பீட்ரூட் பொரியல் செய்வது எப்படி?

பீட்ரூட் பொரியல் எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமான தொட்டுக் கறி வகையைச் சார்ந்தது.

பீட்ரூட் இயற்கையிலேயே இனிப்புச் சுவையினைக் கொண்டிருப்பதால் பெரும்பாலோனோர் இதனை சமைக்க யோசிக்கின்றனர்.

இயற்கையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இனி எளிய முறையில் சுவையான பீட்ரூட் பொரியல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – ½ கிலோ கிராம்

பச்சை மிளகாய் – 3 எண்ணம் (பெரியது)

தேங்காய் – ¼ மூடி (பெரியது)

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 4 எண்ணம் (மீடியம் சைஸ்)

கடுகு – ½ ஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

பீட்ரூட் பொரியல் செய்முறை

முதலில் பீட்ரூட் தோலினைச் சீவி சுத்தம் செய்யவும்.

பின் அதனை சிறுசிறு சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

 

சதுரங்களாக்கிய பீட்ரூட்
சதுரங்களாக்கிய பீட்ரூட்

 

பச்சை மிளகாயை அலசி சிறுதுண்டுகளாக வெட்டவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல ஊற்றி காய விடவும்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சதுரமாக்கிய சின்ன வெங்காயம், அலசி உருவிய கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

குக்கரில் சதுரமாக்கிய பீட்ரூட், நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான உப்பு, தாளிதம், இரண்டு குழிக்கரண்டி தண்ணீர் ஆகியவை சேர்த்து ஒரு சேரக் கிளறி குக்கரை மூடி விசில் போடவும்.

 

குக்கரை மூடும் முன்பு
குக்கரை மூடும் முன்பு

 

ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.

விசில் அடங்கியதும் குக்கரைத் திறக்கவும்.

தண்ணீர் இருந்தால் குக்கரை அடுப்பில் வைத்து தண்ணீரை வற்ற வைக்கவும்.

பின்னர் அடுப்பினை அணைத்து விட்டு துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும்.

 

தேங்காயைச் சேர்த்து கிளறியதும்
தேங்காயைச் சேர்த்து கிளறியதும்

 

சுவையான பீட்ரூட் பொரியல் தயார்.

 

சுவையான பீட்ரூட் பொரியல்
சுவையான பீட்ரூட் பொரியல்

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய்க்குப் பதில் மிளகாய் பொடி சேர்த்து பொரியல் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.