புதிர் கணக்கு ‍‍‍- 19

“இப்பொழுது அடுத்த புதிருக்குச் செல்வோம்” என்று கூறிய மந்திரியார் தொடர்ந்தார்.

முயல் முத்தன் வீட்டில் நடந்த ஒரு கதையை கூறுகிறேன். முயல் முத்தனுக்கு மூன்று குழந்தைகள் இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அவனும் அவன் மனைவியும் அவர்களது தோட்டத்தில் கேரட் பயிரிட்டனர். அவற்றை பறித்து மொத்தமாக வைத்திருந்தனர். அதனைக் கண்ட மூத்த மகன் ஒரு கேரட்டை தின்று கொண்டு இருக்கும் போது அங்கு வந்த முத்தன்
“ஒன்றை தின்று விட்டாயா? சரி, மீதி உள்ளதில் ஏழில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டு மீதியை உன் தம்பிகளிடமும் தந்து உன்னைப்போல எடுக்கச் சொல்” என்று கூறி சென்றது.

முதல் மகனும் இருப்பதை ஏழாக பங்கிட்டு ஒரு பங்கை எடுத்துக் கொண்டு தன் தம்பியான இரண்டாவது மகனிடம் கொடுத்து விஷயம் கூறி விட்டு சென்றுவிட்டது.

இரண்டாவது மகன் இரண்டை தின்றுவிட்டு மீதி இருப்பதை ஏழு பங்காக்கி ஒரு பங்கை தான் எடுத்துக் கொண்டு மீதி இருப்பதை தன் தம்பியான மூன்றாமவனிடம் தந்துவிட்டு விபரம் கூறிவிட்டு சென்றது.

மூன்றாவது மகனும் தம் பங்கிற்கு மூன்று கேரட்டுகளை தின்றுவிட்டு மீதி இருப்பதை ஏழு பங்காக பிரித்து தான் ஒரு பங்கு எடுத்துக்கொண்டு தன் தந்தையிடம் சேர்பித்தது.

முயல் முத்தனும் நான்கு கேரட்டுகளை தின்று விட்டு மீதி இருப்பவற்றை ஏழு பங்காக்கி ஒரு பங்கை எடுத்துக் கொண்டு தன் மனைவியிடம் தந்தது.

முத்தனின் மனைவியும் தன் பங்கிற்கு ஐந்து கேரட்டுகளை தின்றுவிட்டு மீதி இருப்பதை ஏழு பங்காக்கி ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கும் போதே நானும் அவர்கள் வீட்டிற்குச் சென்றுவிட மீதி இருந்தவற்றை எனக்கு தந்து விட்டனர்.

ஆனால் இறுதியில் கணக்கு பார்த்த பின்புதான் தெரிந்தது. நான் உட்பட அனைவருமே சமமான அளவிலே தான் கேரட்டுகளை பங்கிட்டு கொண்டோம் என்றால் மொத்த கேரட்டுகள் எத்தனை? என்று நரியார் கேள்விக்கணையைத் தொடுத்து அமர்ந்து விட்டார்.

சிறிது நேரத்தில் எழுந்த எலிக்கண்ணன் ஒரு விடையை கூறியது. அதனைத் தொடர்ந்து சின்ன நரி சீனியப்பனும் ஒரு விடையை கூறியது.

“வேறு யாராவது தெரிந்தவர்கள் இருக்கின்றார்களா?” என்று கேட்ட பின் சீனியப்பனிடமும் எலிக்கண்ணனிடமும் தனித்தனியே விளக்கம் கேட்ட பின் மந்திரியார் பேசலானார்.

“இருவர் கூறிய விடைகளுமே ஒன்றுதான் பாராட்டுக்கள்” என்று கூறவும் அனைவரும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.

“இதற்கான விடையை நரியும் எலியும் சரியாக கூறினார்கள்” என்று அறிவிப்பை கேட்டதும் எலியே எழுந்து சென்றது.
மேடையில் எலிக் கண்ணன் பேச ஆரம்பித்தது.

“அன்புள்ள ஐயா, இந்த புதிரில் கேரட்டுகளை கணக்காக்கி ஒரு புதுமையான கணக்கினை மந்திரியார் கூறினார். அங்கு அனைவரும் சமமாக பொருளை பெற்றனர் என அறியப்பட்டது. அதன் விளக்கத்தை கூறுகின்றேன்.

கடைசியில் இருந்தது 6 எனில்,

மனைவி தின்றது 5, எடுத்துக் கொண்டது 1 ஆகும்.

முயல் முத்தன் தின்றது 4, எடுத்தது 2 ஆகும்.

3வது மகன் தின்றது 3, எடுத்தது 3 ஆகும்.

2வது மகன் தின்றது 2, எடுத்தது 4 ஆகும்.

முதல் மகன் தின்றது 1, எடுத்தது 5 ஆகும்.

மொத்தம் 36 வருவதா அறிந்தேன். அதன் படியே, நான் விடையை கூற அதுவும் கணக்கின் நிபந்தனைகுட்பட்டு சரியாக இருந்தது” என்றது.

இவ்வாறு எலிக்கண்ணன்  பத்தொன்பதாவது புதிருக்கான விளக்கத்தை அளித்துவிட்டு சென்றது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.