பசுமை இல்ல வாயுக்கள் – வளியின் குரல் 8

“வணக்கம் மனிதர்களே, எல்லோரும் நலம் தானே?

நல்லது. நான் ஒரு மாநாட்டிற்குச் சென்றிருந்தேன்.

‘என்ன மாநாடு?’ என்கிறீர்களா?

அறிவியல் சார்ந்த சர்வதேச மாநாடு தான். குறிப்பாக காலநிலை மாற்றம் மற்றும் அதன் பாதிப்புகளை மையப்படுத்தி அது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பல்வேறு அறிவியல் பூர்வமான தகவல்களை அந்த மாநாட்டில் விஞ்ஞானிகள் பகிர்ந்துக் கொண்டார்கள். அவற்றுள் பசுமை இல்ல வாயுக்கள் பற்றிய செய்திகளும் உள்ளடங்கும்.

எனக்கு புரிகிறது. ‘வாயுவான உன்னை யார் மாநாட்டிற்கு அழைத்தார்கள்?’ என்று தானே எண்ணுகிறீர்கள்?

என்னை யாரும் அழைக்கவில்லை. வழக்கம் போல, அழையா விருந்தாளியாக நானாகவே அங்கு சென்றிருந்தேன். போதுமா?

இன்று, அந்த அறிவியல் மாநாடு பற்றிய நினைவுகள் எனக்குள் எழுந்தது. அப்போது தான் முடிவு செய்தேன்.

இன்று உங்களுடன் ′பசுமை இல்ல வாயுக்கள்′ பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்துக் கொள்ளலாம் என்று.

முதலில் ′பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன?′ என்பது பற்றி சொல்கிறேன்.

பூமியின் வளிமண்டலத்தில் பல வாயுக்கள் இருக்கின்றன என்பது தான் உங்கள் அனைவருக்கும் தெரியுமே.

அவற்றுள் சில வாயுக்கள் சூரிய வெப்பக்கதிர்களை உறிஞ்சி, பின்னர் மீண்டும் வெளிவிடும் தன்மை கொண்டவை. அதனால் புவி சூடாகிறது. இந்த வாயுக்களே பசுமை இல்ல வாயுக்கள் எனப்படுகின்றன.

இம்ம்…. இன்னும் விளக்கமாக சொல்லட்டுமா?

சூரியக் கதிர்கள் வளிமண்டலம் வழியாக பூமியின் மேற்பரப்பை வந்தடைகிறது அல்லவா?

அவற்றுள் பெரும்பாலான ஒளிக் கதிர்கள் பூமியால் உறிஞ்சப்படுகின்றன. அதாவது பூமியின் மேற்பரப்பில் இருக்கும் மண், நீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் உறிஞ்சப்படுகின்றன.

ஆனால், சில ஒளிக் கதிர்கள், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், வெப்பமான அகச்சிவப்புக் கதிர்கள் பூமியால் எதிரொளிக்கப்பட்டு மீண்டும் வளிமண்டலம் வழியாக விண்வெளியை நோக்கிப் பரவுகின்றன.

இங்கு தான் வளிமண்டலத்தில் இருக்கும் பசுமை இல்ல வாயுக்கள் தனது வேலையை செய்கின்றன.

அதாவது, அவை அகச்சிவப்பு கதிர்களை உறிஞ்சி மீண்டும் வெளிவிடுவதன் மூலம் அதன் வெப்பம் வளிமண்டலத்தில் நிலை நிறுத்தப்படுகிறது. இதனால் புவி வெப்பமடைகிறது.

புவி வெப்பமடைவதால் காலநிலை மற்றம், பனிப்பறைகள் உருகுதல் உள்ளிட்ட பல்வேறு எதிர்மறை விளைவுகள் பூமியில் நிகழுகின்றன.

சரி, வளிமாண்டலத்தில் இருக்கும் வாயுக்கள் எல்லாம் பசுமை இல்ல வாயுக்களாக செயல்படுமா? இல்லை. இயற்கை அப்படி உருவாக்கியிருக்கவில்லை.

ஆனால், பல வாயுக்கள் பசுமை இல்ல பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

முக்கியமான பசுமை இல்ல வாயுக்கள் எவை தெரியுமா?

கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, மற்றும் தொழிற் துறை வாயுக்களான நைட்ரஜன் ட்ரைபுளோரைடு, பெர்ஃப்ளூரோகார்பன்கள், ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள், சல்பர் ஹெக்ஸாபுளோரைடு ஆகியனவே.

நீராவியும் ஓசோனும் கூட பசுமை இல்ல வாயுக்கள் தான். எனினும் புவி வெப்பமாதலில் நீராவியின் பங்கு மிகமிக குறைவு தானாம்.

பசுமை இல்ல பண்பை கொண்டிருந்தாலும், ஓசோன் படலம் ஆபத்தான புறஊதாக் கதிர்களை வளிமண்டல மேலடுக்கிலேயே வடிகட்டி, பூமியை காக்கும் முக்கிய பணியை செய்வதையும் இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

கவனித்தீர்களா?

ஒருசில பசுமை இல்ல வாயுக்கள் இயற்கையாகவே உருவாகின்றன.

ஆனால், காரணம் இன்றி இயற்கை எதையும் உருவாக்காது என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்.

″பிறகு ஏன் புவி வெப்பமாதலுக்கு காரணமான பசுமை இல்ல வாயுக்கள் இயற்கையில் உருவாகின்றன?″ என நினைக்கிறீர்களா?

இயற்கையாகவே பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் இருப்பதற்கு காரணம், பூமியில் உயிரினங்களை காக்கவே!

என்ன புரியவில்லையா?

இயற்கை பசுமை இல்ல வாயுக்கள் மட்டும் வளிமண்டலத்தில் இல்லாமல் போனால், பூமியின் சராசரி வெப்பநிலை -19°C ஆக தான் இருக்கும். இந்த காலநிலையில் உயிரினங்கள் வாழ முடியுமா? முடியாதே. என்ன இப்பொழுது புரிகிறதா இயற்கையின் நுட்பம்?

அதே சமயத்தில் மனித நடவடிக்கைகளாலும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு வளிமண்டலத்தில் கணிசமாக அதிகரிக்கிறது. சில புதிய பசுமை இல்ல வாயுக்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

″எப்படி?″ என கேட்பவர்களுக்காக சொல்கிறேன்.

மின்சார உற்பத்தி, போக்குவரத்து முதலியவற்றிற்காக தொல்படிவ எரிபொருட்கள் எரிக்கப்படுகின்றனவே அதனாலும், காடுகளை அழிப்பதன் மூலமாகவும், தொழிற்துறை மற்றும் பிற மனிதச் செயல்களாலும் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரிக்கிறது.

இன்னும் குறிப்பிட்டு சொல்லட்டுமா?

கார்பன்டை ஆக்சைடு தான் மனித செயல்பாடுகளின் மூலம் வெளிப்படும் முதன்மையான பசுமை இல்ல வாயு.

இதன் செறிவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது தான்.

சில தொழில்துறை செயல்முறைகள் மற்றும் நில பயன்பாட்டு மாற்றங்கள் மூலமும் கார்பன்டை ஆக்சைடு உமிழ்வு ஏற்படுத்துகிறது.

அடுத்து மீத்தேன்.

இம்ம்… நினைவிருக்கிறதா…?

ஆம் இயற்கை எரிவாயுவே தான்.

இது இயற்கை எரிவாயு அமைப்புகளில் நிகழும் கசிவுகள் மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் வெளிவருகிறது.

மண்ணில் குப்பைகள் மக்கும்போதும், கழிவுநீரைச் சுத்திகரிப்பதிலும் கூட மீத்தேன் உருவாகிறது.

சிறிய அளவில் சதுப்பு நிலங்கள், கடல்கள், எரிமலை மற்றும் காட்டுத்தீ மூலமும் மீத்தேன் இயற்கையாக உருவாகிறது.

நைட்ரஸ் ஆக்சைடு வாயுவும் பசுமை இல்ல வாயு என்று சொன்னேன் அல்லவா? இதுவும் எரிபொருளை எரிக்கும்போது உருவாகிறது.

எனினும் இதன் செறிவு, எரிபொருள் வகை, எரிப்பு தொழில்நுட்பம், மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவைகளைப் பொறுத்து இருக்கும்.

தவிர, நைட்ரிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் உற்பத்தியின் போதும் நைட்ரஸ் ஆக்சைடு உருவாகிறது.

சரி, மனிதர்களே பேசுவதற்கு இன்னும் அதிகமான தகவல்கள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது உடனே நான் வேறு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும். உங்களிடம் பேச இன்னொரு நாள் வருகிறேன்.

அனைவருக்கும் நன்றி.”

(குரல் ஒலிக்கும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.