பல வகைத் தொழில்கள்

பல வகைத் தொழில்கள் உலகில் உண்டு; அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

தொழில்களை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் முதல்நிலைத் தொழில்கள் இரண்டாம் நிலைத் தொழில்கள், மூன்றாம் நிலை, நான்காம் நிலை மற்றும் ஐந்தாம் நிலை என ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.

 

முதல்நிலை

இத்தொழில்களில் மனிதர்கள் இயற்கை வள ஆதாரங்களோடு நேரடியாக இணைந்து செயல்படுகின்றனர். இவற்றை பழமையான தொழில் நடவடிக்கை எனலாம்.

உணவு சேகரித்தல், விலங்குகளை வேட்டையாடுதல், கால் நடைகளை மேய்த்தல், கனிமங்கள் வெட்டி எடுத்தல், மீன் பிடித்தல், மரம் வெட்டுதல், வேளாண்மை ஆகியவை முதல்நிலைத் தொழில்கள் எனவும் இவற்றில் ஈடுபடுவோரை சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்றும் அழைக்கின்றனர்.

 

இரண்டாம் நிலை

இதில் மூலப்பொருட்களை உற்பத்தி முறைகளுக்கு உட்படுத்தி அவற்றை முடிவுற்ற பொருளாக மாற்றி, மூலப் பொருட்களின் பயன்பாட்டினையும் மதிப்பினையும் பெருக்குகின்றனர்.

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை, இரும்புத் தாதுவிலிருந்து கிடைக்கும் இரும்பு, எஃகு போன்றவை இவ்வகையைச் சார்ந்த தொழில்களாகும். இரண்டாம் நிலைத் தொழில் புரியும் பணியாளர்கள் நீலக் கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

 

மூன்றாம் நிலை

இரண்டாம் நிலைத் தொழில்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சேவைகளை மூன்றாம் நிலைத் தொழில்கள் என அழைக்கப்படுகின்றன.

தொழில் நுட்பத்தில் சிறப்பு மிக்க தொழில் நுட்ப பணியாளர்களுக்கும், வங்கி பணியாளர்களுக்கும் மூன்றாம் நிலைத் தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வகை தொழில் புரிவோரை வெளிர் சிவப்பு கழுத்துப் பட்டை பணியாளர்கள் என்று அழைக்கிறோம்.

 

நான்காம் நிலை

கல்வித்துறை, நீதித்துறை, மருத்துவம், பொழுதுபோக்கு, கேளிக்கைகள், நிர்வாகம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகிய தனித்தன்மை கொண்ட சூழலில் பணிபுரிவோர் நான்காம் நிலை தொழில்களில் அடங்குவர். இத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

 

ஐந்தாம் நிலை

ஆலோசனை வழங்குவோர், மற்றும் திட்டம் வகுப்போர் போன்ற உயர்நிலையில் உள்ளோர் இவ்வகைத் தொழிலில் அடங்குவர். அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள தீர்மானிக்கும் திறன் கொண்ட அறிவுரை வழங்குவோரும் சட்டபூர்வமான அதிகாரிகளும் ஐந்தாம் நிலைத் தொழில்களில் அடங்குவர். இந்நிலைத் தொழிலாளர்கள் பெரு நகரங்களிலேயே அதிகம் காணப்படுகின்றனர்.

வளர்ந்து வரும் நாடுகளில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தொழில்களிலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நிலை தொழில்களிலும் மக்கள் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.