புகழ்ச்சோழ நாயனார் – சிவனடியாருக்காக நெருப்பில் இறங்கியவர்

புகழ்ச்சோழ நாயனார் தம்முடைய படைவீரர்களால் அழிக்கப்பட்ட பகையரசர்களின் தலை ஒன்று சடைமுடி தரித்திரிப்பதை கண்டதும், மனம் நொந்து தீயில் புகுந்த சோழ அரசர்.

புகழ்ச்சோழ நாயனார் சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலிருந்து அரசாட்சி செய்து வந்தார். அவர் சிவன் மேல் பெரும் பக்தியும் பேரன்பும் கொண்டவராக விளங்கினார்.

புகழ்ச்சோழர் தம்முடைய படை வலிமையாலும் இறைவனின் திருவருளாலும் பல அரசர்களை வென்று மன்னர்மன்னராக விளங்கினார். இதனால் அவருக்கு வரி செலுத்தும் அரசர்கள் பலர் இருந்தனர்.

அவர் சிவனார் மட்டுமல்லாமல் அவர்தம் அடியவர் மீதும் பேரன்பு கொண்டிருந்தார். இதனால் கோவில்களுக்கு பல திருப்பணிகள் செய்ததோடு, சிவனடியார்களுக்கும் அவர்கள் விரும்பிய‌தைக் கொடுத்து, அவர்களின் குறைகளைப் போக்கி வந்தார்.

அடியவர்களுக்கு விரும்பியவற்றைக் கொடுக்கும் போதும், குறையுடையவர் போல் பணிந்து அவர்களுக்கு அளித்து பெரும் தொண்டாற்றி வந்தார்.

யானையின் உரிமையாளனுக்குத் தண்டனை

ஒருசமயம் அவர் கொங்கு நாடு மற்றும் குடகு நாடு உள்ளிட்ட மேற்கு திசை நாடுகளின் அரசர்களிடமிருந்து வரியைப் பெறுவதற்கு ஏதவாக, கருவூருக்குச் சென்று தங்கினார். கருவூரில் எழுந்தருளியிருக்கும் ஆனிலைப் பெருமானை கண்குளிர வழிபட்டு கருவூரில் தங்கியிருந்தார்.

அப்போது ஒருநாள் சிவகாமியாண்டார் என்னும் பழம்பெரும் சிவபக்தர், ஆனிலைப் பெருமானை வழிபடுவதற்காக, காலையில் தோட்டத்திலிருந்து பூக்களை எடுத்துக் கொண்டு கோவிலின் வீதியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவ்வீதியில் வந்து கொண்டிருந்த புகழ்ச்சோழ நாயனாரின் பட்டத்து யானை சிவகாமியாண்டாரின் பூக்கூடையைப் பறித்தது.

அதனால் இறைவனுக்கு அணிவிக்க இருந்த பூக்கள் எல்லாம் தரையில் சிந்தின. அதனைக் கண்டதும் சிவகாமியாண்டார் காத்தருளும்படி இறைவனாரை வேண்டினார்.

சிவகாமியாண்டாரின் பெருங்குரலைக் கேட்டதும் அங்கு வந்த எறிபத்த நாயனார் என்னும் சிவனடியார், தம்முடைய கையில் வைத்திருந்த மழுவினால் யானையையும் அதனுடைய பாகன்களையும் வெட்டி வீழ்த்தினார்.

பட்டத்து யானை மடிந்த செய்தியை அறிந்ததும் புகழ்ச்சோழ நாயானார் அவ்விடத்திற்கு விரைந்தார்.

நடந்தவைகளைக் கேட்டதும் “சிவதொண்டருக்கு அபச்சாரம் விளைவித்த யானைக்கு தண்டனை அளித்ததை விட, அதனுடைய உரிமையாளனான என்னை வீழ்த்துவதே சிறந்தது” என்று கூறி தன்னுடைய வாளை எறிபத்தரிடம் நீட்டினார்.

‘தாம் வாளைப் பெறவில்லை எனில் சிவனடியாரான புகழ்ச்சோழர் தன்னை மாய்த்துக் கொள்ளக்கூடும்’ என்றெண்ணிய எறிபத்தர், வாளை வாங்கி தன்னை மாய்த்துக் கொள்ள முற்பட்டார். புகழ்ச்சோழர் அவரைத் தடுத்தார்.

அப்போது இறையருளால் யானையும் பாகன்களும் உயிர் பெற்றெழுந்தனர். சிவகாமியாண்டாரின் மலர்க் கூடையும் முன்பிருந்ததுபோல் பூக்களால் நிரம்பியது.

“இரு அடியவர்களின் பக்தியை உலகிற்கு உணர்த்தவே இவ்வாறு நடைபெற்றததாக” இறைவனார் அசரீரி வடிவில் தெரிவித்தார்.

இவ்வாறு இறையடியாருக்கு துன்பம் ஏதும் ஏற்படாமல் புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டு வந்தார்.

இனி எப்படி ஆள்வேன்?

ஒரு சமயம் மலைநாட்டு மன்னனான அதிகன் என்பவன் புகழ்ச்சோழ நாயனாருக்கு வரி செலுத்தவில்லை. இதனை அமைச்சர்கள் வாயிலாக அறிந்த புகழ்ச்சோழர் அதிகனின் மீது பெரும் படைகளைக் கொண்டு போர் தொடுக்கச் சொன்னார்.

சோழப் படையும் அதிகனின் படையும் பலமாக மோதிக் கொண்டன. இறுதியில் அதிகன் போரில் தோற்று புறமுதுகிட்டு ஓடினான்.

சோழ தளபதிகள் அதிகனின் நாட்டிலிருந்து பொன், பொருள், குதிரை, யானை ஆகியவற்றோடு தங்களால் அழிக்கப்பட்ட எதிரிகளின் தலைகளையும் சேகரித்துக் கொண்டு வந்து மன்னர் முன்னால் சமர்ப்பித்தனர்.

எல்லாவற்றையும் பார்வையிட்ட புகழ்ச்சோழ நாயனார், கொல்லப்பட்ட‌ எதிரிகளின் தலைகளில் ஒன்றில் சடைமுடியும் திருவெண்ணீறும் இருப்பதைக் கண்டு கண்கலங்கினார்.

அத்தலையை கைகள் இரண்டையும் கூப்பி வணங்கினார். “நான் பெரும்படையைப் போக்கி, இந்த உலகில் சைவநெறியைக் பாதுகாத்து அரசாட்சி செய்யும் முறை ரொம்பவும் அழகாகயிருக்கிறது.” என்று சொல்லி கலங்கினார்.

“இந்தத் திருமுடியிலே சடை தாங்கும் இவர் சடாதாரியாகிய இறைவனின் அடியாராகத்தான் இருக்க முடியும். இத்தகையவருடைய தலையைக் கொண்டு வர, நான் என் கண்ணாலே பார்த்தும் இனி இந்த உலகத்தை எப்படி ஆள்வேன்? என் ஆட்சியில் சிவனடியாரைக் கொலை செய்த பாவம் அன்றோ வந்து சூழ்ந்து விட்டது?” என்று புலம்பினார்.

“அரசாட்சி செய்யும் தகுதியை இழந்து விட்டேன். இனி இறைவனுடைய தொண்டு நெறியில் நின்று வழுவின்றி நாட்டை ஆளும்படி என்னுடைய மகனுக்கு முடிசூட்டுங்கள்” என்று அமைச்சர்களை நோக்கிக் கூறினார்.

அரசர் கூறியதைக் கேட்ட அமைச்சர்கள் கலங்கினர்.

“இனி நான் உயிர் வாழ்வது முறையன்று. தீயில் குளித்து என்னுடைய களங்கத்தைப் போக்கிக் கொள்வேன். இறைவனுக்குச் செய்யும் அபராதத்தை விட, அடியவர்களுக்குச் செய்யும் அபராதத்துக்கு தண்டனை இதுவே.” என்று கூறி தீயை வளர்க்கச் செய்தார்.

சிவனடியாரின் தலையை பொற்தட்டில் கிடத்தி தலைமேல் அத்தட்டைச் சுமந்து கொண்டு அக்கினியை வலம் வந்தார். பின்னர் அத்தட்டுடன் அக்கினிக்குள் புகுந்தார்.

சிவனார் தம்முடைய திருவடி நிழலில் புகழ்ச்சோழ நாயனாருக்கு நீங்காத இடத்தைக் கொடுத்தருளினார்.

அழிக்கப்பட்ட பகையரசனின் தலையில் சடைமுடியைக் கண்டு மனமுடைந்து தீயில் புகுந்த புகழ்ச்சோழ நாயனாரை, சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்‘ என்று புகழ்கிறார்.

புகழ்ச்சோழ நாயனார் குருபூஜை ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.