பணப்பயிர் – தேயிலை

தேயிலை தேநீர் ( டீ) என்னும் உற்சாக பானம் தயாரிக்கப் பயன்படுகிறது.

தேயிலைச் செடியின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்தாற் போல் உள்ள இரு இலைகளையும் கொய்து உலர வைத்து பதப்படுத்தி தேயிலை தயாரிக்கப்படுகிறது.

தேயிலை, வற்றாத பல வருடங்களுக்கு பயன் தரக்கூடிய செடி வகையாகும். இவைகள் மரங்களாக வளரும் தன்மையுடையவை.

எனினும் தேயிலையைப் பறிக்கவும், புதிய இலைகள் தொடர்ந்து முளைக்கவும் தேயிலைச் செடிகள் 1.5 மீ. உயரத்திற்கு வெட்டிவிடப்படுகின்றன.

 

வளர ஏற்ற சூழ்நிலை

அயன மற்றும் துணை அயனப் பகுதிகளின் மலைகளின் சரிவுப் பகுதிகளில் தேயிலை வளர்க்கப்படுகிறது. சராசரியான 21c வெப்பமும், 150 செ.மீ. மழையும் நல்ல மண் வளமும் தேயிலை வளர தேவைப்படுகிறது.

அதிக பனி இச்செடிகளை வீழ்த்தும். கடுமையான காற்று மற்றும் அதிக வெப்பத்தை தாங்கும் திறன் இவ்வகைச் செடிகளுக்கு இருப்பதால் மலைச் சரிவுகளில் காற்று வீசும் திசையில் இது வளர்க்கப்படுகிறது.

இப்பயிர் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000மீ உயரம் வரை உள்ள மலைப்பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இப்பயிர் தொழிலாளர்கள் சார்ந்த பயிராகும். தேயிலை அதன் வளர்ச்சியைப் பொறுத்து 5 முதல் 10 நாட்கள் வரை பறிக்கப்படுகிறது.

தேயிலைத் தூள் அளவு, வடிவம், மற்றும் தூய்மை ஆகியவற்றைக் கொண்டு தரவரிசைப் படுத்தப்படுகிறது. தேயிலையை ஏற்றுமதி செய்யும் போது அவற்றின் இலைகள், தண்டுகள், ஈரப்பதம், உள்ளடக்கம், நறுமணம், சுவை மற்றும் வண்ணம் ஆகியவைகள் ஆராயப்பட்டு சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.

தேயிலையின் வகைகள் இலையின் அளவைப் பொறுத்து இவை அசாம் வகை, சீன வகை, கம்போட் வகை என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

சீன வகையில் இலைகளின் அளவு சிறிதாக உள்ளது. இவைகள் உயரமான பகுதிகளில் நன்கு செழித்து வளரும்.

அசாம் வகையைப் பொறுத்தவரை இலைகள் அளவில் பெரிதாக உள்ளது. இவைகள் அதிகம் உரயம் இல்லாத மலைப்பகுதிகளில் செழித்து வளரும்.

கம்போட் வகையில் இலைகளின் அளவு நடுத்தரமானது.

தேயிலையில் இருந்து தயார் செய்யப்படும் தேநீரின் நிறத்தைப் பொறுத்து தேயிலைகள் பச்சைத்தேயிலை, கறுப்புத்தேயிலை, ஊலோங்தேயிலை, வெள்ளைத்தேயிலை என வகைப்படுத்தப்படுகின்றன.

சீனா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தேயிலையை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாகும். இந்தியாவில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வளர்க்கப்படுகிறது.

பயன்கள்

மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றன.

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றன.

கேன்சர் வராமல் தடுக்கும் எதிர்ப்பு சக்தியினைக் கொண்டுள்ளன.

நீரழிவு மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும் ஆன்டி ஆக்ஸ்டென்டுகளைக் கொண்டுள்ளன.

வாய் துர்நாற்றத்தைத் தடுக்கின்றன.

உடல் எடையைக் குறைக்கின்றன.

 

கலப்படத்தைக் கண்டறிதல்

சாதாரண தண்ணீரில் கலக்கும் போது சாயம் வரும். வெள்ளைப் பேப்பரில் வைக்கும் போது சாயம் படியும்.

உள்ளங்கையில் வைத்துத் தேயிலைகளைக் கசக்கி முகர்ந்தால் தேயிலை வாசைன வரும்.