படிப்படியாக – சிறுகதை

தந்தை தன்னை அழைத்ததும் பிரபு ஓடிச் சென்று “என்னப்பா?” என்றான்.

“பாங்க் ஒன்றிற்கு விண்ணப்பிக்கச் சொல்லி நேற்று ஒரு பாரம் கொடுத்தேனே? என்ன செய்தாய்?”

“அது பாங்க் பியூன் வேலைப்பா. போயும் போயும் பியூன் வேலைக்கா போவாங்க?”

“என்னடா? பியூன் வேலைன்னா அவ்வளவு இளக்காரமாப் போயிடுத்தா உனக்கு? என்ன சம்பளம் தெரியுமா? எடுத்த எடுப்பிலேயே பதினைந்தாயிரம் வரை கிடைக்கும்.”

“எனக்கு பிடிக்கலைப்பா. நான் பி.காம். பாஸ் பண்ணியிருக்கேன். தட்டெழுத்து, சுருக்கெழுத்து எல்லாம் பாஸ் பண்ணியிருக்கேன். என்னைப் போய் பியூன் வேலைக்குப் போகச் சொல்லுறீங்களே?”

ராமமூர்த்திக்கு மகன் பிரபுவின் வாதம் வேதனையைத் தந்தது. குடும்ப நிலைமை தெரியாமல் பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறானே என ரொம்பவும் வருத்தப்பட்டார்.

தன்னுடைய ஓய்வு காலத்திற்குப் பிறகு மகன் சம்பாதித்ததுப் போடுவான் என நினைத்து மனதை தேற்றிக் கொண்டிருந்தவருக்கு தற்போது மகனின் எண்ண ஓட்டத்தை அறிந்ததும் கவலையாக இருந்தது.

மீண்டும் ஏதோ சொல்லி வாயெடுத்து நிமிர்ந்தபோது பிரபு அங்கிருந்து நழுவியிருந்தான்.

அருகிலிருந்த அவனது மேஜையில் நேற்று அவர் அவனிடம் கொடுத்து விண்ணப்பிக்கச் சொல்லியிருந்த விண்ணப்பப் பாரம் கேட்பாரற்றுக் கிடந்தது.

அன்று மாலை.

சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டில் சாமான்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்ப எதிரிலிருந்த பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள் ராமமூர்த்தியும் பிரபுவும்.

இருவர் கைகளிலும் சாமான்கள் அடங்கிய பைச்சுமை. முக்கால் மணி நேரமாகக் காத்திருந்தும் பஸ் வரவில்லை. பஸ் ஸ்டாப்பில் கும்பல் அலை மோதியது.

மீண்டும் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு பஸ் ஊர்ந்து வந்து நின்றது. பஸ் படிக்கட்டுகளில் பயணிகள் தொங்கிக் கொண்டிருந்தனர். எவரும் இறங்குகிற வழியைக் காணோம்.

பிரபு தந்தையை அவசரப்படுத்தினான்.

“வாங்க அப்பா! சீக்கிரம்…ம்…”

“என்ன பிரபு? இந்த கும்பலில் எப்படி? கால் வைக்கக்கூட இடமில்லை. கூட்டமில்லாமல் காலியாய் வரும்போது போகலாம்.”

“என்னப்பா நீங்க? என்னிக்கு இந்த ரூட்ல கூட்டமில்லாம பஸ் வந்திருக்கு? எல்லா பஸ்ஸூம் இப்படித்தான் இருக்கும். பஸ் எப்போ காலியாய் வந்து நாம எப்போ வீடு போய் சேர்வது?

ஏறுங்கப்பா. ம்.. காலைக் கொஞ்சம் ஊன்றிக் கிட்டாப் போதும். அடுத்தடுத்த ஸ்டாப்ல ஒவ்வொருத்தரா இறங்க ஆரம்பிச்சதும் சௌகரியமாய் நின்னுக்கிடலாம்; உட்காரலாம். பசிக்குது. சீக்கிரம் வீட்டுக்குப் போகணும். வாங்க.”

தந்தையை அவசரப்படுத்தி அரற்றினான் பிரபு. பஸ்ஸில் தொற்றிக் கொண்ட ராமமூர்த்தி இப்போது பேச ஆரம்பித்தார்.

“பிரபு என்ன சொன்னே? காலை ஊன்றிக் கிட்டாப் போதும்னு தானே? அதே மாதிரிதான் நமது வாழ்க்கையில் வேலையும்.

நாம படிச்சதுக்குத் தகுந்த மாதிரி வேலை வரட்டும்னு காத்துக்கிட்டிருக்கிறதுக்குப் பதிலா, ஆரம்பித்துல கிடைக்கிற வேலையைக் கெட்டியாப் பிடிச்சிக்கிட்டு ஊன்றிக்கிட்டோம்னா போகப் போக அனுபவங்களும், பயிற்சியும் கிடைக்குது.

சர்வீஸ் முடிஞ்சு நிறையப் பேர் நமக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கிடறாங்க. நம்ம திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்குது. நமக்கு ஏற்ற வேலையையும் தேடிக்கிட முடியுது.”

பஸ்ஸினுள் இடிபாடுகளுக்கிடையே சிக்கித் தவித்துக் கொண்டிருந்த பிரபுவுக்கு தந்தையின் விளக்கம் நன்கு புரிந்து உள்ளத்தில் ஏதோ உறைத்தது.

வீடுபோய்ச் சேர்ந்ததும் முதல் வேலையாக தந்தையின் விருப்பத்திற்கேற்ப பியூன் வேலைக்கான அந்த பாங்க் விண்ணப்பப் பாரத்தை முறையாகப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தான்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.