பணமில்லா பரிவர்த்தனை – கதை

இரவு 8:30 மணி

வாசலில் “..அம்மா… அம்மா ….” என்று கூப்பிடும் சத்தம் கேட்டு மங்கலம் வெளியே வந்தாள்.

“இதோ வந்துட்டேன்பா. யாரு? அட! நம்ப பிச்ச கண்ணு. இந்த நேரத்துல வந்து இருக்கியேப்பா… வீட்டுல ஒன்னும் சமைக்கல. நாங்களே சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு டெலிவரி பாய தான் எதிர் பார்த்துகிட்டு இருக்கிறோம்.”

“அம்மா கொஞ்சம் தண்ணி கொடுங்கம்மா” என்று பாட்டிலை கொடுத்தான் பிச்ச கண்ணு.

“இரு வாறேன்” என்று பாட்டிலுடன் உள்ளே சென்றாள்.

வீட்டிற்குள் இருந்த மங்கலத்தின் கணவர் ராஜலிங்கம் “வெளியே கூப்பிட்டது யார்?” என்று கேட்டார்.

மங்கலம் “நம்ப பிச்சைக்கண்ணு தாங்க. பசிக்குதுன்னு வந்து இருப்பான் போல இருக்கு. உங்ககிட்ட பத்து ரூபாய் இருந்தா கொடுங்க …” என்றாள்.

“என்கிட்ட இபோதைக்கு சில்றை இல்லையே …” என்றார் ராஜலிங்கம்.

தண்ணீருடன் வெளியே வந்த மங்கலம், பிச்சைக்கண்ணுவிடம் “ஐயா கிட்ட கூட இப்போதைக்கு சில்லறை காசு இல்லையாம்.”

“பரவாயில்லம்மா. நானும் டெலிவரி பாய்க்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன். அவர் கிட்ட நம்ம வீட்டு அட்ரஸ் தான் கொடுத்து இருக்கேன். இப்போதான் பணமில்லா பரிவர்த்தனை ஆச்சு.

பரவாயில்லை, ஐயா கிட்ட சொல்லி எனக்கு போன்பே பண்ணிட சொல்லுங்க. என்கிட்டயும் ஜிபிஎஸ் வசதி எல்லாம் இருக்குது.” என்று கூறினான் பிச்சைக்கண்ணு.

மங்கலம் “பரவாயில்லப்பா நீயும் இப்ப ரொம்பவே மாறிட்டே. காலத்துக்கு ஏத்த மாதிரி நீயும் முன்னேறிட்டே!” என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

பிச்சைக்கண்ணு டெலிவரிபாயை எதிர்நோக்கி வெளியே காத்திருந்தான்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.