பாசக்காரி குறும்படம் விமர்சனம்

பாசக்காரி குறும்படம் காதலும் பாசமும் இரண்டறக் கலந்த, மனத் துள்ளலும் துயரமும் கலந்த அருமையான படம்.

தாய், தந்தை, மகள் இவர்கள் மூவருக்குள்ளும் நடக்கும்‘புரிந்து கொள்ளல்’ முக்கியமானது.

அது எப்படி அமைந்தால் சுகமான வாழ்க்கை அமையும் என்பதைக் கற்றுக் கொடுக்கும் அழகிய குறும்படம் இது.

முப்பிரிவு உணர்வுப் போராட்டம், சமூக இயல்பு, மனப்பிறழ்ச்சி, சுய மதிப்பீடு, இயல்பு மாற்றம் எனப் பல்வேறு தளங்களிலிருந்து, இப்படத்தை நோக்க வேண்டியுள்ளது.

இவை அனைத்தும், சரிப்படுத்தப்பட்டால், உலகில் இதைப் போன்ற வாழ்வு வேறோன்றுமில்லை எனும் ஆழமான கருத்தை இக்குறும்படம் விளக்குகிறது.

“நம் இல்லத்தில் மட்டும்தான் இப்படி நடக்கிறது. பிற வீட்டில்லெல்லாம் என்னமா வாழ்கிறார்கள்” என்று ஒவ்வொரு வீட்டிலும் கூறுவதைக் காணலாம்.

கிராமத்தில் இதை ‘ இக்கரைக்கு அக்கரைப் பச்சை’ என்பார்கள். “வீட்டுக்கு வீடு வாசப்படி” என்பார்கள்.

இதைப் புரிந்து கொண்டால் போதும், குடும்பத்தின் பெயர் வீதியுலா செல்லாது.

தினசரியில் நம்படம் போட்டுச் செய்தி வராது. எல்லோருக்கும் இல்லங்கள் சொர்க்க பூமியாக மாறிவிடும் சரி. இதையேன் நாம் எல்லோரும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம்? அதுதான் இக்குறும்படம் சொல்லும் கதை.

மகளிடம் பாசத்தைக் காட்டத் தெரியாத தாய். தாயிடம் முறையாகப் பேசத் தெரியாத மகள். தாய்-மகள் இடையே புரிதலைக் கொண்டுவர முயற்சிக்காத தகப்பனார். இவர்கள் மூவரும் திருந்துவது எப்படி? கதையின் சிக்கல் இது தான்.

மகள் பாசத்திற்கு ஏங்கித் தவிக்கையில், பாசம் காட்டும் காதலன் வருகிறான்; பாசத்தைக் காட்டுகிறான். இங்கேதான் தவறு ஏற்படுகிறது. காதலனின் பாசத்தை, அன்பை ஏற்கத் துணிகிறாள் கதாநாயகி.

இன்று நாட்டில் பலபேர்கள் இப்படித்தான் காதல் வயப்படுகிறார்கள். அதில் பாதிப்பேர் நிம்மதி எனும் கரையேறுவர். மீதிப்பேர் சோகமெனும் கடலில் முழ்குவர்.

மனம் விரும்பும் நேரத்தில் பாசம் அளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், பாசம் காட்டும் திசை நோக்கி கவர்ந்திழுக்கப்பட்டு விடும் என்ற கருத்தை இயக்குநர் கூறுகின்றார். இக்கால கட்டத்திற்கு ஏற்றதான கதைக் கருவாக இது அமைந்திருக்கின்றது.

புகழ்பெற்ற பெர்லின் நாவலான “LOVE STORY” நாவலில் கூட, மகனிடம் தந்தை காட்டாத பாசத்தையும், மகன் எதிர்பார்க்கும் தந்தையின் பாசத்தையும் மிக அழகாக நாவலாக்கி இருப்பார், ‘எரிக் செகல்’ (Erich Segal-1970) எனும் கதாசிரியர்.

உறவுகளுக்கு இடையிலான வெளி என்பது, கூடவோ குறையவோ கூடாது. அது மிகச் சரியானதாகச் செயல்பட்டாக வேண்டும்.

பெற்ற மகனை விரோதியாகப் பாவிப்பதும், தாய், தந்தையரை வெறுத்து முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும், எலியும், பூனையுமாய் கணவன்-மனைவி இருப்பதும், முரண்பாடுகளின் மொத்த உருவமாய் சகோதர சகோதரிகள் அமைவதும், நாம் வாழும் வாழ்வில் அங்கங்கே கண்டு கொண்டே தான் இருக்கிறோம்.

வாழ்வது ஒரு முறை தானே? அதை வாழ்ந்து விட்டுத் தான் இறந்தாலென்ன? சூதும் வாதும் சொந்தங்களுக்குள்ளே செய்து, கடைசியில் சொந்தங்களே இல்லாமல் வெறுமையில் உழன்று தனிமையில் மனிதன் சாகிறான்.

இப்படிப்பட்ட மனப்பிறழ்ச்சி தவிர்க்கப்பட வேண்டும் ‘இயல்பு மாற்றம்’ என்பதை சிறிது சிறிதாகவே நாமே, நமக்குச் செய்து கொண்டு, வாழ்வில் பாசம் காட்டி நேசத்துடன் வாழ்ந்தால், அதைவிடச் சுகம் வேறு ஒன்றுமில்லை. அதை ஆழமாக உணர்த்தும் கதை தான் இது.

குறும்பட நேர்த்தி

கதையை நேர்த்தியாகக் கூறுவதும், காட்சிகளை எதார்த்தமாக வடிப்பதும், உணர்வுகளை மிகை உணர்ச்சிகளாக இல்லாமல் காட்டுவதும் இக்குறும்படத்தின் நேர்த்தியாக உள்ளன.

பாதிப்படம் காதலையும், மீதிப்படம் பாசத்தையும் காட்டுகிறது. ஓரிடத்தில் தருவதும், மற்றோரிடத்தில் மறுக்கப்படுவதும் தெளிவாகக் காட்சிகளால் செதுக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வலி படம் பார்ப்பவர்களைத் தடாலடியாய் தாக்குகிறது. பாசம் தரும் இடத்தில் பெற முடியாமலும், பாசம் கிடைக்காத இடத்தில் அதற்காக ஏங்குவதுமான இடத்தில் கதாநாயகி அற்புதமாகக் கதையை உள்வாங்கி நடிப்பைக் காண்பித்திருக்கின்றார். கதாநாயகி இரசித்தலுக்கானவர்.

இயற்கையைக் குறும்பட இயக்குநர்கள் எப்படியாவது தம் படத்திற்குள் நுழைத்துவிட எத்தனிப்பது இயல்பு. அதை இக்குறும்பட இயக்குநரிடமும் காணலாம். இயற்கையழகை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளரின் அழகுணர்ச்சியும், கலைத் தன்மையும் ஒரு பாடலின் வெளிப்பாட்டிலேயே தெரிகிறது. அற்புதம். காதலின் புனிதம் கெடாத இளமையின் தெறிப்பு அப்பாடல்.

இசை மனதை வருடுகிறது. திரைப்படங்களுக்கு தரப்படும் மெனக்கெடல் இக்குறும்படத்திற்குத் தரப்பட்டுள்ளது. “நீ ஒன்னுமே சொல்லல” காதல் பாடல் பழைய மெட்டென்றாலும் அருமை. பிரசன்னா குரல் இனிமை.

எதார்த்தமான காட்சி அமைப்புகள், மிகையாக இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளன. காதலன், காதலியின் சலதோசம் போக்கக் கசாயம் தருவது கிராமத்தின் எதார்த்தமாக அறிந்து ரசிக்க முடிகின்றது.

இரண்டாண்களாகக் காதலித்தும் பேசாமல், பார்த்து விட்டுச் செல்லும் காதலன், காதலிக்கிறான் எனத் தெரிந்தும் பார்க்காமல், ஆனால் உள்ளத்தால் ரசித்துவிட்டுச் செல்லும் காதலி. வழக்கப்படி நண்பன், தோழி.

நளினமான காதல் இதற்குள் ஓடி ஒளிந்து மிளர்வதைப் பார்வையாளன் கண்டு காதலை ஆராதிக்கின்றான். இருவரும் சேர்ந்து விட மாட்டார்களா? என்ற ஏக்கமே படம் பார்ப்பவர் மனதில் எழுகிறது.

முடிவில், தந்தை பேசுகிறார். தாயின் அன்பு, தந்தையின் தவறு எல்லாம் புரிய வைக்கப்படுகிறது. கதாநாயகி குடும்பத்திற்காகக் காதலைத் தவிர்க்கிறாள். ஆனால், தாயோ தன் மகள் மேல் கொண்ட பாசத்திற்காகக் காதலர்களைச் சேர்த்து வைக்கிறாள்.

நடிகர்கள் அனைவரும் தங்களின் பாத்திரம் அறிந்து நடித்துள்ளனர். கதாநாயகியின் குளோசப் காட்சிகளில் அழகு கொட்டிக் கிடக்கின்றது.

வசனங்கள் இன்னும் கூர்மையாக எழுதப்பட்டிருக்கலாம். நடுத்தரப் பார்வையாளன் சாதாரணப் படமென நினைக்க வைத்து விடுகிறது வசனங்கள். மற்றபடி குறும்படம் சமூகத்திற்கு நல்ல செய்தியைக் கூறிச் செல்கிறது.

படம் தரும் பாடம்

‘எரிந்து எரிந்து விழும் தாயிடம் பாசம் இல்லை என்றாகி விடாது. தாய், பாசத்தைக் காட்டத் தெரியாதவளாக இருக்கிறாள் என்பதை ஒவ்வொரு குழந்தையும் வயது வரவரத் தெரிந்து கொள்ள வேண்டும்.’ என்பதைப் பசுமரத்தாணி போல் பதிய வைத்து விடுகிறது இக்குறும்படம்.

தென்றல் அரசி எனும் பார்வையாளர் பாசக்காரி குறும்படம் குறித்துக் கருத்துக் கூறும்பொழுது,

”சூப்பர் படம். என் கண்கள் இரண்டும் களங்கிய தருணம். தாய் சம்பந்தம் பேசி திரும்பும் நேரம் தன் மகளைக் கடைக் கண்ணால் பார்த்த அந்த நிமிடம் என் உதிரமே நின்று போகும் அளவுக்கு, தாய்க்கும் மகளுக்கும் உள்ள பாசத்தையும் நான் உணர்ந்தேன். அருமையான காட்சி சூப்பர். இதில் நடித்த எல்லாரும் நல்ல பசங்க. ஆனால், தேன்மொழி விழி பேச்சு எல்லாம் எதார்த்தம், சூப்பர், அருமை, நன்றி.” என்கிறார்.

பாசக்காரி படக்குழு

இயக்குநர் – அணில்

பாடல் / இசை – ஜெனிட்டா

ஒளிப்பதிவாளர் – சந்தீப் திரிஷ்யா

நடிகர்கள் – திணேஷ், தீபிகா

பாசக்காரி குறும்படம் பாருங்கள்

குறும்படத்தைக் காண கீழே உள்ள காணொளியை சொடுக்கவும்.

(குறும்படம் விரியும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

4 Replies to “பாசக்காரி குறும்படம் விமர்சனம்”

  1. நீ ஒண்ணுமே சொல்லல என் வார்த்தையை கேட்கல…

    பாசக்காரி ஒரு நல்ல திரைக்கதை. 29 நிமிடத்தில் ஒரு முழுநீள படத்தின் உணர்வை பதிய வைக்கிறது. எப்பொழுதும் தாய்க்கு மகள் மீது ஒரு சந்தேகக் கண் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அது நிச்சயம் மகளின் ஒழுக்கத்தை சந்தேகப்படுவதாக மட்டும் இருக்காது. மாறாக தன் மகள் எங்கும் சூடும் போய்விடக்கூடாது என்ற அர்த்தமே அதில் பொதிந்திருக்கும்.

    விடலைப் பருவத்தில் ஏற்படக்கூடிய எல்லா ஆண்களுக்கும் உண்டான உணர்வை மட்டும் பேசாமல் ஒரு அழுத்தமான காதல் கதையைப் பின்னி இருப்பது இந்த கதைக்கு வலு சேர்க்கிறது. இரண்டு ஆண்டு காலமாக அதே இடம், அதே பைக், அதே பெண், அதே நண்பன், இப்படி அந்த இடத்தில் இருந்து தொடங்கும் கதையும் அதே இடத்தில் முடிவுக்கு வருவதும் பாராட்டுக்குரியது.

    தாமரை தான் கதை நகர்விற்கு முக்கியமான களம். சுயத்தை விரும்பும் யாரும் தங்களுடைய அடையாளத்தை மறைத்துக் கொள்வதில்லை. தேன்மொழியும் அப்படிதான். தனக்கு படிக்க வரவில்லை என்றாலும் கூட தனக்கு தெரிந்த வேலையில் உச்சத்தில் தொடவே துடிக்கும் அந்த உணர்வு மெச்சத் தகுந்தது. ஒரு சராசரி தந்தை குடும்பத்தில் எழும் பிரச்சனைகள் பிறகு தன் உணர்வுகளை மிக அழுத்தமாகவே பதிவு செய்யும் காட்சி அருமை.

    திரைக்கதை மட்டுமல்ல இசை, ஒளிப்பதிவு, உள்ளிட்ட அனைத்தும் இந்தப்படத்தின் ஆணிவேராக நிற்கிறது.

    முதல்முறையாக படத்தின் விமர்சனத்தை படிக்காமல் நேரடியாக படத்தைப் பார்த்து என்னுடைய கருத்தை பதி விடுவதற்காக ஒரு நல்ல திரைப்படத்தின் லிங்க்கை அனுப்பிய பேராசிரியர் அய்யா சந்திரசேகரன் அவர்களுக்கு மகிழ்ச்சியும் , வாழ்த்துக்களும்.

    ஒரு நல்ல படைப்பை எப்படி தெரிந்துகொள்வது என்பதற்கு இதுபோன்ற பதிவுகள்தான் அல்லது படைப்புகளை குறித்தான பேசுபொருள் தான் அப்படைப்புக்கான வெற்றியாக கருத முடியும்.

    நிச்சயம் பாசக்காரி வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

    படக்குழுவிற்கும், தயாரிப்பாளருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    தேன்மொழியின் கண்கள்தான் நடித்ததாக உணர்கிறேன். அகவே கண்களுக்கும் என்னுடைய அழுத்தமான வாழ்த்துக்கள்.

    தாய், தந்தை, காதலன் நண்பன், தோழி அனைத்து நடிகர்களும் தன்னுடைய பாத்திரத்தை ஏற்று சிறந்த முறையில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் நிச்சயம் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிட்ட வேண்டும்.

    மீண்டும் ஒருமுறை படக்குழுவிற்கும் மற்றும் இயக்குநருக்கும் இப்படத்தை, அறிமுக படுத்திய பேராசிரியருக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும் வாழ்த்துக்களும்.

  2. ஒரு முழு திரைப்படத்தை ஒலி கேட்டுவிட்டு …அதை மீண்டும் காட்சி வடிவில் காட்சி வடிவில் பார்க்கும் போது …,அது நமக்குள் இருக்கும் கனவுகளை ,கலைத்திறனை பட்டை தீட்டும் என நான் நம்புகிறேன்.

    இதற்கு முன்னால் தாங்கள் எழுதிய குறும்பட விமர்சனங்களை, முதலில் குறும்படத்தை பார்த்துவிட்டு பிறகு விமர்சனத்தை படிப்பதாக வைத்திருந்தேன். அதான் படத்தை பார்த்துவிட்டோமே…, எதற்கு பக்கம் பக்கமாக விமர்சனங்களை படிக்க வேண்டும் எனும் எண்ணம் இயல்பாகவே மேலெழும்புகிறது.

    இப்போது முதலில் விமர்சனங்களை படித்து உள்வாங்கி கொண்டு பிறகு .., குறும்படத்தை பார்க்கிறேன். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.

    முதலில் குறும்பட ஒளிப்பதிவு செய்தவரை நான் பாராட்டுகிறேன்.

    இயற்கை காட்சி அடுக்குகளோடு மிக அழகாக உள்ளது.

    இசையும் பாடலும் மிக நுட்பமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

    எந்த ஒன்றை நாம் மிக எளிதாக நிகழ்த்தி விட முடிகிறதோ, அதைத்தானே திரும்பத்திரும்ப செய்கிறோம்.

    கோபத்தை எவர் மீதும், எவ்வளவு விரைவாக காட்டிவிடுகிறோம்.

    அன்பை ஆயுதமாக பயன்படுத்துபவர்கள் மட்டுமே பண்பை பரிசாக பெறமுடியும்

    பல மனிதர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அன்பை கோபத்தின் குறியீடுகளாகவே வெளிப்படுத்துகிறார்கள்.

    இந்த சிறிய அளவிலான உண்மையை பல ஆண்டுகளாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் குழந்தைகளும் புரிந்து கொள்ள முனைவதேயில்லை.

    தாய் தந்தையே இவற்றை பரிந்து கொள்ளாதே போது, தான் புரிந்து கொண்டு என்ன நிகழப்போகின்றது என மனதிற்குள் கண்ணீர் ஊற்றி காலம் பூராவும் வளர்கிறார்கள்

    “இப்படத்தில் வரும் தந்தை குடும்பத்திற்கு பணத்தை கொடுத்தால் போதும் எந்த பிரச்சனையும் வராது என நினைத்தேன்” என்கிற வார்த்தை மிக முக்கியமானது.

    இறுதியில் கதையின் புரிந்து கொள்ளும் காட்சிகள். பார்வையாளர்களின் மனதில் நிம்மதி தென்படுகிறது.

    அழகான காதல் காட்சி அடுக்குகளோடு பாசம் என்கிற மகத்தான ஒன்றை, ஒரு தாய் சிலந்திவலை போன்ற கோபமான அன்பு வார்த்தைகள் மூலம் தாய்-மகள் உறவை நெருங்கி விலகுவதும் , விலகி நெருங்குவதும் மிக அழகாக கவித்துவமான மொழியில் படைக்கப்பட்டுள்ளது.

    ஏதோ என் மனதில் பட்டதை எழுதிவிட்டேன்.

    தொடர்ந்து உங்கள் குறும்பட விமர்சன பயணம் தொடர என்றேன்றும் என் அன்பு ஆதரவும் வாழ்த்துகளும்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.