பழந்தமிழரின் மழைமானி எது தெரியுமா?

நம் நாட்டில் வேளாண்மை முதன்மைத் தொழிலாக இருந்து வந்துள்ளது. அவ்வேளாண்மைத் தொழிலுக்கு மழை என்பது இன்றியமையாதது.

தற்போது பெய்யும் மழையின் அளவினைக் கணக்கிட நவீன கால மழைமானியைப் பயன்படுத்துகிறோம்.

பழங்காலத்தில் மழையின் அளவினைக் கணக்கிடுவதற்கு தனியாகக் கருவிகள் ஏதும் இல்லை.

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் ஆட்டுக்கல்லையே பழந்தமிழர் மழைமானியாகப் பயன்படுத்தியுள்ளனர்.

அந்தக்காலத்தில் ஆட்டுக்கல் வீட்டு முற்றத்தில்தான் இருக்கும். மழைபெய்யும் சமயங்களில் ஆட்டுக்கல்லின் குழிப்பகுதிக்குள் மழைநீர் நிறைந்திருக்கும்.

ஆட்டுக்கல்லில் நிறைந்திருக்கும் மழைநீரின் அளவினை வைத்து பெய்த மழையின் அளவு அன்றைக்கு கணக்கிடப்பட்டது.

அதாவது ஆட்டுக்கல்லில் நிறைந்திருக்கும் மழைநீரை விரலால் அளந்து பார்த்து, அது உழவுக்கு ஏற்ற மழையா இல்லையா என்பதை கண்டறிந்தனர்.

மழைப் பொழிவின் அளவினை பழங்காலத்தில் ‘செவி‘ அல்லது ‘பதினு‘ என்னும் அளவுமுறையில் கணக்கிட்டனர். இந்த அளவானது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது.

மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர்.

அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதனை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை ‘பதினு’ மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக் கொண்டு ‘முதல்உழவு’க்கு தயரானார்கள்.

பெய்த மழைக்கு அதனுடைய அளவின் அடிப்படையில் அம்மழைக்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.

சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.

மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.

பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும்.

அடைமழை – ஐப்பசியில் பெய்வது

கனமழை – கார்த்திகையில் பெய்வது..

இதையே அறிவியல் வேறு வகையில் கூறுகிறது:

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது ‘தூறல்’.

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது ‘மழை’.

4- 6 மி.மீட்டருக்கு மேல் துளியின் விட்டம் இருக்குமானால் அது ‘கனமழை’ ஆகும்.

ஆட்டு உரல் குழி மழை நீரால் நிரம்பி இருந்தால் அது ஓர் உழவு மழை ஆகும். அதாவது பெய்து முடித்த மழையானது உழவு செய்து விதைக்கப் போதுமானதாகும் என்று பொருள். ஏர் கலப்பையை கொண்டு இலகுவாக மண்ணில் ஓர் அடி ஆழத்துக்கு உழவு செய்யலாம். நிலத்தை உழும் போது ஏர்க்கால் இறங்கும் அளவு பூமி நனைந்திருந்தால் அதுதான் உழவு மழை.

மழையின் அளவைப் பொறுத்து ஈருழவோ,  ஐந்து உழவோ, பத்து உழவோ என கணக்கிட்டார்கள்.

ஐந்து உழவிற்கு மேல் மழை பெய்தால் நதிகளில் நீர் கரை புரண்டு ஓடும் என்று கணக்கிட்டனர்.

மழை பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.