புதிய கல்விச் சூழல் – ஒரு பார்வை

கொரோனாவிற்குப் பிந்தைய புதிய கல்விச் சூழல் எப்படி இருக்க வேண்டும்?

கொரோனா  என்ற கொள்ளைநோய் மக்களின்  இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது.

இந்த கொரோனாவோடு  வாழப் பழகுவது எப்படி என்பது பற்றி இன்றைய மனித சமுதாயம் சிந்தித்துக் கொண்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் மாணவர்களை குறித்தான பெற்றோர்களின் கவலை, வரும் காலங்களில் கல்வி நிலையங்கள் செயல்படுத்தப் போகும் சூழலை குறித்ததாக உள்ளது.

வருங்காலங்களில் கல்வி நிலையங்களில் இந்தப் பெருந்தொற்று  நோயிலிருந்து மாணவர்களும் குழந்தைகளும் காக்கப்பட வேண்டும்.

 

நமது மழலை பள்ளிகளில்  மிக நீண்ட காலமாக  குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுவதற்காக சொல்லிக் கொடுக்கும் பாடல் ஒன்று உண்டு.

“ரிங்கா ரிங்கா ரோசஸ்

பாக்கட் இன் தி போசிஸ்”

இந்தப் பாடல் பிறந்தது பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில்.

ரோஜாப் பூக்களை மகிழ்வோடு சூடுவதை பாடியும், நோயை குணமாக்கும் மூலிகை கொத்துகளை எங்கள் பையில் வைத்திருந்தும் எங்களுக்கு எந்த பலனும் இல்லை; நாங்கள் வீழ்கிறோம் என்ற அர்த்தத்தில் குழந்தைகள் பாடுவதாக அந்த பாடல் வரிகள் முடியும்.

அந்த பாடலின்   வரலாற்று அர்த்தத்தை நாம்  யாரும் குழந்தைகளுக்கு சொல்லித் தருவது இல்லை. ஆனால் பரவலாக இந்த பாடல் விளையாட்டு பாடலாக சொல்லித் தரப்படுகிறது.

 

கொள்ளை நோயினால் கல்வியின் மீதான தாக்கம்

ஒட்டுமொத்த உலகையும் கொரோனா அளவுக்கு பாதித்த தொற்று நோய் வேறில்லை என்றாலும், மனிதகுலம்  பல்வேறு காலகட்டத்தில் பலவித தொற்று நோய்களை சந்தித்துள்ளது.

மனிதர்களிடையே பரவக் கூடிய நோயானது, மனிதர்கள் வேட்டையாடிய காலம் முதல்  இன்றைய நவீன காலம் வரையிலும் தொடர்கிறது; அது இனிமேலும் தொடரும்.

நகர வாழ்க்கையின் துவக்கம், மனிதர்கள் நெருங்கிப் பழகும் சூழுல், இயற்கை மற்றும் சுற்றுசூழலியலின் தாக்கம் ஆகியவை தொற்று நோய்களுக்கு காரணமாகஉள்ளன.

அண்மைக் காலத்தில் அச்சுறுத்திய சார்ஸ், எபோலா வைரஸ்,  கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் உலகை உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சல்  உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களை மனிதகுலம் சந்தித்துள்ளது.

குறிப்பாக பிளேக் நோயும் இரண்டாம் உலகப் போரும் ஐரோப்பிய கல்விமுறைகளில்  அதிக மாற்றத்தை உருவாக்கின.

அதேபோல் இன்றும் கொரோனா தொற்று உலக அளாவிய அளவில் கல்வித்துறை மீது பல மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது.

காரணம் இது வரையிருந்த கொள்ளை நோய்க் கிருமிகளை விட கொரோனா வைரஸ் என்பது வீரியமானதாகும்.

 

உலக சுகாதார நிறுவனத்தின் நம்பிக்கை

கொரோனா நோய் தொற்று பரவியவுடன், உலக சுகாதார நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் உலக சுகாதாரத்தின் அவசரநிலையாக பிரகடனம் செய்தது.

கடந்த மார்ச் மாதம் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே ரியான், கொரோனா வைரஸ் பரவலை தடுத்து சமாளிக்கும் மிகப்பெரிய திறன் இந்தியாவுக்கு உள்ளது என்றார்.

ஏனெனில் சின்னம்மை மற்றும் போலியோ ஆகிய இரண்டு தொற்று நோய்களை ஒழித்த அனுபவம் இந்தியாவிற்கு உள்ளது. அந்த அனுபவம் உலகிற்கே வழிகாட்டும் என  குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் உலக சுகாதார நிறுவனமானது தனிமனித இடைவெளி, சுற்றுபுற தூய்மை, மற்றும் பரிசோதனைகளை மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியா போன்ற நாடுகள் பின்பற்ற வேண்டும் என்றது.

மேலும் அது கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர்களுக்கும் சில வழிகாட்டு முறைகளையும் அறிவித்தது.

அதன்படி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே  தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள வேண்டும்.

மாணவர்களும், குழந்தைகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அறிந்து கொள்கின்ற விதமாக, அறிவு சார்ந்த சமூகம் அவர்களுக்கான அறிவியல் ரீதியான செய்திகளை கொண்டு செல்ல வேண்டும்.

 

இதுவரை நமது கல்விமுறை

பண்டைக் காலங்களில் மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து பழகியும், பேச்சு வழக்கிலும், கதைகளைச் சொல்லியும் கேட்டும் அறிவை வளர்த்துக் கொண்டனர்.

பின்னாளில் மணல் பரப்பில்  எழுதுதல், ஓலைச்சுவடிகளில் எழுதி படித்தல், கரும்பலகை உதவியுடன் கற்பித்தல் மற்றும் அச்சு ஊடகம் எனக் கல்வி பல பரிமாணங்களாக வளர்க்கப்பட்டது.

இந்த நூற்றாண்டில் நவீன தகவல் தொழில் நுட்பங்கள், காட்சி வழிக் கல்வி, செவி வழிக் கல்வி, செயல் வழிக் கல்வி, என பல புதிய பரிமாணங்களுக்கு நமது மாணவர்களை இட்டுச்  சென்றிருக்கின்றது.

உலகத்தின் மாறுதல் வேகமாக நிகழ்கிறது.

புதிய சவால்களும் நம்மை சூழ்கின்றன.

கல்வியும் கல்வி சார்ந்த அறிவியலும் மாணவர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும்  தேவை என்ற அவசர‌ நிலையை இன்றைய கொரோனா காலச் சூழல் உருவாகியுள்ளது.

 

கொரோனாவின் சவால்கள்

கொரோனா நோய் தொற்றின் பல்வேறு உலகலாவிய ஆய்வுகள் அனைத்தும், 2022ஆம் ஆண்டு வரை தனி மனித இடைவெளியும் சுகாதாரமும் மிகவும் அவசியம் என வலியுறுத்துகிறது.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தனிமனித இடைவெளியில் கல்வி கற்பது குறித்து, புதிய வழிமுறைகளை ஆராய வேண்டிய காலச்சூழலில்  இன்றைய சமுதாயம் உள்ளது.

குளிர்சாதன வகுப்பறை, பேருந்து,  நூலகம் போன்ற வசதி கொண்ட‌  தனியார் கல்வி நிலையங்களாலும், சுத்தமான வகுப்பறை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத‌ அரசு கல்வி நிலையங்களாலும் சூழப்பட்டது தான் நமது இந்திய  நாடு.

அடைக்கப்பட்ட வகுப்பறை மற்றும் கழிப்பறைகள், விளையாட்டு திடல், நூலகங்கள் மற்றும்  நூலகங்களை  பராமரிக்கும் முறை, அதை மாணவர்கள் கையாளும் முறை, தேர்வு அறைகள், சமூக இடைவெளியுடன் தேர்வு எழுதும் முறை, தேர்வு தாள்களை ஆசிரியர் சமுதாயம் அச்சமற்று திருத்துவது என  அனைத்தும் சவால்கள் நிறைந்ததாகவே உள்ளது.

இன்றைய வகுப்பறைகளின் பழைய நிலைமையிலேயே  பள்ளி மாணவர்கள் அமர வைக்கப்படக் கூடாது.

தொழில்நுட்பம் மூலம் கற்பிக்கும் முறைகளை மாற்ற வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

 

ரவீந்திரநாத் தாகூர் கனவு

இந்தியாவில் புதிய கல்விச்சூழலுக்காக கனவு கண்டவர் ரவீந்திரநாத் தாகூர்.

1878 இல் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து சென்றார் தாகூர். அதன் பின்பு பல்வேறு நாடுகளுக்கும் சென்று,  பல நாட்டு கல்வி சூழல் பற்றி ஆழமாக  ஆய்வுகள் மேற்கொண்டார்.

அதன் மூலம் அவர் இறுதியாக மரபு வழிக் கல்வியையும் இயற்கை சார்ந்த கல்வியையும்  மிகவும் விரும்பினார்.

அதன்படி இயற்கை சூழலில் அமையப் பெற்ற பள்ளி வேண்டும்;

மாணவர்கள் கல்வி கற்க வருவதை மகிழ்ச்சியான செயலாக கருத வேண்டும்;

தண்டனை இல்லாத செயல் வழிக் கல்வியை இயற்கை சூழலோடு  தனித்துவமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சிந்தித்தார்.

அந்த சிந்தனையின்  விளைவுதான் “சாந்தி நிகேதன்” கல்வி நிலையம்.

நான்கு சுவருக்குள் மாணவர்களை அடைத்து பாடம் கற்பிப்பதை விட, திறந்த வெளியில் கற்றுத்தருவது மாணவர்களுக்கு இனிமையான அனுபவமாக இருக்கும் என தாகூர் கருதினார்.

மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு மூலம் அவர்கள் திறமையை மதிப்பிடுவதை விடுத்து, அதிலிருந்து மாறுபட்டு மாணவர்கள் அறிவிற் சிறந்த ஆளுமைகளாக மாறுவதற்கு, இயற்கை சார்ந்த மரபு வழிக் கல்வியையும், புதிய செயல் திட்டங்களையும்  செயல்படுத்தினார்.

அந்த சாந்தி நிககேதனில்   கல்வி பயின்ற மாணவர்கள் தான் முன்னாள் பிரதமர்  திருமதி இந்திரா காந்தி, திரைப்பட இயக்குனர் சத்யஜித்ரே, சமூக சேவகி காயத்ரிதேவி மற்றும் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் ஆகியோர் .

திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே மூன்றாண்டுகள் சாந்தி நிகேதனில் படித்த காலம் தனது வாழ்நாளில் வசந்தகாலம் என்று அடிக்கடி  குறிப்பிட்டுள்ளார்.

தாகூரின் இயற்கை வழிக் கல்வி என்பது இன்றைய காலத்தால் உற்று நோக்கப் படுவதாக உள்ளது .

 

கற்றல் முறைகள் மாற்றம்

உலக அளவில் இன்றைய கொரோனா நோய்ச் சூழலின்  அச்சத்தால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பல‌ கல்வி நிலையங்கள் இணையம் மூலம்,  பல தொடர்பு செயலிகள் உதவியுடன் காணொளிக் கல்வி வடிவில் பாடங்கள் நடத்துகின்றன.

காணொளி வகுப்பறைகள் இன்று பல தரப்பு கல்வி நிலையங்களிலும் உருவாக்கப்பட்டு விட்டன. அதற்கு ஆசிரியர் மற்றும் மாணவர் சமுதாயம் தயாராகி விட்டது.

இந்தியாவில் இத்தகைய கல்வி முறையை நாம் அவசர காலத்திற்கு பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம்.  ஆனால் சர்வதேச கல்வியாளர்கள் இத்தகைய காணொளி கல்வி தான் உலகின் எதிர்காலம் என்கின்றனர்.

இத்தகைய கற்பித்தலின் மூலம் ஆசிரியர்கள் நேரடியாக வகுப்புகளை எடுக்கலாம்; வீட்டுப்பாடம், தனி குறிப்புகள் என அனைத்து பாடத்திட்டங்களையும் வழங்கலாம்.

அத்துடன் மட்டுமல்லாது  மாணவர்களின் சந்தேகங்களையும் இதன் மூலம் கேட்டுப் பெற முடியும்.

வகுப்பறைகளில்  கூச்ச சுபாவத்தின் காரணமாக கேள்விகள் கேட்க இயலாத மாணவர்கள் தனிப்பட்ட முறையில் கேள்விகளை கேட்கலாம்.

அதே போல் ஆசிரியரும் மாணவர்களுக்கான தரத்தை சுட்டி காட்டி பாராட்டுவது மிக எளிது.

சில மேலை நாடுகளில்  தேர்வு எழுதுவது முற்றிலும் நவீன தொழில்நுட்பத்தின்  “டிஜிட்டல்”முறையினை கொண்டு கையாளப்படுகிறது.

இது போன்ற  கற்பித்தலுக்கும், தேர்வுகளுக்கும்  ஏற்கனவே இணைய வழியாக சில  செயலிகள் இருந்தாலும், அவற்றின் மீதான சர்ச்சைகளும் அவற்றின் மீதான நம்பகத் தன்மையும் கேள்விக்குறியாக உள்ளது.

இது தொடர்பாக நமது மத்திய அரசினுடைய உள்துறை அமைச்சகம், சைபர் ஒருங்கிணைப்பு மையத்தின் வழிகாட்டுதலின்படி, சில செயலிகள் பாதுகாப்பு அற்றவை என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இனி வருங்காலங்களில் பெரும்பங்கு வகிக்கப் போகும் காணொளி கற்பித்தலுக்காக புதிய செயலிகளையும் புதிய கணினி மென்பொருள்களையும்  உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய அரசும்  சமூகமும் உள்ளது. இதன் மூலம் கற்பித்தலை எளிமைப்படுத்த வேண்டும்.

அப்படி நாம் உருவாக்கும்  செயலிகளும் மென்பொருட்களும், பாடத் திட்டங்களின் அனைத்து அம்சங்களையும், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பகிர்ந்து கொள்ளத் தகுந்ததாக இருக்க வேண்டும்.

அவர்களது சுயவிவரங்கள் தொடர்பான பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்காத வகையில் அமைய வேண்டும்.

நவீனத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டாலும், இயற்கை சூழல் சார்ந்த கற்பித்தலையும், கற்பித்தலில் ஒரு பகுதியாக நாம் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

 

புதிய கல்விச் சூழல்

இனி  கொரோனா பெருந்தொற்றிலிருந்து  மாணவ  சமுதாயத்தை காக்கும் புதிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

அதற்கு பெற்றோர்களும், ஆசிரிய சமுதாயமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

சமூக இடைவெளியோடு இயற்கைச் சூழலில் சுகாதாரத்துடனான,  திறந்தவெளி கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும்.

அனைத்து நகர, கிராமப்புற கல்வி நிலையங்களிலும்,  இணைய வழிக் கல்வியை சில குறிப்பிட்ட கால அளவுகளில் நடைமுறைபடுத்த வேண்டும்.

இதன்  மூலமும்  ஷிப்ட் முறையில், மாணவர்கள் எண்ணிக்கையை குறைத்து பாடங்கள் நடத்தப்பட வேண்டும்.

கல்வியின் ஒருபகுதி  விளையாட்டு. ஆதலால் தனிமனித இடைவெளியினை கடைபிடிக்கும் விளையாட்டுகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே உள்ள வெளியரங்க விளையாட்டுகளில், நிபுணர் குழுவின் கருத்துக்களின்படி புதிய விதிகளை நடைமுறை படுத்த வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு  கையுறைகளை கட்டாயப்படுத்த வேண்டும்.

தினமும் பள்ளிக்கு வரும்  மாணவர்களின் உடல் வெப்பத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோனா தொடர்பான உலக நிகழ்வுகளையும், அறிவியல் பூர்வமான கருத்துகளையும் மாணவர்களிடம் பகிர வேண்டும்.

இயற்கை சார்ந்த அமைப்புடனும், நவீன தொழில்நுட்டபத்தின் உதவியுடனும், புதிய கல்விச் சூழல் தொடர்பான புதிய கருத்தியலை நாம் உருவாக்கிட வேண்டும் .

அதன் மூலம் கல்வி நிலையம் மற்றும் கற்பித்தலில் புதிய மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

நிச்சயம் கொரோனா காலத்திற்கு பின்பு வரும் புதிய கல்விச் சூழல்  வலிமையான ஆசிரியர்களையும் மாணவர்களையும் உருவாக்கும் என நம்புவோம். கொரோனா எனும் பெருந்தொற்றை வெல்வோம்.

முனைவர் ஜி.சத்தியபாலன்
உதவி பேராசிரியர்
மருந்தியல் கல்லூரி
மதுரை மருத்துவ கல்லூரி

 

One Reply to “புதிய கல்விச் சூழல் – ஒரு பார்வை”

  1. அருமையான பார்வை அய்யா..மேலும் online or direct display education மாணவர்களின் கண்களை கெடுத்துவிடும்.பெரும்பாலான மாணவர்களை தேவையில்லாத தளங்களுக்கு செல்ல தூண்டுகிறது..மீண்டும் திறந்தவெளி கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது முற்றிலும் உண்மையான தகவல். நன்றி.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.