படித்ததில் பிடித்தது – என் பார்வை

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

என்ற வள்ளுவனின் அடியினைத் தொட்டு ‘படித்ததில் பிடித்தது’ எனும் இத்தலைப்பினை நீங்கள் உற்று நோக்குங்கால் எளிமையானது என்று தோன்றும்.

ஆனால், பிடித்தது என்று வந்துவிட்டால் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். எனினும், நான் இந்த தலைப்பிற்கு தலை வணங்குவதே சாலச் சிறந்தது.

‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி நம் தமிழ் குடி’ என்கிற பழமொழியினை அடிக்கோடிட்டு, நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த 21-ம் நூற்றாண்டு வரை காலத்தின் ஆதியிலிருந்து அந்தம் வரை ஒரு நேர்க்கோட்டில் அமைப்பீர்களானால் என்னுடைய 23 வயதில் வாசித்தல் அனுபவம் என்பது ஏறக்குறைய எட்டு ஆண்டுகளே ஆகும்.

இந்த எட்டு ஆண்டுகால அனுவவம் என்பதும் அணுவிற்குள் அணுவாய் உள்ள அணுவில் ஆயிரத்தில் ஒரு பங்கினையாவது எட்டுமா என்பதே சந்தேகம் தான் .

உலகத்தின் எந்த மூலையில் நீங்கள் ஆராய்ச்சி செய்ய முற்பட்டாலும் பொன் கிடைக்கிறதோ, பொருள் கிடைக்கிறதோ ஆனால் சைவ சமயத்தின் பெரும் கடவுளான பரம்பொருளின் சூட்சுமத்தின் ஸ்தூல உருவமான லிங்கத்தின் பல்வேறு உருவ அமைப்புகள் இன்று வரை கிடைத்து கொண்டே இருப்பது என்பது விந்தையிலும் விந்தை.

இத்தகைய சுழலில் தமிழ் இலக்கியங்களின் இருபெரும் கூறுகளாக சைவமும் வைணவமும் நிலைத்து நிற்கிறது.

இவைகளை இச்சூழலில் கற்பனை என்றோ, கட்டுக்கதை என்றோ, காலத்திற்கு ஒவ்வாத்தன்மை உடையதென்று நீக்கிவிட்டால் தமிழ் இலக்கியத்தில் பெரும் பள்ளம் ஏற்படும். மேலும் அது தமிழன்னையின் இரு கைகளையும் உடைத்தெறிவதற்கு ஒப்பாகும்.

உலகத்தில் உள்ள ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களில் ஏதோ ஒரு தேடுதல் தன்னையும் தன்னைச் சார்ந்து வாழும் காலத்தினையும் நகர்த்திச் செல்கிறது என்பதே நம் கண்களில் தெரியும் உண்மையின் சத்தியமாகும்.

இக்காலத்தினைப் போல விஞ்ஞான படைப்புகள் ஏதுமில்லா காலத்தில் மனிதனின் தேடுதலின் உச்ச நிலையினை சைவத் திருமுறைகளாய் தன்னை வெளிப்படுத்துகின்றன என்பதே நான் ஆராய்ந்த மட்டில் உண்மை.

கண்ணுக்கு புலப்படாத காற்றிலிருந்து கைகளுக்கு அகப்படாத ஒளி, ஒலி, நீர், நெருப்பென, வானவியல் சாஸ்திரம் முதல் நட்சத்திர மண்டலங்கள் 14-கிற்கும் அப்பால் வரை தேடுதல்களை நிகழ்த்தி பதிவு செய்திருக்கிறான்.

நீங்கள் சொல்லுகின்றீர்களே மூட நம்பிக்கைகள் இங்கு உள்ளதென்று அது எப்படி..!

திருமந்திரத்தில் விந்து உருவாகி அதன் உறைப்பையில் உறைந்து பின் கருவாகி உருவாகி உயிர் பிரியும் வரை ஆணோ பெண்ணோ இரண்டிற்கும் நடுவானவரோ என்ற அனைத்து மனித உயிரின் மனம் முதல் ஆன்மா வரை அலசி ஆராய்கிறது, நீங்கள் கண்ட அறிவியலின் பல்வேறு பட்ட முடிவுகளை அன்றே பதிவு செய்திருக்கிறான்.

இன்னமும் நம் அறிவுக்கு எட்டாத உன்cஒன்ட்ரொல்லப்லெ ர்ப்ம் வேகத்தில் இயங்கக் கூடிய சக்கரம் முதல் உடலிலிருந்து உயிரை பிரித்தெடுக்கும் முறை வரை இங்கு பதிவு செய்திருக்கிறான்.

அனைத்தையும் பக்தி என்ற ஒரு வட்டத்திற்குள் நிலைநிறுத்தி விட்டான் .

எனினும் இவ்வட்டம் ஒரு வகையில் இவைகளுக்கு ஒரு பெரும் அரணாக அமைகிறது.

அறிவியலை ஆராய்ந்தவன் அதற்கு எதிர்முனையான அன்பு, தத்துவம், கருணை, தர்மம் இவைகளையும் ஒழுங்குப்படுத்தி உள்ளான்.

அன்பும் அறிவியலும் ஒரு புள்ளியில் தான் நிலைபெறுகின்றன. நம்பிக்கை என்கிற காதலின்பால் நாத்திகனோ ஆத்திகனோ இருவரும் ஒப்புக்கொள்கிற ஒரு இடம் இதுதான். விஞ்ஞானத்திற்கும், மெய்ஞானத்திற்கும் விளங்காமல் ஒரு சக்தி அல்லது ஒரு இயக்கம் உள்ளது என்பது தான்.

இந்த புள்ளியினைத்தான் ஆழ்வார்களும் தொண்டர்களும் ஊணும் உயிரும் சொட்டச் சொட்ட பாடல் மூலம் பதிவாக்கி தந்திருக்கிறார்கள்.

எஞ்ஞானத்திற்கும் விளங்காத அப்புள்ளியினைத் தான் தனக்கேற்றபடி எல்லா மதங்களும் காதலின்பால் வணங்குகின்றன, போற்றுகின்றன.

எது எப்படியோ அவரவர் தாய் அவரவர்க்கு உயர்ந்தவர்கள், உரிமையானவர்கள். ஆனால், அடுத்தவரின் தாயினை பழிப்பது என்பது எவ்வளவு பெரும் கொடும் செயலன்றோ?

தேனீக்கள் சேகரித்த தேனை சுவைக்காமல் அதன் கொடுக்கில் உள்ள நஞ்சினை மட்டுமே நாம் ஏன் சுவைக்கிறோம்.

ஒன்றை புரிந்து கொள்ளட்டும் இந்த உலகம். தேனியின் கொடுக்கில் உள்ள நஞ்சிக்கும் அது சேகரித்த தேனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதனை.

எது எப்படியோ நம்மறிவுக்கு சற்று ஒற்றிச் செல்வது கோபம் வெற்றி தோல்வி என இயல்பு வாழ்க்கையை ஒன்றி அமைகிறது.

இந்த இயல்பு வாழ்கையில் ஒவ்வொருவுயிரும் ஏதோ ஒன்றுக்கு ஆட்பட்டுக் கிடக்கிறது. அது மதுவோ, மாதுவோ, பொன்னோ, பொருளோ, இசையோ! இவைகளெல்லாம் ஒரு கட்டத்தில் திகட்டும் நேரத்தில் விரக்தி என்ற தேடுதல் கேள்வியால் இறைவனை நாட தன்னையறியாமல் தன்னை இயக்குகிறான்.

இவ்வகையில் என்னையும் இயக்குகிறது உலக பக்தி.

இலக்கியங்கள் அறிந்த வரை வாசித்தும், என் வரிசை பட்டியலில் அகத்திய சீடன் தொல்காப்பியனில் தொடங்கி ஆண்டாள், ஜியு போப், வீரமாமுனி, புத்தன், காந்தி, கண்ணதாசன், அழுகணி, சிவவாக்கியன் முதலானோர் வளர்த்த தமிழை தேடித்தேடி படித்தும், அப்பர், ஞானசம்பந்தன், சுந்தரன், மாணிக்கவாசகன் உரைத்த தமிழை உண்டும் ஏனோ இந்த ஊணும் உயிரும் உலகத்தின் மையமாம் நடராஜன் திருவடி அவனையே முழுவதுமாக தான் பத்து பாடல்கள் மூலம் காட்டிய சிறுமணவூர் முனுசாமி அருளிய ‘நடராஜர் பத்திலே’ என் மனம் நீங்காமல் நிற்கிறது.

       இறுதியாக,

தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன
தன்பிறவியுறவு கோடி
தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன
தாரணியை யாண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன
சீடர்கள் இருந்துமென்ன
சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை
ஒன்றை கண்டு தடுக்க
உதவுமோ இதுவெல்லாம் சந்தையுறவு என்று தான்
உந்தனிரு பாதம் பிடித்தேன்
யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்
கண்பார்வையது போதுமே
உன்னை விட்டெங்கெங்கு சென்றாலும் விழலாவனே நான்
உனையடுத்துங் கெடுவனோ
ஓஹோவிது உன்குற்றம் என்குற்றம் என்றும் இல்லை
உற்றுபார் மாபெற்ற ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமாயினும்
இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…

இப்படி நான் தேடும் தமிழ் பதிகத் தேடலும் என்னைத் தேடும் பதிகத்தின் தேடுதலும் என்று முடிகிறதோ அன்றே என் தேடலும் முடியுமென்ற நம்பிக்கையோடு என் உரையும் முடிகிறது .

என்றும் தமிழோடு
விசித்திரக்கவி
மா.லோகேஷ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.