பசியைப் போக்குவோம் – சிறுகதை

மண்வாசனை மயக்க, மழை லேசான தூரலுடன் தொடங்கி, விரைவான துளிகளாய் மண்ணைக் குழப்பியது.

ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷாம், பொழிகின்ற மழையை ரசித்துக் கொண்டே சாப்பிட்டான்.

ஒருஅகலமான தட்டில் சிக்கன் பிரியாணியும், அவித்த முட்டையும், பொறித்த கோழிக்கறி துண்டுகளும் நிரம்பி வழிந்தன. ஷாம் பாதி சாப்பிட்டுவிட்டு மீதியைத் தட்டிலேயே வைத்தான்.

அந்த ஹோட்டலில் நிறையபேர் அப்படியே செய்தார்கள்.

ஹோட்டலின் வெளியே உணவு கிடைக்காமல் பலர் பசியால் அல்லாடுகின்றனர். அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத பணக்கார கும்பல் சாப்பிடும் ஹோட்டல் இது.

அவர்கள் சாப்பிடாமல் மிச்சம் வைத்த உணவுகளை, உணவு கிடைக்காத ஐம்பது பேருக்கு கொடுக்கலாம். அவ்வளவும் வீணாக போனது.

 

அடுத்த நாள் கல்லூரிக்குச் சென்ற ஷாம் தன் நண்பர்களுடன் காரில் வெளியில் சென்று ஹோட்டல், பீச், தியேட்டர் என பணத்தை தண்ணியாக செலவு செய்தான்.

எக்ஸ்போர்ட் கம்பெனி முதலாளியின் மகனுக்கு பணம் ஒருபெரிய விசயமே இல்லை. ஒரு நாளைக்கு பத்தாயிரம் முதல் பல்லாயிரம் ரூபாய் செலவு செய்யும் பணக்கார மகன் ஷாம்.

ஷாமின் நண்பர்களுள் ஒருவன் இராமலிங்கம். அவனின் தந்தை ஓர் விவசாயி. இராமலிங்கம் தனது தந்தையிடம் ஷாம் செலவு செய்யும் விதத்தை சொல்லி பெருமையடித்துக் கொண்டான்.

அமைதியாக புன்னகைத்த இராமலிங்கத்தின் தந்தை ‘நாளை உன்னை எனது நண்பர் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன்’ என்றார். இராமலிங்கமும் தலையாட்டினான்.

 

அடுத்த நாள் வள்ளலார் இல்லம் என்ற தனது நண்பர் அருட்பிரகாசம் வீட்டிற்கு, இராமலிங்கத்தின் தந்தை அழைத்துச் சென்றார்.

வீட்டிற்கு பக்கத்தில் கூடாரம் அமைத்து, பசியால் வாடும் ஆதரவில்லாத மக்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார் அருட்பிரகாசம்.

அதனைப் பார்த்ததும் “என்னப்பா, இது?” என்றான் இராமலிங்கம்.

“வா, சொல்கிறேன்” என்று அருட்பிரகாசம் வரவேற்றார்.

“நமக்கு தேவையானவற்றை வைத்துக் கொண்டு மற்ற செல்வத்தை உணவில்லாமல் தவிப்போருக்கு உணவாக அளிப்பதே என் வாழ்க்கையின் இலட்சியம்” என்று இராமலிங்கத்தின் சந்தேகத்தை அருட்பிரகாசம் தீர்த்து வைத்தார்.

இராமலிங்கம் தனது தந்தையிடம் “நாமும் இவ்வாறு செய்து ஏழைகளின் பசியைப் போக்குவோம்” என்றான்.

“நமக்கு செல்வம் சேர்ந்த பிறகு செய்யலாம்” என்றார் இராமலிங்கத்தின் தந்தை.

 

மறுநாள் கல்லூரி சென்றதும் இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஷாமிடம் கூறினான் இராமலிங்கம்.

ஷாம் தனது தந்தையிடம் கூறினான். ‘நல்ல விசயம்தான். நாமும் செய்வோம்’ என்றார் ஷாமின் அப்பா.

இராமலிங்கமும் ஷாமும் இணைந்து ஒரு கூடாரத்தை அமைத்தனர். அனைத்து செலவுகளையும் ஷாம் செய்தான்.

உணவை சமைக்கும் பொறுப்பு இராமலிங்கத்தின் அம்மாவிடம் சென்றது. மற்ற ஏற்பாடுகள் அனைத்தையும் ஷாம் செய்தான்.

‘உணவின்றி தவிப்போர் உண்ணும் வள்ளலார் இல்லம்’ எனப் பெயர் வைத்தான் ஷாம்.

இவ்வளவு நாள் பணத்தை தண்ணியாக தேவையில்லாமல் செலவு செய்து விட்டேனே என ஷாம் மிகவும் வருத்தப்பட்டான்.

 

காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் வள்ளலார் இல்லத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

வள்ளலார் இல்லத்தில் உணவை உண்ணும் அனைவரும் ஷாமைக் கையெடுத்துக் கும்பிட்டனர்.

ஷாமைத் தொடர்ந்து அவனுடைய நண்பர்களும் அவரவர் ஊரில் வள்ளலார் இல்லம் என ஆங்காங்கே தொடங்கி அந்த வட்டாரத்தில் உணவின்றி தவிப்போரே இல்லை என்ற நிலையை உருவாக்கினர்.

வள்ளலார் ஏற்றிய ஜோதியை பணமுள்ள அனைவரும் ஏற்றி நாட்டில் பசியைப் போக்குவோம்.

உணவு கொடுத்தவர் உயிர் கொடுத்தவர் ஆவார்.

 

கி.அன்புமொழி

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்

 

One Reply to “பசியைப் போக்குவோம் – சிறுகதை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.