பிரதோச வழிபாடு

பிரதோச வழிபாடு என்பது இந்துக்களால் அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்து பதிமூன்றாம் நாள் வரும் திரயோதசி அன்று மாதம் இரு முறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வழிபாட்டின் கதாநாயகன் சிவபெருமான் ஆவார்.

சிவனை வழிபாடு செய்யும் முறைகளில் இவ்வழிபாட்டு முறை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிரதோச காலம் என்பது திரயோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலமாகும்.

பிரதோசம் என்பதை பிர + தோசம் எனப் பிரித்து பாவங்களை போக்க வல்லது என்று பொருள் கொள்ளப்படுகிறது. இவ்வழிபாட்டினை மேற்கொள்வதால் தங்கள் பாவங்கள் நீங்கி மேன்மை அடைவதாக மக்கள் கருதுகின்றனர்.

 

பிரதோச வழிபாடு தோன்றிய முறை

முன்னொரு சமயம் தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக மந்தாகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் வைத்து பாம்பின் தலைப் பக்கம் அசுரர்களும், வால் பக்கம் தேவர்களும் பிடித்து பாற்கடலை கடைந்தனர்.

அப்போது வலி தாங்காமல் வாசுகி பாம்பானது ஆலம் என்னும் விஷத்தைக் கக்கியது. அதே சமயம் பாற்கடலில் இருந்து ஆலம் என்னும் விஷம் தோன்றியது. இவ்விரண்டும் சேர்ந்து ஆலாலம் விஷமாக மாறியது.

அது கண்டு தேவர்கள் அசுரர்கள் மற்றும் ஏனைய உயிரினங்கள் தங்களை இக்கட்டிலிருந்து காப்பாற்றும்படி சிவபெருமானை சரண் அடைந்தனர். சிவனும் உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு தனது அம்சமான சுந்தரரை அனுப்பி ஆலால விஷத்தை எடுத்து வரும்படி பணித்தார்.

சுந்தரரும் விஷத்தின் அருகில் சென்று அதனை உருட்டி சிவனிடத்தில் சேர்த்தார். சிவனும் அதனை விழுங்க முற்பட்டார். விசம் சிவத்தினுள் இறங்கினால் உலக உயிர்கள் அழிந்துவிடும் எனும் எண்ணத்தில் உமையம்மை சிவனின் கண்டத்தைப் பிடித்து விசத்தை உள்ளே இறங்க விடாமல் தடுத்தார்.

சிவனின் கண்டத்தில் இருந்த விசம் அதனை நீல நிறமாக மாற்றியது. இதனால் சிவன் திருநீலகண்டன் ஆனார். பின்னர் உலக உயிர்களுக்காக நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே திருநடனம் புரிந்தார். சுந்தரர் ஆலால விசத்தை எடுத்து வந்து சிவனிடம் தந்து அவர் தனது கண்டத்தில் விசத்தை இருத்திய காலமே பிரதோச காலம் ஆனது.

 

பிரதோச வழிபாட்டு முறை

பிரதோச வழிபாட்டு முறையில் விரதமிருப்பது முக்கியமானது. முதன் முறையாக விரதமிருக்க ஆரம்பிப்பவர் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் வளர்பிறை சனிப் பிரதோசத்திலிருந்து தொடங்கலாம்.

பிரதோசத்தன்று அதிகாலை எழுந்து காலைக் கடன்களை முடித்து, குளிர்ந்த நீரில் குளித்து சிவன் கோவிலிலோ அல்லது வீட்டிலோ வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. பகலில் இறைவன் திருநாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்கின்றனர்.

பகல் முழுவதும் உணவு உண்ணாமலும், சிலர் நீர் அருந்தாமலும் விரதத்தினை மேற்கொள்கின்றனர். பகலில் தூங்குவது தவிர்க்கப்படுகிறது. பின் மாலை பிரதோச வேளையில் சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகளில் கலந்து கொண்டு பின் இரவு வீடு திரும்பி குடும்பத்தினரோடு உணவருந்தி விரதத்தினை முடிக்கின்றனர்.

 

பிரதோச ஆலய வழிபாட்டு முறை:

பிரதோச நேரத்தில் ஆலயத்தில் நடைபெறும் வழிபாட்டின் போது சிவன் மற்றும் நந்திக்கு எண்ணெய், பால், நெய், தயிர், தேன், கரும்புச் சாறு, எலுமிச்சை, அரிசி மாவு, அன்னம் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யப்படுகிறது.

அபிசேகம் செய்யும் பொருட்களால் கிடைக்கும் பலன்கள்

பின் தூய ஆடைகளை அணிவித்து வில்வம் மற்றும் பூக்களால் அர்ச்சித்து தீப தூபங்கள் காண்பிக்கப்படுகிறது. நந்தி தேவரின் கொம்புகளுக்கிடையே சிவனைப் பார்த்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

 

சோம சூக்தப் பிரதட்சணம்

இச்சமய ஆலய வழிபாட்டில் சோம சூக்தப் பிரதட்சண முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதில் முதலில் சிவலிங்கத்தையும் நந்தியம் பெருமானையும் முதலில் வணங்கி அடிப்பிரதட்சிணையாக சண்டிகேஸ்வரர் சன்னதி வரை சென்று அவரை வணங்கி கொண்டு அப்படியே திரும்பி வந்து முன்போல் சிவலிங்கத்தையும் ரிஷபதேவரையும் வணங்கி விட்டு எப்பொழுதும் போல் பிரதட்சிணமாக ஆலயத்தை வலம் வருவது போல் வலம் வந்து சுவாமி அபிசேக தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி அப்பிரதட்சிணமாக சந்நிதிக்கு வந்து சிவலிங்கத்தையும் ரிஷப தேவரையும் வணங்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் அசுவ மேத யாகப் பலன் கிடைப்பதாக கருதப்படுகிறது.

 

சனிமகாப்பிரதோசம்

ஒவ்வொரு நாளும் வருகின்ற பிரதோசத்திற்கு வழிபாடு மேற்கொண்டால் ஒவ்வொரு பலன் கிடைப்பதாக நம்பப்படுகிறது. மற்ற கிழமைகளில் வரும் பிரதோசத்தை விட சனிக் கிழமைகளில் வரும் பிரதோசத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஏனெனில் சிவன் ஆலால விசத்தை தன் கண்டத்தில் இருத்திய நாள் கார்த்திகை மாதம் வளர்பிறை திரயோதசி, சனிக் கிழமை  என நம்பப்படுகிறது. எனவே சனிப் பிரதோச வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சித்திரை, வைகாசி, கார்த்திகை, ஐப்பசி மாதங்களில் வளர்பிறை திரயோதசி மற்றும் சனிக்கிழமையில் வரும் பிரதோசமானது சனி மகாப் பிரதோசம் என்று அழைக்கப்படுகிறது.

பிரதோச வழிபாடு மேற்கொள்வதன் மூலம் வளமான வாழ்வும் இம்மையில் உள்ள பாவங்கள் நீங்கி மோட்சம் என்னும் மறுபிறப்பின்மை கிடைப்பதாக நம்பப்படுகிறது. நாமும் பிரதோச வழிபாட்டினை மேற் கொண்டு நல்நிலையை அடைவோம்.