பாண்டி விநாயகர்

பாண்டி விநாயகர் திருப்பாதம்
பணிந்தோர் வாழ்வு பரிம ளிக்கும்
ஆண்டி பழனி அண்ணல் அடிதன்
அன்புடன் பற்றினோர் ஆனந்தம் அடைவார்
வேண்டி வந்தோர்க்கு வேழ முகத்ததார்
வெற்றி வாகையாய் அருள்செய் திடுவார்
நீண்டிய ஆயுள் நிகரிலாப் பெறுவர்
பாண்டி விநாயகர் பதம்பணிந் தோரே!

ஊர்செழிக்க உற்ற உறவு மகிழ
உமையவள் புதல்வன் கணபதி போற்றி
கார்பொழிந்து கண்மாய் நிறைந்து பயிர்கள்
கனிந்து வளர கணேசரே போற்றி
ஏர்பற்றும் ஏழை விவசாயி என்றும்
ஏற்றங் காணயானை முகத்தான் போற்றி
சீர்மிகுந்து சிந்தை உயர்ந்து முகவூர்
சிறப்பு மிக்க ஊராக சிவமகனே போற்றி!

முகவூர் நகரின் கன்னிமூ லைக்கண்
முக்கண்ணர் மூத்த மகன்வீற் றிருந்து
உகந்த விதமாய் ஊருக்கு அன்பாய்
உன்னத அருள்பா லிப்பதால் மக்கள்
சுகந்தனைச் சுற்றோர் சகலரும் பெற்று
சுந்தரச் சுவடுடன் வாழும் நிலைமை
நிகரிலா உயர்வை அகிலத்தில் முகவூர்
நிச்சயமாய் நிலைநிறுத்திப் புகழடைந் திடுமே!

கடமுடா இடியுடன் வருங்கறு மேகமே
கண்ணிமை மூடிடும் நிலைதரும் மின்னலே
தடபுடா வென்றுதான் மழையதும் பொழியுதே
தரணியில் வெள்ளமும் பெருக்கெடுத் தோடுதே
மடமட வென்றுதான் குளங்களும் நிரம்புதே
மனிதரின் மனங்களும் மகிழ்வினில் துள்ளுதே
அடஅடா அஞ்ஞனம் பாண்டிய விநாயாகர்
அருளினால் நம்முக வூர்தனில் நடக்குதே!

பச்சையும் பசுமையும் முகவூரில் நன்று
பல்விதம் பயன்படும் விதத்தில் இன்று
இச்சையில் இயற்கை மின்னி முழங்கி
இனிதே மண்ணுக்கு மழையை வழங்கி
உச்சையில் உழவரை உயர்த்தி வைத்து
உலகத்தில் அவரால் உயிர்கள் உய்த்து
மெச்சும் நிலையில் முகவூரை ஏற்றி
மேன்மை யாக்கிடும் கணேசரே போற்றி!

கருக்கலில் எழுந்துநற் கானகம் கண்டவர்
கடினமாய்க் கணக்கிலா துழைத்திடும் நிலைக்குநான்
உருக்கமாய் வேண்டினேன் உழவருக் காகவே
உரிமையில் பாடினேன் ஊர்முகஞ் செழிக்கவே
சுருக்கயென் வேண்டுதல் நிறைத்தஐங் கரத்தானே
சுப்பிர மணியரின் அண்ணலே மருத்துவ
அறுகினில் அகமகிழ் அடைந்திடும் கரிமுகா
அன்பிலென் நன்றியை ஏற்றருள் புரிகவே!

பூமாலை நானுனக்குப் பூணுவித் தாலும்
புத்தியில் நிறைவு போத வில்லை
ஊண்மாலை நானுனக்கு உடுத்திவிட் டாலும்
உளத்தில் உற்சாகம் ஊற வில்லை
மாமாலை நானுனக்கு மாட்டிவிட் டாலும்
மனது ஒன்றும் மகிழ வில்லை
பாமாலை பழந்தமிழில் உனக்குச் சூட்ட
பாண்டி விநாயகா படுசுகப் பட்டேன்!

முகவூர் சசிராஜா க.சந்திரசேகர்