் கணவர் ‘ஊர் திரும்ப அரைமணி நேரம் ஆகும்’ என்ற தகவலை எனக்கு கைபேசியில் தெரிவித்தார்.

நான் என் தம்பியிடம் “நீங்கள் எல்லோரும் நேற்று சாமி ஊர்வலம் பார்த்த இடத்தில் நின்று அம்மன் பூச்சப்பரம் மற்றும் அக்னி குண்டம் இறங்குபவர்களின் ஊர்வலத்தையும் கண்டு கொண்டிருங்கள். மச்சான் வந்ததும், உனக்கு போன் செய்து விவரம் அறிந்து அங்கே வந்து விடுகிறோம்” என்றேன்.

“சரி. அக்காவத் தவிர எல்லாரும் அவங்கவங்க குடையை எடுத்துக் கொள்ளுங்கள். நாம கிளம்புவோம்.” என்றான்.

என் இளைய மகள் “எங்க அம்மா அப்பாவோட தான் நான் வருவேன்” என்று அடம் பிடித்தாள்.

“நீ மெதுவாத்தான் நடப்ப. உங்க அப்பா வந்ததும், அம்மாவும் அப்பாவும் வேகமா நடந்து நம்மள பிடிச்சிடுவாங்க. சரியா” என்று சமாதானப்படுத்தி என் தம்பி அழைத்துச் சென்றான்.

அவர்கள் சென்றதும் நான் வீட்டைப் பூட்டிவிட்டு பின் வாசலில் கோழிகள் கூட்டில் அடைந்ததை உறுதிப்படுத்த சென்றேன்.

அப்போது லேசாக தூரல் விழுந்தது. பின் வாசலில் போட்டு வைத்திருந்த வாளி, முறம், துடைப்பம் எல்லாவற்றையும் அவை இருக்கும் இடத்தில் கொண்டு போய் வைத்துவிட்டு திரும்பினேன்.

இடியுடன் மழை கொட்டத் தொடங்கியது. பின் வாசலையும் அடைத்துவிட்டு சன்னல் வழியே வெளியே பார்த்தேன். பெருமழை பெய்து கொண்டிருந்தது.

என் கணவர் எங்கிருகிறார் என்பதும், அக்னி குண்டம் பார்க்கச் சென்ற குடும்பத்தார் எங்கிருக்கிறார்கள் என்ற கவலையும் என்னை வாட்டத் தொடங்கியது.

என் கணவர் பற்றிய விவரம் அறிய கைபேசியில் அழைத்தபோது “இன்னும் ஊருக்கு 2 கிமீ தொலைவு உள்ளது. ஆனால் பெருமழையினால் தண்ணீர் பெருக்கெடுத்து முட்டி அளவுக்கு ஓடுகிறது. காரினை தண்ணீருக்குள் ஓட்டினால் பைப் வழியாக தண்ணீர் உள்ளே சென்று எஞ்சின் பழுதாகி விடும். நான் மேட்டுப்பகுதியில் காரை நிறுத்தி வைத்துள்ளேன். மழை சற்று ஓய்ந்து தண்ணீர் வடிந்ததும் வந்து விடுகிறேன்.” என்றார்.

“கவனமாக காருக்குள் இருங்கள்” என்றபடி போனை வைத்து விட்டேன். அப்பொழுது கரண்ட் க‌ட் ஆனது. வீட்டில் பேட்டரி இருந்ததால் எனக்கு வெளிச்சம் தடைபடவில்லை.

சன்னல் வழியே வெளியே பார்த்தபோது தெரு விளக்குகள் அணைந்து கும்மிருட்டாக இருந்தது. அவ்வப்போது ஏற்பட்ட மின்னல் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்தது.

சிறிது நேரத்தில் குடும்பத்தினர் நிலையை அறிந்து கொள்ள தம்பியைத் தொடர்பு கொண்டேன்.

“மழை வருவதற்குள் நேற்று நின்ற இடத்தை அடைந்து விட்டோம். மழை வந்ததால் அருகில் இருந்த மடத்தில் இருக்கிறோம்” என்றான்.

“பவர் வேறு கட்டாகி விட்டதே. அங்கே யுபிஎஸ் இருக்கிறதா? லைட் எரிகிறதா?” என்று கேட்டேன்.

“இல்லை. ஆனால் குத்து விளக்கு ஏற்றி வைத்துள்ளார்கள். அதுபோக ஐந்தாறு அகல் விளக்குகள் வைத்துள்ளார்கள். ஏதோ மேனேஜ் பண்றோம். மழை விட்டதும் வீட்டிற்கு வந்து விடுகிறோம். மச்சான் வந்து விட்டார்களா?” என்றான்.

நான் அவரின் நிலையை விளக்கிவிட்டு, மழை குறைந்ததும் வீட்டிற்கு வந்துவிடுவதாக அவர் தெரிவித்ததை கூறினேன்.

“சரி, நீ மட்டும் தனியாக இருக்கிறாய். கவனமாக இரு” என்றபடி போனை அணைத்து விட்டான்.

மழையோ சற்றும் குறையவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கொட்டியது. அதன் பின் சாரலாக மாறியது.

அந்த இரண்டு மணி நேரமும் எனக்கு கணவர் மற்றும் குடும்பத்தினர் நிலை பற்றிய கவலை படாய்ப்படுத்தியது.

மழை பெய்த இரண்டு மணி நேரத்திற்கு இடையே பிள்ளைகளுக்கு பசி எடுக்கும் என்று எண்ணிய நான் இட்லியும், சாம்பாரும் தயார் செய்தேன்.

ஒருவழியாக இரண்டு மணி நேரம் கழித்து, மழை குறைந்த கால் மணி நேரத்தில் மின்சாரம் மீண்டும் வந்தது. அடுத்த‌ பத்து நிமிடங்களில் என் குடும்பத்தினர் வீடு திரும்பினர்.

என் மகளும் என் தம்பியின் மகளும் கோரசாக என்னிடம் “நீங்க கொடுத்து வைத்தவர்கள். மழையிலும் நனையவில்லை. லைட் இல்லாமலும் கஷ்டப்படவில்லை.” என்றனர்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலே எனது கணவரும் வந்து சேர்ந்தார்.

என் மகள் அவரிடம் “உங்களுக்கென்ன காருக்குள் ஏசி போட்டு ஜம்முன்னு உட்கார்ந்திருப்பீங்க. உங்களுக்கு பவர் கட் ஏதும் கிடையாது.” என்றாள்.

“அப்படியெல்லாம் கிடையாது. நீங்கள் பவர்கட் ஆனதால் லைட் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்படுவீர்கள் என்பதை நினைத்தும், அப்பா காருக்குள் பாதுகாப்பா இருப்பாங்களா? என்பதை நினைத்தும் கடந்த இரண்டு மணி நேரம் நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.

தண்ணீர் இல்லாமல் கொளுத்துகிற வெயிலில் சுடும் மணற்பரப்பு மட்டும் பாலைவனமல்ல; கொட்டுகிற மழையில் யாரும் இல்லாமல் உங்களைப் பற்றிய நினைப்பு அந்த பாலைவனத்தைக் காட்டிலும் கொடுமையானது.

ஏசியினுள் உட்கார்ந்திருந்த அப்பாவும் கொடுத்து வைத்தவர் இல்லை. யுபிஎஸ் லைட்டில் உட்கார்ந்திருந்த நானும் கொடுத்து வைத்தவள் இல்லை.’ என்றேன்.

அம்மன் ஊர்வலம் இரவு பத்து மணிக்கு மேல் நடைபெற்றது. அதையடுத்து அக்னிக்குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. சுமார் 80 பேர் அக்னிக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நாங்கள்தான் அதைப் பார்க்க முடியவில்லை.

மழை வந்து அன்று பொங்கல் விழாவை பாதித்தது. அதனால் மனதில் ஒரு வருத்தம்.

மழை என்றாலே மனம் பொங்கும்தானே! இந்த பங்குனிப் பொங்கலை மழைப் பொங்கல் என நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டேன்.

வ.முனீஸ்வரன்

2 Replies to “பங்குனிப் பொங்கல் மழை – சிறுகதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.