பிளாஸ்டிக் மாசுபாடு

பிளாஸ்டிக் மாசுபாடு இன்றைக்கு உலகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மாபெரும் பிரச்சினை.

தெருவோரங்கள், கழிவுநீர் சாக்கடைகள், நீர்நிலைகள், கடல்கள் என எங்கும் வியாபித்திருக்கும் பிளாஸ்டிக் சுற்றுச் சூழலின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் ஏற்படும் மனித முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவை பிளாஸ்டிக் மாசுபாடு அதிகரிக்க முக்கிய காரணிகளாகும்.

பிளாஸ்டிக் மாசுபாடு மிகநுண்ணிய அளவிலிருந்து பெரிய அளவு வரை நிகழ்கிறது.

 

குளத்துத் தண்ணீரில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
குளத்துத் தண்ணீரில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

 

பிளாஸ்டிக் இன்றைக்கு மிகவும் பயனுள்ள பொருளாக உள்ளது. ஆனால் அது கழிவுப் பொருளாக மாறும்போது எளிதில் அழிவதில்லை.

மேலும் அது கழிவுறும்போது நச்சுத்தன்மையை வெளிப்படுத்தி சுற்றுச்சூழலை வெகுவாகப் பாதிப்படையச் செய்கிறது.

பிளாஸ்டிக் நச்சுப் பொருளாகச் செயல்பட்டு நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசடையச் செய்கிறது.

பிளாஸ்டிக் நீர் மற்றும் நில வாழிடங்களில் ஓர் இடத்தில் மொத்தமாக சேகரமாகி அவ்விடத்தின் சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்களுக்கு எதிர்மறையாகச் செயல்பட்டு பெரிய தீங்கினை விளைவிக்கின்றது.

பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்பட காரணங்கள்

அதிகமாக குப்பையாக மாற்றப்படுதல்

 

நான் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் கலந்து உள்ளது. அதாவது சிறுகுழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் முதல் பெரியவர்களின் தண்ணீர் பாட்டில் வரை பிளாஸ்டிக் எல்லாவற்றிலும் இடம் பெற்றிருக்கிறது. எனவே ஏனைய பொருட்களைவிட பிளாஸ்டிக் அதிகமாக குப்பையாக மாற்றப்படுகிறது.

அளவுக்கு அதிகமான பயன்பாடு

பிளாஸ்டிக் மிகவும் மலிவான விலையில் அதிகளவு கிடைக்கிறது. ஆதலால் இன்றைக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. விலை மலிவின் காரணமாக அதிகக் கழிவாகவும் பிளாஸ்டிக் மாற்றப்படுகிறது.

 

 

கழிவு பிளாஸ்டிக் எளிதில் மக்குவதில்லை. எனவே பிளாஸ்டிக் அதிகஅளவு சேகராமாகி சுற்றுசூழலை மாசுபடுத்துகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த முடியாமை

பிளாஸ்டிக் கழிவுகள் எளிதில் மக்குவதில்லை. பிளாஸ்டிக் குப்பைகளை நிலத்தில் போட்டு மூடும்போது பிளாஸ்டிக்கின் நச்சுதன்மை நிலத்தை பாழ்படுத்துகிறது.

நீரில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்வாழிடத்தையும், நீர்வாழ்உயிரிகளையும் பாதிப்படையச் செய்கிறது.

பிளாஸ்டிக்கை எரிக்கும்போது காற்று மண்டலம் மாசடைகிறது. மொத்தத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவது என்பது இன்றைக்குவரை கேள்வி குறியாகவே இருக்கிறது.

பிளாஸ்டிக் மாசுபாட்டின் விளைவுகள்

எளிதில் மக்காத பிளாஸ்டிக் உயிரினங்களுக்கும், சுற்றுசூழலுக்கும் நாளுக்கு நாள் அதிகளவு மாசுபாட்டினை உண்டாக்கி பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டின் முக்கிய நீண்டகால விளைவுகளைப் பார்ப்போம்.

உணவுச்சங்கிலியில் ஏற்படுள்ள பாதிப்பு

சிறியதும் பெரியதுமான பிளாஸ்டிக் உலகின் மிகச்சிறிய உணவுப்பொருளான பிளாங்டனிலிருந்து தனது பாதிப்பினைத் தொடங்குகிறது.

பிளாங்டன் நச்சுப்பொருளினைத் தாங்கிய உணவாக மீனினைச் சென்றடைகிறது. நச்சுப்பொருளைக் கொண்ட மீனினை உணவாகக் கொள்ளும் பறவைகள் முதல் மனிதர்கள் வரை பாதிப்புக்குள்ளாகின்றனர். இவ்வாறாக பிளாஸ்டிக் உணவுச்சங்கிலி முழுவதையும் பாதிப்படையச் செய்கிறது.

நீருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

பிளாஸ்டிக் கழிவுகள் நிலத்தடி நீரில் பெரிய அளவில் பாதிப்பினை உண்டாக்குகிறது. பிளாஸ்டிக் நச்சானது நிலத்தடி நீரில் கலந்து முதலில் அதன் தரத்தினைக் குறைந்து பின் நாளடைவில் அதனை நச்சாக்குகிறது.

 

 

கடல் நீரில் பிளாஸ்டிக் கலந்து கடல் வாழிடத்தையும் கடல் உயிரினங்களையும் வெகுவாக பாதிப்படையச் செய்கிறது. பிளாஸ்டிக்கால் பாதிப்படைந்த கடல் உயிரினங்கள் அதனைச் சார்ந்து வாழும் பிற உயிரினங்களையும் பாதிக்கின்றன.

கடல் நீரில் மிதக்கும் கழிவு நைலான் தூண்டில்களில் ஆமை, டால்பின் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் சிக்கி உயிரிழக்கின்றன.

 

 

நிலமாசுபாடு

 

நிலத்தினுள் பிளாஸ்டிக்கை மூடி விடும்போது பிளாஸ்டிக் நச்சுக்கள் நிலத்தினையும், நிலத்தடி நீரினையும் பாதிப்படையச் செய்கிறது. நிலத்தின் மேற்பரப்பில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் காற்றினால் வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

சேலான எடையினைக் கொண்ட பிளாஸ்டிக் பைகள் குழிகள், மின்கம்பங்கள், தடுப்புக்கம்பிகள் உள்ளிட்ட இடங்களில் மாட்டிக் கொண்டு அவ்விடங்களைக் கடந்து செல்லும் உயிரினங்களுக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன.

காற்று மாசுபாடு

 

பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும்போது பிளாஸ்டிக்கில் உள்ள நச்சானது காற்றில் கலந்து காற்று மாசுபாட்டினை உண்டாக்குகிறது. பிளாஸ்டிக் புகையினை சுவாசிக்கும் உயிரினங்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச நோயால் பெரும் பாதிப்படைகின்றனர்.

பிளாஸ்டிக்கின் நச்சுத்தன்மை

மனிதன் செயற்கையாக தயாரிக்கும் பிளாஸ்டிக் பல்வேறு நச்சுப் பொருட்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே பிளாஸ்டிக்கினை தயார் செய்வது, சேமிப்பது மற்றும் அப்புறப்படுத்துவது ஆகியவை உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

பிளாஸ்டிக் மாசுபாட்டினை தவிர்க்கச் செய்ய வேண்டியவை

நம் அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டினை முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக பொருட்களை வாங்க கடைகளுக்குச் செல்லும்போது பினாஸ்டிக் பைகளைத் தவிர்த்து துணிப்பைகளையும், கொள்கலன்களையும் கொண்டு செல்ல வேண்டும்.

வெளியிடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல பிளாஸ்டிக் பாட்டில்களைத் தவிர்த்து சில்வர் பாட்டில்களைப் பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் பொருட்களை உபயோகிக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே உண்டாக்கி அதன் பயன்பாட்டினைத் தவிர்க்க சொல்ல வேண்டும்.

பிளாஸ்டிக் மாசுபாடு இல்லாத உலகத்தை உருவாக்குவது என்பது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

நமது சிறிய செயல்களின் மூலம் மிகப்பெரிய மாசுபாட்டினைத் தவிர்க்க முடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

பிளாஸ்டிக்கைத் தவிர்த்து ஆரோக்கியமான நிகழ்காலத்தையும் வளமான எதிர்காலத்தையும் பெறுவோம்.

வ.முனீஸ்வரன்

 

 

One Reply to “பிளாஸ்டிக் மாசுபாடு”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.