பாசி பருப்பு பக்கோடா செய்வது எப்படி?

பாசி பருப்பு பக்கோடா எல்லோரும் விரும்பக் கூடிய சிற்றுண்டி ஆகும். இதனை சுடச்சுட உண்ணும் போது இதனுடைய மணமும் சுவையும் அபாரம்.

இதனை மாலை நேரங்களில் சிற்றுண்டியாக டீயுடன் சுவைக்கலாம். பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கும் இதனைச் செய்து கொடுத்து அசத்தலாம்.

இதனை தயார் செய்ய குறைந்தளவு நேரமே ஆவதால் விருந்தினர் வருகையின் போதும் இதனை செய்து கொடுக்கலாம்.

இனி சுவையான பாசி பருப்பு பக்கோடா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பாசிப் பருப்பு – 2 கப் (150 கிராம்)

பச்சை மிளகாய் – 2 எண்ணம் (பெரியது)

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (நறுக்கினால் 2 கப் அளவுக்கு இருக்குமாறு)

இஞ்சி – 2 இன்ஞ்

வெள்ளைப்பூண்டு – 2 பற்கள் (பெரியது)

கரம் மசாலா பொடி – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை – 2 கொத்து

கறிவேப்பிலை – 2 கீற்று

புதினா இலை – 20 எண்ணம்

உப்பு – தேவையான அளவு

கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை

பாசிப்பருப்பைத் தண்ணீர் விட்டு நன்கு அலசி வடித்துக் கொள்ளவும்.

பின்னர் அதனுடன் பருப்பைப் போல் மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற விடவும்.

ஊறவைத்த பாசி பருப்பு
ஊறவைத்த பாசி பருப்பு

இரண்டு மணி நேரம் கழித்து பருப்பை வடிதட்டில் கொட்டி தண்ணீர் சிறிதும் இல்லாதவாறு ஒட்ட வடித்து விடவும்.

வடிகட்டும் போது
வடிகட்டும் போது

மிக்ஸியில் வடிகட்டிய பருப்பினைச் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த பாசி பருப்பு விழுதுq
அரைத்த பாசி பருப்பு விழுது

பெரிய வெங்காயத்தை மெல்லிதாக இருக்கும்படி நேராக கீறிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி கீறிக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை உருவி அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புதினா இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் கொர கொரப்பாக அரைத்த பாசிப்பருப்பு விழுது, நறுக்கிய பெரிய வெங்காயம், கரம் மசாலா பொடி, உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் சீரகம் சேர்க்கவும்.

பெரிய வெங்காயம், கரம் மசாலா பொடி, உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்ததும்
பெரிய வெங்காயம், கரம் மசாலா பொடி, உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் சீரகம் சேர்த்ததும்

அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை மற்றும் புதினா இலையைச் சேர்க்கவும்.

கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா இலையைச்  சேர்த்ததும்
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை மற்றும் புதினா இலையைச் சேர்த்ததும்

எல்லாவற்றையும் ஒருசேர நன்கு பிசையவும்.

ஒரு சேர கலந்ததும்
ஒரு சேர கலந்ததும்

வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு கடலை எண்ணெய் ஊற்றிக் காய விடவும்.

சிறிது நேரம் கழித்து கலந்து வைத்துள்ள விழுதில் ஒருசிறு பகுதியை எடுத்து காய்ந்த எண்ணெயில் சேர்த்துப் பார்க்கவும். மாவானது எண்ணெயில் இருந்து உடனே மேலெழும்பி வரும். இதுவே சரியான பதம்.

உடனே மாவுக் கலவையில் இருந்து சிறிது மாவினை எடுத்து சிறு துண்டுகளாகப் பிய்த்து காய்ந்த எண்ணெயில் சேர்க்கவும்.

எண்ணெயில் சேர்த்ததும்
எண்ணெயில் சேர்த்ததும்

ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான பாசி பருப்பு பக்கோடா தயார். சூடாக பரிமாறவும்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் விருப்பமான கீரையை பொடியாக நறுக்கி மேற்கூறிய மாவில் சேர்த்து கீரை பக்கோடா தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.