புதிர் கணக்கு – 07

“சரி அனைவரும் கவனமாகக் கேளுங்கள். நான் இன்றைய ஏழாவது புதிரை இப்பொழுது சொல்லப் போகிறேன்.” என்று கூறிய மந்திரியார் புதிரைக் கூறலானார்.

“ஒரு சமயம் நம் காட்டில் வாழ்ந்த கிளி கீதக்காவும், மைனா மச்சேந்திரனும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த கொட்டைகளை தனித்தனியாக கட்டி வைக்க எண்ணினார்.

இருவரும் சேர்த்து ஆயிரம் கொட்டைகளைச் சேர்த்து வைத்திருந்தனர். அவற்றை பத்து பைகளில் மட்டுமே கட்டி வைத்திருந்தனர். ஆனால் எவ்வளவு கொட்டைகள் ஒவ்வொரு பைகளிலும் போட்டுக் கட்டினர் என்பது தெரியாது.

ஆனால் ஆயிரம் வரை எவ்வளவு கொட்டைகள் கேட்டாலும் பைகளை அவிழ்காமலேயே தூக்கிக் கொடுத்தனர். அப்படியானால் அவர்கள் ஒவ்வொரு பைகளிலும் போட்ட கொட்டைகள் எவ்வளவு? என்பதே இன்றைய புதிர்” என கூறிய விட்டு மந்திரியார் அரண்மனையினுள் சென்று விட்டார்.

 

பின்னர் அனைவரும் பேசிக் கொண்டே கலைந்தனர். சின்ன நரி சீனியப்பனும், காக்கை சின்னக் காளி மட்டுமே அங்கு நின்று கொண்டிருந்தனர்.

“என்ன நரியண்ணா இன்றுதான் முதல் பதிலைக் கூறினீர்கள். நல்ல புத்திசாலியானவருக்கு மகனாக பிறந்தும் உங்களால் கூட பதில் கூற இயலவில்லை. ஆனால் சாதாரணமான எலிப்பயல் எலிக்கண்ணன் பதில் கூறி பாராட்டு பெறுகின்றானே. இதை நினைத்தால்தான் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது” என்றது சின்னக்காளி

“ஆமாம் காக்கை தம்பி இந்த சின்னப்பயல் எலி பதில் கூற நாம் எல்லாம் கெட்ட பெயர் வாங்க வேண்டியுள்ளது.” என்றது சீனியப்பன்.

“அந்தப் பயலுக்கு யாரோ விடையை சொல்லித் தராங்கன்னு நினைக்கிறேன்” என்றது சின்ன காளி.

“அப்ப நீ அவனுக்கு தெரியாம பின்னால் போயி அவன் எங்க போறான் என்ன செய்யிரான்னு பாரு. யாராவது சொல்லிக் கொடுத்தா அத நம்ம மகாராசாகிட்ட சொல்லி மறுபடியும் புதுசா புதிர் போடச் சொல்லலாம்” என்று கூறியது சின்ன றரி சீனியப்பன்.

“அதுவும் சரிதான் அந்த எலிப்பயலை நான் போயி நோட்டம் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு விர்ரென பறந்தது சின்னக் காக்கை சின்னக்காளி.

எலிகண்ணனின் பின்னாலேயே மெதுவாக பறந்து சென்று கொண்டிருந்த காக்கையை கண்ட பருந்து பஞ்சமன் அதுவும் காக்கை தன்னை அறியாதவாறு அவர்கள் பின்னாலேயே சென்றது. சிறிது தூரம் மூவரும் சென்றனர்.

எலிக்கண்ணன் தனது வாழிடம் வந்ததும் வளையினுள் நுழைந்து கொண்டது. காக்கை சின்ன காளியும் அருகிலிருந்த மரக்கிளையில் அமர்ந்து எலி வளையை நோட்டமிட்டது.

“என்ன சின்னக்காளி இவ்வளவு தூரம்” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டது சின்னக்காளி.

“ஹி ஹி சும்மாதான் இப்படியே காத்து வாங்க வந்தேன்” என்று மழுப்பிய சின்னக்காளியை கண்ட பருந்து “சரி சரி காத்து வாங்குனது போதும். நம்ம இடத்துக்குப் போகலாம்” என்றழைக்க தவிர்க்க இயலாத நிலையில் காக்கை சின்னக்காளியும் பருந்துடன் தனது இருப்பிடம் நோக்கிப் பறந்தது.

மனதிற்குள் பருந்து பஞ்சமனை திட்டிக் கொண்டே பறந்தது காகம். சின்னக்காளியின் மரத்தில் அதனை விட்டுவிட்டு பின்பு தனது மரத்தை அடைந்தது பருந்து பஞ்சமன்.

மறுநாள் மாலைப் பொழுது வந்தது. அனைத்து மிருகங்களும் கூடின. மந்திரி நரியாரும் வழக்கமான தனது ஆசனத்தில் அமர்ந்தார். அரண்மனையிலிருந்து கொண்டு வந்த சுண்டல் ரெடியாக இருந்தது.

“சரி சரி நேற்றைய ஏழாவது புதிருக்கான விடையைக் கூறிய பின்பு அனைவரும் சுண்டல் தின்னலாம். விடையைத் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்” என்றார் நரியார்.

யாரும் பதில் சொல்லாது இருக்க சிறிது நேரங்கழித்து எழுந்த எலிக்கண்ணன் விடையைக் கூறியது. பிற விலங்குகள் அனைத்து விலங்குகளும் எலிக்கண்ணன் கூறிய பதிலை கேட்டு வியப்புடன் அதன் முகத்தைப் பார்த்தவாறு அமைதியாக இருந்தன.

“எலிக்கண்ணன் கூறிய ஏழாவது புதிருக்கான விடை மிகவும் சரியானதே. எனவே அவருக்க பத்து மதிப்பெண்கள் தரப்படுகின்றன. இதோடு சேர்த்து முப்பது மதிப்பெண்கள் பெற்று எலிக்கண்ணன் முதலிடத்தில் உள்ளார்.” என்று அறிவித்தார்.

அனைவரும் கை தட்டி எலிக்கண்ணனைப் பாராட்டினர். சின்னக்காக்கை சின்னக்காளியும், சின்னநரி சீனியப்பனும் கைதட்டாமல் அமைதியாக இருந்தார்கள்.

இவர்கள் இருவரின் செயல்பாடுகளையும் மந்திரி நரியார் கவனித்துக் கொண்டார். “அனைவருக்கும் சுண்டல் கொடுங்கள்” என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டதும் அனைவரும் சுண்டலைப் பெற்று தின்;னத் தொடங்கினர்.

சீனியப்பனும், சின்னக்காளியும் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து சுண்டலைத் தின்றவாறே பேசிக் கொண்டிருந்தனர். அதையும் கவனித்த மந்திரியார் சேவகனாhன கழுதை காங்கேயனின் காதில் ஏதோ கூறியது. அதைக் கேட்ட கழுதை காங்கேயன் அரண்மனையினுள் சென்று மறைந்தது.

“ஏழாவது புதிருக்கான விடையை எலிக்கண்ணன் மிகச் சரியாகக் கூறினான். “வாருங்கள் எலியாரே” என்று வெட்டுக்கிளி அழைக்கவும் மேடை ஏறிய எலி பேச ஆரம்பித்தது.

“ஐயா 10 மூட்டைகளில் 1000 கொட்டைகளை போட்டு எப்படிக் கேட்டாலும் மூட்டைகளைப் பிரிக்காமல் தர வேண்டும் என்று கூறப்பட்டது.

1வது மூட்டையில் 1 கொட்டையும், 2வது மூட்டையில் 2 கொட்டைகளையும், 3வது மூட்டையில் 4 அல்லது 3 என்றும், 4வது மூட்டையில் 8 அல்லது 7 என்றும், 5வது மூட்டையில் 16 அல்லது 14 என்றும், 6வது மூட்டையில் 32 அல்லது 28 என்றும், 7வது மூட்டையில் 64 அல்லது 56 என்றும், 8வது மூட்டையில் 128 அல்லது 112 என்றும், 9வது மூட்டையில் 256 அல்லது 244 என்றும், 10வது மூட்டையில் 439 அல்லது 533 என்றும் கட்டி வைத்தால் மேற்கண்ட நிபந்தனையின்படி மூட்டைகளுடனே எடுத்துக் கொடுக்கலாம் என்று அறிந்து அதையே விடையாகக் கூறினேன்.” என்றது எலிக்கண்ணன்.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)