பிராயச்சித்தம் – சிறுகதை

சரவணன் அலுவலகத்தில் வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு ஸ்வீட் கடையில் தான் ஆர்டர் செய்து வைத்திருந்த கேக் பாக்ஸை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

கணவன் வரும் நேரம் என்பதால் செல்லம்மாள் வீட்டில் பரபரப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

வாசலில் சரவணன் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும், வீட்டிலிருந்து வெளியே கணவன் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு இருவரும் உள்ளே சென்றனர்.

“என்ன செல்லம், ரொம்ப பரபரப்பா வேலை பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது. ஆமாம் முகில் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்துட்டானா?”

“ம்…ம்… வந்துட்டான் அவன் கூட படிக்கிற பிரண்ட்ஸ் வீட்டில் போய் விளையாட சென்றிருக்கிறான்.”

“சரி, சரி. முகிலுக்கு நாளை பிறந்தநாள் என்று தெரியும்ல. அவனுக்கு எடுத்து வச்ச டிரஸ் எல்லாம் காமிச்சிட்டியா?”

“அதெல்லாம் பாத்துட்டான்.” என்று சொல்லிக்கொண்டு கையில் டீயுடன் வந்தாள்.

இருவரும் டீயை குடிக்க ஆரம்பித்தார்கள்.

அன்று இரவு,

“செல்லம் இப்படி உட்காரு. நம்ம புள்ள முகில் வளர்ந்துட்டான்ல”

“ஆமாங்க”

“முகில் இப்பொழுதுதான் பிறந்த மாதிரி தெரியுது. அதுக்குள்ள 11 வயசு ஆகிடுச்சு. ரொம்ப சீக்கிரமா வளர்ந்துட்டான்.”

“அவன கவனிச்சீங்களா? முகில் எப்ப பார்த்தாலும் சோகமாவே இருக்கிறான். அதிகம் பேச மாட்டேங்கிறான்; சிரிக்க மாட்டேங்கிறான். தெருவுல பசங்களோட கூட விளையாட அதிகம் போக மாட்டேங்கிறான்.”

“ம்..ம்… நானும் கவனிச்சேன்”

“இப்படி இருக்குமோ? நானும் ஆபீஸ், ஆபீஸ்ணு போயிடுறேன். நீயும் டீச்சர். முகிலுடன் காலையிலேயே போய்விடுகிறாய். நாம மூணு பேரும் சாயங்காலம் தான் சந்திக்கிறோம். வீட்டுல வேற யாரும் இல்ல அவன் தனியா இருக்கிறத நினைத்து பீல் பண்றானோ?”

“இருந்தாலும் இருக்குமுங்க. நம்ம வீட்டுல அவன் கூட ஓடி விளையாட யாரும் இல்ல. அவன கொஞ்சுறதுக்கோ தூக்கி வச்சு கதை சொல்றதுக்கோ ஒரு தாத்தா பாட்டி கூட இல்ல.”

“அவனிடம் நீயே கேட்டுட வேண்டியதுதானே. ஆம்பள புள்ளைங்க அம்மா மீது தான் பாசமா இருப்பாங்க. நீ கொஞ்சம் பொறுமையா அவன் கிட்ட கேளு. அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியணும். அப்போதான் நாம அவனை பக்குவமா கையாள முடியும்.”

“சரிங்க.”

மறுநாள் காலைப் பொழுது விடிந்தது.

இருவரும் முகிலை எழுப்பி “பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா செல்லம். இன்னைக்கு உங்களுக்கு 11வது பிறந்தநாள். எழுந்து வாங்க. வாங்க. வாங்க.” என்று அவனைக் கொஞ்சினர்.

“சீக்கிரம் அம்மாவுடன் போய் ரெடியாயிட்டு வாங்க. உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் வந்துடுவாங்க. அப்பா கேக் வாங்கிட்டு வந்துட்டேன். கேக் வெட்டி கொண்டாடுவோம்” என்று சொல்லி முகிலை அனுப்பி வைத்துவிட்டு சரவணன் பேப்பர் படிக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் முகிலை பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயார் செய்து கொண்டு வந்தால் செல்லம்மாள்.

முகிலின் டிரஸ் பளபளத்தது. ஆனால் முகத்தில் எந்த களையும் இல்லை சிரிப்பும் இல்லை. ஒரு பொம்மை போலவே இருந்தான்.

“ஏம்பா சோகமாகவே இருக்க? உனக்கு என்ன ஆச்சு? அப்பா கிட்ட சொல்லு. பள்ளிக்கூடத்துல டீச்சர் எதுவும் அடிச்சாங்களா? இல்ல உன்கூட படிக்கிற பிரண்ட்ஸ்கள் எதுவும் சண்டை போட்டாங்களா? ஏன் உம்முன்னு இருக்குற?” என்று சரவணன் கேட்டார்.

முகில் “அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. என் கூட படிக்கிற பிரண்சுக்கு எல்லாம் தங்கச்சி பாப்பா, தம்பி பாப்பா இருக்கிறாங்க. அவங்க கூட விளையாடுறாங்க. தாத்தா, பாட்டி இருக்கிறாங்க. கதை சொல்றாங்க. கதை கேட்டு வளர பிள்ளை தான் நல்ல பிள்ளையா வளருமா? என் ஃபிரண்ட் சொன்னான்.” என்றான்.

செல்லம்மாள் “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லப்பா. நம்ம வீட்டுல நீ நல்ல புள்ளையா தானே இருக்க? தாத்தா பாட்டி இல்லன்னா என்ன? நானும் அப்பாவும் இருக்கிறோம் உனக்கு கதை சொல்லுவோம்.” என்றாள்.

முகில் “அதெல்லாம் ஒன்னும் வேணாம். என்ன தாத்தா பாட்டி இருக்கிற இடத்துக்கு அழைச்சிட்டு போங்க. இம் ..உம் .உம்.” என்று அழுவ ஆரம்பித்தான்.

சரவணனுக்கும் செல்லம்மாவுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை

“சரிடா கண்ணு. சரி, சரி இரு அழைச்சிட்டு போறோம். இங்கே இரு நாங்கள் ரெடி ஆயிட்டு வந்திடுறோம்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றனர்.

சிறிது நேரத்தில் மூவரும் பைக்கில் ஏறி உட்கார, பைக் ஸ்வீட் பாக்ஸுடன் புறப்பட்டது.

முகில் முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தான்.

அப்போது ஒரு ஓரத்தில் வயது முதிர்ந்த தம்பதியினர் உட்கார்ந்து இருக்க, செல்லம்மாள் கேக் துண்டுகளை தட்டில் எடுத்துக்கொண்டு அவர்களிடம் சென்றாள்.

“இந்தாங்கம்மா கேக் சாப்பிடுங்க.”

தம்பதியினர் “எங்களுக்கு அதெல்லாம் வேணாம் தாயி” என்றனர்.

“ஏம்மா சுகர் இருக்குதா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல தாயி. எங்களுக்கு இனிப்பெல்லாம் பிடிக்கிறது இல்ல. இனிப்பான செய்தி கூட கேட்க முடியாமல் போச்சு.”

” ஏன் என்ன ஆச்சு?”

வயதான பெண்மணி சொல்ல ஆரம்பித்தார்.

“எங்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன ரொம்ப செல்லம்மாவும் பாசமாகவும் வளர்த்தோம். படிச்சிட்டு ஆபீஸ்ல வேலை பார்த்துட்டு இருந்தான். அவனுக்கு அவன் விருப்பப்படி கல்யாணமும் பண்ணி வச்சுட்டோம்.

கொஞ்ச காலம் தான் வாழ்ந்து இருப்பான். அவனுக்கு தண்ணி சாப்பிடுற பழக்கம் இருந்ததால் கிட்னி பெயிலியர் ஆகி இறந்துட்டான்.

மருமக என்ன செய்யும் அது குழந்தையை தூக்கிட்டு அவங்க அம்மா வீட்டோட போயிடுச்சு. நாங்க ஆதரவை தேடி இங்கே வந்துட்டோம்.” என்றனர் கண்களில் கண்ணீர் வடிய துடைத்துக் கொண்டு.

அப்போது செல்லம்மாள் “இங்கே இருங்கள்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தாள்.

செல்லம்மாள் தன் கணவரிடம் விஷயத்தை சொல்லி அழைத்து வரவும், காப்பக உரிமையாளர் பார்வையிட்டுக் கொண்டு அங்கே வரவும் சரியாக இருந்தது.

செல்லம்மாள் தம்பதியினரிடம், முகிலை காண்பித்து, “பாசத்திற்காக ஏங்கும் எங்கள் மகனுக்கு நீங்கள் தாத்தா, பாட்டியாக வரவேண்டும். நாங்கள் உங்களை எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம்” என்று கையெடுத்து கும்பிட்டாள்.

தம்பதியினர் இருவரும் காப்பக உரிமையாளரைப் பார்க்க, காப்பாக உரிமையாளர் “அவர்களுக்கு சம்மதம் என்றால் நீங்கள் அழைத்துச் செல்லலாம்” என்றார்.

தம்பதியினர் இருவரும் பின்னே சென்றனர்.

செல்லம்மாள் வீட்டில் இருவருக்கும் பாத பூஜை செய்தாள்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.