பாகற்காய் புளிக்கூட்டு செய்வது எப்படி?

ஆறுசுவைகளில் கசப்பு சுவையும் ஒன்று. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட அடம் பிடிப்பதும் கசப்பு சுவையைத்தான். நாம் என்றும் இளமையாகத் தோற்றம் அளிக்க கசப்பு சுவைக்கு உரிய பாகற்காய், சுண்டைக்காய் போன்ற காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

மிகவும் எளிமையான பாகற்காய் புளிக்கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 250 கிராம்

புளி – எலுமிச்சை அளவு

பெரிய வெங்காயம் – 200 கிராம்

வெல்லம் – 3 டீஸ்பூன் (பொடித்தது)

மிளகாய்தூள் – ½ டீஸ்பூன்

மல்லித்தூள் – ¼ டீஸ்பூன்

சீரகத்தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

 

தாளிக்க:

கடுகு – ¼ டீஸ்பூன்

சீரகம் – ½ டீஸ்பூன்

கருவேப்பிலை – 2 கீற்று

நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்

 

செய்முறை:

பாகற்காய் மற்றும் பெரிய வெங்காயம் இவற்றை படத்தில் உள்ளவாறு நறுக்கிக் கொள்ளவும்.

பாகற்காய் புளிக்கூட்டு
பாகற்காய் மற்றும் பெரிய வெங்காயம்

 

குக்கரில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், வட்ட வடிவில் அரிந்த பாகற்காய் ஆகியவற்றை ஒரே நேரத்தில் சேர்த்து சிறுதீயில் 5 நிமிடம் வதக்கவும்.

ஓரளவு வதங்கியதும் மிளகாய் தூள் ½ டீஸ்பூன், மல்லித்தூள் ¼ டீஸ்பூன், சீரகத்தூள் ¼ டீஸ்பூன், தேவைக்கேற்ப உப்பு ஆகியவற்றைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பின் எலுமிச்சை அளவு புளியைக் கரைத்து புளிக் கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் 3 டீஸ்பூன் வெல்லத்தூளைச் சேர்க்கவும்.

குக்கரை மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கி விடவும். சுவையான பாகற்காய் புளிக்கூட்டு தயார்.

பாகற்காய் புளிக்கூட்டு
பாகற்காய் புளிக்கூட்டு

 

இந்த புளிக்கூட்டு சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். சுடுசாதத்துடன் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம்.

குறிப்பு: அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வெல்லம் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பாகற்காய் புளிக்கூட்டு செய்யலாம்.