பீனிக்ஸின் மிச்சங்கள் – சிறுகதை

தலைக்கு சுயமாக ” டை ” அடிப்பது பெரிய மகாபாரதம். இந்த கருமத்தை விட்டொழிக்க வேண்டும். ஆனால் ஒரு குடிகாரன் போல் இதற்கு அடிமையாகி மறுபடியும் வேஷம் கட்ட ஆரம்பித்து விடுகிறேன். இன்று காலையிலே கலர் போட்டாச்சு.

“உங்களை மணிமேகலை கூப்பிடுது. கூடையை தூக்கி தலையில் வைக்கனுமாம். கொஞ்சம் போயிட்டு வாங்க” என்றாள் மனைவி.

மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. மணிமேகலை தன் பெரிய காய்கறி கூடையுடன் படிகளில் அமர்ந்து இருந்தாள்.

“வா சார், என்ன தலையில சாயம் பூசிருக்கே. இதெல்லாம் போடாத சார். ஏதாவது நோவு வரும்” என்றாள் அவள்.

“ஆமா மணிமேகலை, எல்லாம் தெரிந்தும் நான் அந்த தவறை திரும்ப செய்கிறேன்.”

“இடுப்பை விட்டு

இறங்க மறுத்து

அடம் பிடிக்குது

இளமை எனும் கைக்குழந்தை “ என்ற கவிதையைச் சொன்னேன்.

“ஏதோ சொல்ற சார், எனக்கு எதுவுமே புரிய மாட்டேங்குது” என்றாள்.

ரொம்ப நாளாக மணிமேகலையின் பெரிய, கனமான காய்கறி கூடையை, வியாபாரம் முடிந்தவுடன், அவள் தலையில் ஏற்றி வைக்கும் வேலையை செய்து வருகிறேன்.

மற்றவர்கள் என் உயரத்தை கிண்டல் செய்தாலும் மணிமேகலைக்கு உபயோகமாக உள்ளது.

மழை வேகமெடுத்து விட்டது.

மணிமேகலை “நாலு இடம் போக வேண்டும், இந்த மழை இப்படி இடைஞ்சல் கொடுக்குதே” என்று சபித்து கொண்டிருந்தாள்.

எனக்கு தலையிலே அடிச்ச “டை” காயணுமே என்ற கவலை வந்தது.

மணிமேகலை தலை முடி வெளுத்த மாதிரி தெரியவில்லை.

“உன்னுடைய வயது என்ன மணிமேகலை?”

“49 இல்ல 50 இருக்கும் சார்”

“உனக்கு ஒரு முடி கூட நரைக்கவில்லையா?”

“இல்ல சார், அது கிடக்குது தலைமயிறு தானே சார்” என்றாள்.

“உனக்கு எத்தனை பிள்ளைகள்? உன் கணவர் என்ன செய்கிறார்?”

தயங்கி, தயங்கி தன் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

மணிமேகலை திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சொந்த தாய்மாமனை திருமணம் செய்து கொண்டு ஒரு இளவரசி போல் வாழ்ந்திருக்கிறாள். ஒரு வருட இடைவெளியில் மூன்று பெண் குழந்தைகள்.

கணவன் விபத்தில் இறந்து விடவும், உறவினர்கள் உதவியுடன் மூன்று பெண் பிள்ளைகளையும் ஓரளவுக்கு படிக்க வைத்து, சொத்துக்களை விற்று திருமணம் செய்து கொடுத்தது, தன் மூன்று பெண்களும் தலா ஒரு பெண் குழந்தையை பெற்றது என்று முதல் பாதி கதை ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது.

ஆனால் மருமகன்கள் மூலம் விதி விளையாடி இவள் தலையில் இத்தனை பெரிய கூடையை ஏற்றி விட்டுள்ளது.

மூத்த மருமகன் இறந்து விட, மற்ற இரு மகள்களின் கணவன்கள் டாஸ்மார்க்கே கதியாய் கிடக்க, மூன்று பெண்களும் ஒரு சேர தாய் வீட்டிற்கே கை குழந்தைகளை தூக்கி கொண்டு வந்து விட்டார்கள்.

இருந்த சொத்தும் கல்யாண செலவுக்கு விற்றாகி விட்டது.

கிராமத்தில் ஜீவனம் ரொம்ப கஷ்டமாகி போக, ஒரு குட்டியானையில் மூன்று பெண்கள், மூன்று பேத்திகள் சகிதம் சென்னை பற்றி எந்த விபரமும் தெரியாமல் பிழைக்க வந்த கதை பெருங்கதை.

இவர்களுக்கு யாரும் வீடு வாடகைக்கு தராமல் மறுத்தது, உணவும் உறைவிடமும் இல்லாமல் ஏழு பேரும் மெரினாவில் போய் தற்கொலைக்கு முயன்றது, அங்கிருந்த போலீசார்கள் இவர்களை மீட்டு உதவி செய்து, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வேலை வாங்கி தந்தது, பின்பு எப்படியோ தத்தி தடுமாறி அவர்களாவே இந்த கூடை வியாபாரம் தொடங்கியது.

அம்பத்தூரின் வெளிப்பகுதியில் சிறை போன்ற ஒரு அறையில் 7 பேரும் வசிப்பது, பொது கழிப்பிடம், அதைவிட மோசமாக ஹவுஸ் ஓனர் என சொல்ல முடியாத கஷ்டங்கள்.

இதையெல்லாம் கடந்து பேத்திகளை படிக்க வைக்க வேண்டும். ஊரில் விற்ற இடத்தை திரும்ப வாங்க வேண்டும் என்ற வைராக்கியம் என அவளின் பேச்சு என்னை அசையா பொருளாக்கியது.

மழை சுத்தமாக நின்றுவிட்டது.

“உனக்கு பீனிக்ஸ் பறவை தெரியுமா? மணிமேகலை, அது சாம்பலில் இருந்து மறுபடியும் பிறக்குமாம்.” என்றேன்.

“தெரியாது சார், கொஞ்சம் கூடையை தூக்கிவிடு; நான் கிளம்புறேன்” என்றாள்.

கனமான கூடையை கஷ்டப்பட்டு அவள் தலையில் தூக்கி வைத்தேன். அவள் எந்த சலனமும் இல்லாமல் நடந்து போனாள்.

எனக்கு தலை பாரமாகி, ஒரே வலி எடுத்தது. மனைவியிடம் “தலை பாரமாக வலிக்கிறது, கொஞ்சம் டீ போட்டுத் தா” என்றேன்.

“கண்ட கண்ட ஹேர் டையும் பூசிக்கிட்டா தலைவலி வராம என்ன வரும்? போய் குளிங்க” என கடிந்து கொண்டாள்.

எனக்கு மனசு முழுதும் மணிமேகலை வாழ்க்கை படமாய் விரிந்தது. அவள் கூடை வெறும் காய்கறிகளை கொண்டதல்ல.

அந்த 7 பேரின் வலி, வேதனை, போராட்டம், அவமானம், விடாமுயற்சி, வைராக்கியம் மற்றும் எதிர்கால ஆசைகள் எல்லாம் அதில் நிறைந்து கிடக்கிறது. அதனால்தான் இந்த கனம்.

குளித்த பின்னும், ஏன் இந்த கதையை எழுதும் வரை, எனக்கு தலைபாரம் குறையவில்லை.

பீனிக்ஸ் பறவைகள் மட்டுமல்ல; சாம்பலில் இருந்து மணிமேகலைகளும் உயிர்த்தெழுகிறார்கள்.

முனைவர் க. வீரமணி
சென்னை
9080420849

6 Replies to “பீனிக்ஸின் மிச்சங்கள் – சிறுகதை”

  1. கதை அருமையான பாதையில் சென்று சோகத்தை நனைத்து மனதில் கீறலை ஏற்படுத்திச் சென்றது வாழ்வைப் படம் பிடிக்கத் தெரிந்திருக்கிறது ஆசிரியருக்கு, உணர்வைத் தொட்டுப் பார்க்கும் சுகம் அலாதியானது,
    பிறரின் வருத்தம் தன் வருத்தமாகக் கொண்ட ஆசிரியர் சிறப்பானவர்.

  2. கதாபாத்திரங்களின் வசனங்கள் உரைநடைத் தமிழில் இருக்கிறது
    அதை பேச்சுவழக்கில் கொஞ்சம் சரி செய்தால் நன்று சில இடங்களில் மட்டும்.

    உங்கள் தலைமுடி நரைத்தாலும் இளமை ததும்புது உங்கள் எழுத்தில் தொடரட்டும் தோழர் வாழ்த்துகள்.

    மு தனஞ்செழியன்

  3. இந்த சிறிய கதையில் எவ்வளவு ஆழமாக தன் கருத்தை நிலைநாட்டியுள்ளார். பிரமாதமான நடை மற்றும் பாத்திர தேர்வு. கதையை படிக்கும் போதே மனதில் ஏதோ ஒரு வலி. உங்கள் எழுத்துருக்களுக்கான என் காத்திருப்பு தொடரும்……

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.