பால கங்காதர திலகர்

“சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதனை அடைந்தே தீருவேன்” என்று கூறி இந்திய மக்களிடம் சுதந்திர போராட்ட எண்ணத்தை விதைத்தவர் பால கங்காதர திலகர். முதன் முதலில் நாடுதழுவிய இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரிய இவர் இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர்.

திலகர் 1856 ஜுலை 23ல் மகாராஷ்ராவில் உள்ள இரத்தினகிரி என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கங்காதரர் ராமச் சந்திர திலக் மற்றும் பார்வதிபாய் ஆவார். திலகரின் தந்தை ஆசிரியராகப் பணியாற்றினார்.

திலகர் சிறுவயதிலேயே நேர்மையானவராகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் விளங்கினார். தனது தொடக்கக் கல்வியை புனேயில் கற்றார். தனது பதினாறாவது வயதில் சத்திய பாமா என்ற பெண்ணை மணந்தார்.

பள்ளிக் கல்வியை முடித்துப் பின் டெக்கான் கல்லூரியில் சேர்ந்து 1877ல் கணிதத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின் 1879ல் சட்டப் படிப்பை முடித்தார். முதலில் தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றி பின் பத்திரிக்கையாளார் ஆனார்.

ஆங்கிலக் கல்வியானது மாணவர்களை இந்திய பண்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களை முற்றிலும் மாற்றுவதாக கடுமையாக விமர்சித்தார். நல்ல கல்வியே நல்ல மக்களை உருவாக்கும் என்று கூறினார்.

மேலும் இந்தியர்கள் அனைவரும் இந்திய கலாச்சாரம், தேசியக் கொள்கைகள் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணி தக்காண கல்வி சமூகத்தை நிறுவினார். தரமான கல்வியை இந்திய இளைஞர்களுக்கு வழங்குவதே அதனுடைய கொள்கையாகும்.

தக்காண கல்வி சமூகத்திலிருந்து புதிய ஆங்கில மேல்நிலைப் பள்ளியும் பெர்கஸ்ஸான் கல்லூரியும் தோற்றுவிக்கப்பட்டது. திலகர் பெர்கஸ்ஸான் கல்லூரியில் கணிதத்தைப் பயிற்றுவித்தார்.

பின் திலகர் தனது நண்பர்களுடன் இணைந்து கேசரி என்ற மராத்திய பத்திரிக்கையையும், மராட்டா என்ற ஆங்கிலப் பத்திரிக்கையும் தொடங்கினார். இந்த பத்திரிக்கையில் இந்திய மக்களின் துயரங்கள் மற்றும் உண்மைநிலைகள் படங்களாக வெளியிடப்பட்டன.

மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வை ஊட்டும் விதமாக பல கட்டுரைகளை வெளியிட்டார். ஆங்கில அடக்குமுறை மற்றும் சுரண்டல்கள் பற்றியும் எழுதினார். இதனால் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1890ல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். புனே நகர்மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விநாயகர் சதுர்த்தி, சிவாஜி உற்சவம் ஆகிய சமூக விழாக்களின் மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்தி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார்.

பெண் குழந்தைகளின் இளவயது திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதாரித்தார். 1896ல் பிளேக் நோய் பரவியது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் விக்டோரியா மகாராணியின் வைரவிழா கொண்டாட்டத்தில் கவனம் செலுத்திய ஆங்கிலேய அரசைக் கண்டித்து பத்திரிக்கையில் எழுதினார். எனவே ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

1905ல் கர்சன் பிரபு வங்கத்தை இரண்டாகப் பிரித்தார். இதனை எதிர்த்த திலகர் 1907ல் சுதேசி இயக்கத்தை ஆரம்பித்தார். வெளிநாட்டுப் பொருட்களை விட்டுவிட்டு இந்தியாவில் செய்யப்படும் பொருட்களை மட்டும் பயன்படுத்துவது என்பதே சுதேசி இயக்கம் ஆகும்.

தன்வீட்டின் முற்றத்திலேயே சுதேசிப் பொருட்கள் கொண்ட கடையை ஆரம்பித்தார். கிராமம் கிராமமாகச் சென்று சுதேசி பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சென்றார். அப்போது தான் காங்கிரஸ் கட்சி மிதவாதிகள், தீவிரவாதிகள் என பிரிவுகளாகப் பிரிந்தது.

தீவிரவாதிகள் பிரிவில் திலகர் ஈடுபட்டு அந்நிய ஆட்சிக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டார். இதனால் ஆறு வருடங்கள் மாண்டலே என்ற இடத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது கீதா ரகசியம் என்ற நூலை எழுதினார். இந்த நூலை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பயன்படுத்தினார்.

சிறையில் இருந்து வெளிவந்தபின் காங்கிரசின் மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகளை இணைக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின் அன்னிபெசன்ட் அம்மையாருடன் இணைந்து ஹோம்ரூல் இயக்கத்தில் ஈடுபட்டார். சுயராஜ்ஜியம் என்பதே அதனுடைய கொள்கை ஆகும்.

திலகர் ஊர் ஊராகச் சென்று சுயராஜ்ஜியம் பற்றி எடுத்துரைத்து மக்களிடம் சுதந்திர வேட்கையைத் தூண்டினார். மக்களை ஒற்றுமைப் படுத்தி விடுதலை உணர்வினை மக்களிடம் கொண்டு செல்வதையே தலையாய கடமையாகக் கொண்டார்.

மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் எனப் பொருள்படும் லோகமான்யர் என்ற அழைக்கப்பட்ட பால கங்காதர திலகர் 1920 ஆகஸ்டு 1ல் காலமானார்.

இந்திய சுதந்திர வரலாற்றில் முதன் முதலில் மக்களின் செல்வாக்கைப் பெற்ற தலைவர் என்ற பெருமை பெற்ற‌வ‌ர் பால கங்காதர திலகர். அவரின் சீரிய சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மூலம் ஒற்றுமைப்படுத்தி விடுதலை உணர்வை ஏற்படுத்திய திலகரைப் போற்றுவோம்.